Sunday, July 26, 2009

இன அடிப்படையில் எம்மவர்களின் ஆட்சி அதிகாரத்தில் 25 பிரதேசத்தில் இயங்க வேண்டும்.

இலங்கையில் பரவலாக வாழும் மக்களை அரச சேவைகள் இலகுவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாகாணசபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன. இந்த சபைகளின் சிறப்பான பணிகளின் பொருட்டு கடந்த வாரம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மாகாண சபைகள் உள்ளுராட்சி வாரம் நுவரெலியா பிரதேச சபை ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கொட்டகலை ஸ்ரீP முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரன் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் அமைச்சர் பெ. சந்திரசேகரன் பேசுகையில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கிலேயே மாகாண சபைகள், பிரதேச சபைகள் உருவாக்கம் பெற்றன.
மலையக மக்களின் விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது குறைந்த பட்சம் 25 பிரதேச சபைகள் எம்மவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும். எனினும் தற்போது அம்பகமுவ பிரதேசசபை, நுவரெலியா பிரதேச சபை என்பனவே எம்மவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நிலைமையினை மாற்றியமைக்கக் கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவர உள்ளேன். நுவரெலியா பிரதேசசபையை பொறுத்தவரையில் குடாஓயா, கொட்டகலை, நானுஓயா, அம்பேவல என்று அதன் எல்லைகள் பரந்து இருந்த போதும் இப் பிரதேச சபைக்கு கிடைக்கின்ற வருமானம் மிகக் குறைவாகும். இருந்தபோதும் முன்னேற்றகரமான செயல் திட்டங்களை வகுத்து செயல்படும் பிரதேச சபை தலைவரின் பணிகள் பாராட்டத்தக்கது.

Friday, July 24, 2009

இளைஞர்கள் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்

மலையக இளைஞர்கள் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். தோட்ட தொழிலை மட்டும் நம்பியிருந்த காலம் மாறி இன்று சுயதொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இவ்வாறு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மூலமாக தனது அமைச்சினால் "நவசக்தி' சுயதொழில் நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்கல் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சியினை கண்டி குருதெனியவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கல்வி வள நிலையத்தில் ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும் நவசக்தித் திட்டமானது சுயதொழில் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தொழில் பயிற்சி, ஆலோசனை வழங்குவதுடன் மக்கள் வங்கி மூலம் கடன் பெற்றுத் தரப்படும். இது வட்டியில்லாக் கடனாகவே இளைஞர்களுக்கு வழங்கப்படுவதோடு வங்கி வட்டியினை அமைச்சே செலுத்தவுள்ளது. இந்திய உயர் மட்டக்குழு மூலமாக பயிற்சியும் வழங்கப்பட்டு தொழில் அபிவிருத்திப் பற்றி மேற்பார்வை செய்யப்படவுள்ளது. வருமானம் பெறும் வழி, வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் முறை, இடையூறுகள், பிரச்சினைகள் பற்றி தொடர்ந்தும் மேலான்மை செய்யப்படும். கடனை மூன்று மாதத்திற்குப்பின்னரே செலுத்த தொடங்க வேண்டும். இக் காலப்பகுதிக்குள் ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது சித்தியடைபவர்களுக்கே இக்கடன் உதவி வழங்கப்படும். எனவே இந்த மூன்று நாள் பயிற்சியினை ஒழுங்கான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தொழிலாளரின் சம்பள உயர்வை முடக்கும் சில தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை சாதகமாக்கிக் கொண்ட சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் அவற்றை முடக்கி வைத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் பண்டாரவளை குருக்குடி டிவிசனில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் உலக நாடுகளில் வாழும் நமது இந்திய வம்சாவளியினர் குறிப்பாக மலேசியா, பிஜித்தீவு, மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் வாழுபவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தம்மை மாற்றி தமது தொழிற்துறை மற்றும் பொருளாதார பாதையிலும் புதிய வடிவங்களுடன் தன்னிறைவு அடைந்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெருந்தோட்டத்துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வேலைக்குச் சென்றால் தான் வேதனம் என்ற வேதனைக்குரிய சம்பிரதாயம் தொடருகின்றது. இதை மாற்றியமைக்க மலையகத்திற்கு மாற்றம் தேவையென்ற தொனிப் பொருளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காங்கிரஸ் எதிர்கால நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

Wednesday, July 22, 2009

மலையக இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் வடிவேல் சுரேஷ்

யுத்தம் முடிவடைந்துள்ள இவ்வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்,யுவதிகளை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட மக்களையும் கிராமிய மக்களையும் இணைக்கும் வகையிலான வேலைத்திட்டம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்வுகளுடனே ஆரம்பமாகியுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் நோக்கமே அரசின் இலவச சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்களும் பெறவேண்டுமென்பதற்கேயாகும்.
அரசின் அந்நோக்கம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கின்றது. தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கவேண்டுமென்ற எனது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்ததையடுத்தே திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.
இரண்டரை வருடங்களுக்குள் 50மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முதற்கட்டமாக அரசினால் பொறுப்பேற்று அவ்வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் புனரமைப்பு பணிகளுக்கென பெருந்தொகை நிதியினையும் வழங்கப்பட்டுள்ளது..கோடிக்கணக்கான ரூபா செலவில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட வீதிகள் அமைத்தலும் ஏற்கனவே இருந்த வீதிகளை புனரமைத்தலுமான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றிற்கும் கணினித் தொகுதிகளையும் ஆலயங்களுக்கான உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது என்றார்
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் 2008க்கான வருடாந்த தேயிலை மதிப்பீடு

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தேயிலை தரகுத் துறைசார்ந்த துணை நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனம், அண்மையில் அதன் 2008ம் ஆண்டுக்கான தேயிலை மதிப்பீட்டை வெளி யிட்டுள்ளது.அதன் முதற்பிரதியானது தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெற்றியாச்சியிடம் வழங்கப்பட்டது.
தேயிலை துறையின் மீது பூகோள பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் அதேவேளை, அது மேற்கு, நுவரெலியா, ஊவா, சி.டி.சி. லோ குரொன், டஸ்ட் மற்றும் பிற தரங்களுக்கான தேயிலைச் சந்தைகள் மற்றும் உலகளாவிய உள்ளுர் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பற்றியும் இவ்வறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது.
இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் தேயிலையின் விலை யில் முன்னெப்போதுமில்லாத விலைத் தளம்பல் ஏற்பட்டிருந்தது. கென்யா போன்ற பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளில் தேயிலை வழங்கலில் ஏற்பட்ட கட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் தேயிலை விலை வரலாறு காணாத உயரங்களைத் தொட்டது.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு ஏலத்தில் கேள்விகோருநர் இல்லாமையினால் பெருமளவான தேயிலை விற்பனை நடைபெறவில்லை. தேயிலை தொழிற் றுறையில் ஒரு நம்பகமற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. அது வழங்கற் சங்கிலி முழுவதும் ஒரு பண ஓட்டத்தில் நெருக்கடியைத் தோற்று வித்தது. விற்கப்படாத தேயிலையின் வீதமானது தேயிலை சபையின் அனுசரணையால் குறைக்கப்பட்ட அதேவேளை, உற்பத்தியாளருக்கு தேவையாக இருந்த பணஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2008ல் உலக தேயிலை உற்பத்தி 3.7 பில்லியன் கிலோ. இது 2007 ஐ விட 12 மில்லியன் கிலோக்கள் குறைவு. கென்யா தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இறக்கம், அதாவது முதல் ஆண்டைவிட 24 மில்லியன் கிலோக்கள் குறைவாக இருந்தது.
மாறாக சீனாவும் இலங்கையும் முறையே 20 மில்லியன் கிலோ மற்றும் 14 மில்லியன் கிலோ தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்திருந்தன. இந்தியாவில் 36 மில்லியன் கிலோக்களை அதிகமாக உற்பத்தி செய்திருந்தது.

2008ல் இலங்கையின் தேயிலை உற்பத்தி உச்சத்தை 318.7 மில்லியன் கிலோவைத் தொட்டது. 2005 ல் உற்பத்தியான 317.2 மில்லியன் கிலோவை விட இது அதிகம். அதாவது 2007 ஐ விட 4.6 வீதம் அதிகம். கடந்தாண்டு மதிப்பீட்டின்படி ஹைகுரோன் உற்பத்தி 16 வீதம் அதிகமாகவும் மீடியம் குரோன் 10 வீதம் குறைவாகவும், லோ குரோன் 4 வீதம் உயர்வாகவும் அமைந்திருந்தது.
உலக ஏற்றுமதியானது முந்திய வருடத்தின் 71 மில்லியன் கிலோவைவிட இவ்வாண்டு 1.6 மில்லியன் கிலோவாக அமைந்தது. 2007 ஆண்டைவிட 11.6 வீதம் அதிகமாக 383.4 மில்லியன் கிலோவுடன் கென்யா மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டது.
இலங்கை இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கியது. 2008ல் இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்றவை ஏற்றுமதியில் ஏற்றத்தை காட்டிய அதே வேளை, ஆஜன்டினா, உகன்டா, தன்சானியா, மாலாவி போன்றவை ஏற்றுமதியில் இறக்கத் தைக் கண்டிருந்தன.
இலங்கையின் 2008க்கான தேயிலை ஏற்றுமதி 319.3 மில்லியன் கிலோவை விட அதில் 299.2 மில்லியன் கிலோவைவிட தேறிய ஏற்றுமதியாக இருந்தது. இலங்கைத் தேயிலைக் கான பிரதான ஏற்றுமதி மையங்கள் எனும் நிலையை ரஷ்யா, ஈரான், சிரியா, மற்றும் துருக்கி என்பன தக்க வைத்துக்கொண்டன. ஏற்றுமதி வருமானமும் 2007 ஆண்டுக்கான 113.5 பில்லியன் ரூபாவைவிட 2008ல் 137.5 பில்லியன்களாக அமைந்திருந்தது

Sunday, July 19, 2009

போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் பெருந்தோட்டங்கள் கவனிக்குமா இ.தொ.கா.?


பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும் தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


கம நெகும, மக நெகும திட்டங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பாதை கள் கொங்கிரீட் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகிறது. வெள்ளைக்கார துரைமாரின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததைவிட மிகவும் மோசமான நிலையில் பிரதான வீதிகள் காணப்படுகின்றன.


இன்றைய நவீன யுகத்தில் மலையக மைந்தர்கள் இலக்குகளுக்காக இடைவிடாது குரல்கொடுத்து வருகின்ற போதிலும் வீதிப் புனரமைப்பும், வாகன போக்குவரத்து வசதிகளும் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.


குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் செறிவான தொழிலாளர்களை உள்ளடக்கிய தல வாக்கலை நகரை அண்மித்த தோட்டப் பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இரவு நேரங்களில் மனித நடமாட்டத்திற்கு ஏற்றதாக வீதிகள் இல்லை.


குன்றும் குழியுமாக காட்சி தரும் இந்த வீதிகளில்தான் தினமும் மக்கள் பயணிக்கின்றனர்.


தோட்டங்களுக்கும் நகரத்திற்குமிடையே சாதாரணமாக 5 கி. மீற்றரிலிருந்து 15 கி. மீற்றர் வரையான தூர த்தை நடந்தே கடக்க வேண்டியிருக்கிறது. இடை நிலை, உயர்தர மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்வதானால் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் புறப்பட்டே ஆக வேண்டும். சற்று தாமதமானால் கூட பாடசாலைக்குச் செல்ல முடியாது போய்விடும்.


காலை முதல் மாலை வரை தேயிலை மலை முகடுகளில் மண்டியிட்டுக் கிடந்து, கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் கால்நடையாகவே நகரங்களுக்கு செல்கின்றனர்.


நாளொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வாறான வீதிகளைப் பயன்படுத்துகின்றனர். வீதிகள் குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.


இவ்வாறான வீதிகளில் வாகனங்கள் சேவையில் ஈடுபடுவது மிகவும் குறைவு. தோட்டப் பகுதிக்கு பஸ் போக்குவரத்துகள் இடம்பெறுவதில்லை என்றே கூறவேண்டும். கிராமப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது தோட்டப் பகுதிகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் காணப்படுகிறது.


தோட்டத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளர் தமது ஊழியர் சேமலாப நிதியில் ஒரு வாகனத்தை மிகவும் குறைந்த விலையில் அவ்வாகனம் வீதியில் நகர்ந்து சென்றாலே போதும் என்ற நிலையில் தான் காணப்படும்.அவ்வாறான வாகனங்களே தோட்டப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடு கின்றன. பழைய வாகனங்களே மக்களை ஏற்றி இறக்கும் பணியை கனக்கச்சிதமாக செய்து வரு கின்றன.


ஓரிரு வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன.சேவை மனப்பான்மையில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எந்தளவுக்கு பணத்தை வசூலிக்க முடியுமோ அந்தளவிற்கு சாதித்துவிடுவர்.


இரண்டு வாகனங்கள் அந்த வீதியில் சேவையில் ஈடுபடுமாயின் அவர்களுக்குள் போட்டா போட்டிகள் வேறு. ஒரு வாகனத்தில் செல்லும் ஒரு மாணவன் அந்த வாகனம் பழுதடைந்து விட்டால் வேறு வாகனத்தில் ஏற்றாத சம்பவ ங்களும் நடந்திருக்கின்றன.


இந்நிலையில் வாகனங்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட அந்த மாணவர்கள் அதிகமாக மழைபெய்யும் நாட்களில் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போவதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர். தோட்ட வீதிகளில் செல்லும் வாகனங்களில் சாதாரணமாக 12 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. எனினும் வாகனச் சொந்த க்காரர்கள் அவர் களால் முடிந்தள விற்கு ஆட்களை ஏற்றி மூச்சுகூட வெளியில் விட முடியாமல் நகர்ந்து நகர்ந்து செல்லும், போக்குவரத்துக்கென பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணமானது மூன்று மடங்கு அதிகரித்த நிலையே காணப்படுகிறது.


தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது கஷ்டப்படும் இந்த மக்கள் கட்டண அதிகரிப்பு காரணமாக தமது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் ஒரு மூடையாகக் கட்டி அதனைத் தலையில் சுமந்துகொண்டு கால் நடையாகவே வீடுகளுக்குத் திரும்புவதுண்டு


இவர்களின் நிலைமை இவ்வாறிருக்க பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு வரையே கற்பிக்கப்படுகின்றது.


ஒரு சில பாட சாலைகளில் மட்டுமே சாதாரண தரம் வரை கற் பிக்கப்படுகிறது. உயர்தர பாடசாலைகள் நகர்ப் புறப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த அசௌகரியமான சூழலை எதிர்நோக்குகின்றனர்.


சில பெற்றோர் தோட்டப் பாடசாலையில் ஆசிரியர்கள் சரிவர கற்பிப் பதில்லை எனக்கூறி நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர்.


இச் சிறார்கள் தமது சக்திக்கும் பலத்திற்கும் அப்பாற்பட்டு புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பல மைல் தூரம் நடந்தே பாடசாலைக்குச் செல்கின் றனர். பாடசாலை செல்வதற்கிடையில் களைத்துப் போகும் இச்சிறார்கள் உரியமுறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாதுள்ளது.


பள்ளிச் சிறார்கள் தினமும் மழையிலும் குளிரிலும் நடந்து செல்வதைப் பார்க்கும் போது பரிதாபமாக இரு க்கிறது. மண் சரிவு, இடி, மின்னல் போன்ற இயற்கை அனர்த்த சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கும் இச்சிறார்களின் கல்வியையும் எதிர்கால இலட்சியத்தையும் பாதுகாப்பதற்கு மலையக அரசியல் தலைமைகள் முன்வரவேண்டியது அவசியமாகும்.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக பல மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே கல்வியை இடைநிறுத்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதையும், தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் சேர்ந்து விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோர் தமக்கான வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கால்நடையாகவே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.


ஆபத்தான நிலையில் இருக்கும் தொழிலாளர்களை தோட்ட வாகனங்களுக்காக காத்திருந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கிடை யில் உயிரிழந்த சம்பவங்களும் தோட்டப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களை ட்ரக்டரில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்தான் எத்தனை பேர்.
இந்நிலை மாற வேண்டும். தேயிலை தோட்டத்திலேயே காலாகாலமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் தொழிலாளர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.


மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் 1திர்காலத்தில் மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளினது நிலைமைகள் கேள்விக் குறியாகிவிடும்.


சந்ததி சந்ததியாக தேயிலைத் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே சமாதியாகிப் போகின்ற மலையக மக்களினது போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டியது எம் தலைவர்களினதும் கட்டாய கடமையாகும்.


தோட்டத்திற்கும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இடையிலான வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் நடத்தும்படி தொழிலாளர்கள் கோருகி ன்றனர். சாராயத் தவறணைகளை திறப்பதற்கு பதிலாக மக்கள் நலனுக்கான பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் இந்த போக்குவரத்துத் துறையும் ஒன்று. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.


தோட்டப் பகுதி மக்களின் நலன் கருதி இ. தொ. கா. பஸ் சேவைகளை நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்ப டும் இச்சேவையை ஒரு கட்டமைப்பின் கீழ் எதிர்காலத்தில் சிறந்த போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய ஒரு ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத தோட்டங்களில் இப் போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய சக்தியும் பலமும் இ. தொ. காவிற்கே இருக்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதுபோல மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வாறான பஸ் போக்குவரத்து சேவைகளை நடத்தும்படி தோட்ட மக்கள் வேண்டுகின்றனர். இவ்விடயத்தில் அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகள் எதனையும் பார்க்காமல் கூடிய விரைவில் பஸ் சேவைகளை நடத்த இ. தொ. கா. ஆவன செய்ய வேண்டும்.


டி. உமாதேவி

பேராதனைப் பல்கலைக்கழகம்

Wednesday, July 15, 2009

தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சினைகள்

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்கு மேலதிகமாக தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இவ்வாறு தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கு தோட்டங்களில் சில விதி முறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. 1975 இல் தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத் தலைவராக ரஞ்சன் விஜேரத்னா இருந்த போதே சகல தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடொன்று காணப்பட்டது.



இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தோட்டத் துரையோடு இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். இணக்கப்பாட்டின் முடிவில் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு தோட்டத் துரையின் அனுமதியோடு தற்காலிக கொட்டிலை நிர்மாணித்துக் கொள்ள முடியுமாகவிருந்தது.




தோட்டத்துரையின் அனுமதியின்றி கொட்டில் ஒன்றை நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில் அல்லது தோட்டத்தில் காலியாக இருந்த லயன் அறைகளில் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தோட்டங்களிலிருந்து அநேகமானவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதுண்டு. சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை எனவும் இவர் தான் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் லயன் காம்பிறாவை தோட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கையளிக்கும் வரை அவர்pன் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் அனுமதியின்றி நிர்மாணித்த தற்காலிக கொட்டிலை உடைத்து அகற்றும் வரை இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் நிர்வாகத்தின் வாதமாக இருக்கும்.



எனவே வேலை நீக்கம் அல்ல ( No termination) இது ஒரு வேலை இடைநிறுத்தமே (Suspension from work) எனவே தொழில் பிணக்கு சட்டத்தின் 31(ஆ) பிரிவின் படி தொழிலாளிக்கு இம் மனுவை இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமை இல்லை என்றும் இம் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொழில் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதும் நிர்வாகத்தின் வாதமாகும்.



சில சமயங்களில் தொழிலாளியின் சார்பில் வாதிடும் சட்டத்தரணி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதியின் சாமர்த்தியத்தால் சில வழக்குகளில் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தோட்டத்துரையை சந்தித்து பேசி அவர் இந்த காம்பிறாவை சம்பந்தப்பட்டவருக்கு தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்றும் அல்லது தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொள்ளும் முன்பு தோட்ட சின்னத்துரையிடம் சொல்லிவிட்டுதான் இதனை செய்தார் என்றும் சாட்சிகளை நெறிப்படுத்தி அவ்வாறான சாட்சிகளில் தொழிலாளிக்கு ஏற்படும் சாதகமான பலாபலன்களை ஆதாரமாக வைத்து இது ஒரு ஊகித்தறிந்த வேலை நீக்கமே (Constructive termination) என்றும் இது நிர்வாகத்தின் நியாயமற்ற செயல் என்றும் விவாதித்து வழக்குகளை வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் பலவற்றில் இது வேலை நீக்கம் அல்லது (Not termination) தோட்டத்துரையின் சட்ட ரீதியிலான கட்டளையை (Lawful Orders) நிறைவேற்றும் வரை தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளார்.(Suspension from work) என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




எனவே தொழிலாளி ஒருவரின் பிரச்சினை முன்னெடுக்கப்படும் பொழுது அது அவரது அது அவரது சட்ட ரீதியிலான உரிமையை நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையா அல்லது யதார்த்தமான சூழ்நிலைகள் காரணமாக தோன்றிய மனிதாபிமான ரீதியில் அணுகக்கூடிய பிரச்சினைகள் என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன.




தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வசதியின்மை காரணமாகவும் அவர்களுக்கென்று குளியலறைகள் தனியாக இல்லாத காரணங்களினாலும் தங்களின் வீடுகளுக்கு முன் வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவசர அவசரமாக குளிப்பது வழக்கம். வீட்டிலுள்ள வயது வந்த பெண் பிள்ளைகளுக்குக்கூட மறைவாக நின்று குளிக்க முடியாதுள்ளதே என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் தங்களின் மரக்கறி தோட்டங்களிலோ வீட்டுக்குப் பக்கத்திலோ தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்து கொள்வது வழக்கம்.




தொழிலாளிக்கும் தொழில் கொள்வோருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொழில் நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நாகரிகமான காலத்திலும் கூட இளம் பெண்கள் திறந்த வெளியில் நின் குளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இந்த வசதிகளை செய்து கொடுப்பது தொழில் கொள்வோரின் கடமையும் பொறுப்புமாகும். இவ்வாறான வசதிகள் நிர்வாகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல என்று அப்பீல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




(ஆதாரம் Bagawathy VS SLSPC-CA 47 87)) நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிமைகள் மற்றும் மனிதாபிமான காரணங்களை ஆதாரங்களாக வைத்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளும் உண்டு.


எஸ். இராமநாதன்


மாத்தனை