மலையக இளைஞர்கள் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். தோட்ட தொழிலை மட்டும் நம்பியிருந்த காலம் மாறி இன்று சுயதொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இவ்வாறு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மூலமாக தனது அமைச்சினால் "நவசக்தி' சுயதொழில் நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்கல் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சியினை கண்டி குருதெனியவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கல்வி வள நிலையத்தில் ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும் நவசக்தித் திட்டமானது சுயதொழில் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தொழில் பயிற்சி, ஆலோசனை வழங்குவதுடன் மக்கள் வங்கி மூலம் கடன் பெற்றுத் தரப்படும். இது வட்டியில்லாக் கடனாகவே இளைஞர்களுக்கு வழங்கப்படுவதோடு வங்கி வட்டியினை அமைச்சே செலுத்தவுள்ளது. இந்திய உயர் மட்டக்குழு மூலமாக பயிற்சியும் வழங்கப்பட்டு தொழில் அபிவிருத்திப் பற்றி மேற்பார்வை செய்யப்படவுள்ளது. வருமானம் பெறும் வழி, வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளும் முறை, இடையூறுகள், பிரச்சினைகள் பற்றி தொடர்ந்தும் மேலான்மை செய்யப்படும். கடனை மூன்று மாதத்திற்குப்பின்னரே செலுத்த தொடங்க வேண்டும். இக் காலப்பகுதிக்குள் ஒரு நிலையான வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது சித்தியடைபவர்களுக்கே இக்கடன் உதவி வழங்கப்படும். எனவே இந்த மூன்று நாள் பயிற்சியினை ஒழுங்கான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment