Wednesday, July 15, 2009

தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சினைகள்

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்கு மேலதிகமாக தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இவ்வாறு தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கு தோட்டங்களில் சில விதி முறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. 1975 இல் தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத் தலைவராக ரஞ்சன் விஜேரத்னா இருந்த போதே சகல தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடொன்று காணப்பட்டது.



இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தோட்டத் துரையோடு இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். இணக்கப்பாட்டின் முடிவில் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு தோட்டத் துரையின் அனுமதியோடு தற்காலிக கொட்டிலை நிர்மாணித்துக் கொள்ள முடியுமாகவிருந்தது.




தோட்டத்துரையின் அனுமதியின்றி கொட்டில் ஒன்றை நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில் அல்லது தோட்டத்தில் காலியாக இருந்த லயன் அறைகளில் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தோட்டங்களிலிருந்து அநேகமானவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதுண்டு. சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை எனவும் இவர் தான் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் லயன் காம்பிறாவை தோட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கையளிக்கும் வரை அவர்pன் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் அனுமதியின்றி நிர்மாணித்த தற்காலிக கொட்டிலை உடைத்து அகற்றும் வரை இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் நிர்வாகத்தின் வாதமாக இருக்கும்.



எனவே வேலை நீக்கம் அல்ல ( No termination) இது ஒரு வேலை இடைநிறுத்தமே (Suspension from work) எனவே தொழில் பிணக்கு சட்டத்தின் 31(ஆ) பிரிவின் படி தொழிலாளிக்கு இம் மனுவை இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமை இல்லை என்றும் இம் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொழில் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதும் நிர்வாகத்தின் வாதமாகும்.



சில சமயங்களில் தொழிலாளியின் சார்பில் வாதிடும் சட்டத்தரணி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதியின் சாமர்த்தியத்தால் சில வழக்குகளில் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தோட்டத்துரையை சந்தித்து பேசி அவர் இந்த காம்பிறாவை சம்பந்தப்பட்டவருக்கு தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்றும் அல்லது தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொள்ளும் முன்பு தோட்ட சின்னத்துரையிடம் சொல்லிவிட்டுதான் இதனை செய்தார் என்றும் சாட்சிகளை நெறிப்படுத்தி அவ்வாறான சாட்சிகளில் தொழிலாளிக்கு ஏற்படும் சாதகமான பலாபலன்களை ஆதாரமாக வைத்து இது ஒரு ஊகித்தறிந்த வேலை நீக்கமே (Constructive termination) என்றும் இது நிர்வாகத்தின் நியாயமற்ற செயல் என்றும் விவாதித்து வழக்குகளை வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் பலவற்றில் இது வேலை நீக்கம் அல்லது (Not termination) தோட்டத்துரையின் சட்ட ரீதியிலான கட்டளையை (Lawful Orders) நிறைவேற்றும் வரை தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளார்.(Suspension from work) என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




எனவே தொழிலாளி ஒருவரின் பிரச்சினை முன்னெடுக்கப்படும் பொழுது அது அவரது அது அவரது சட்ட ரீதியிலான உரிமையை நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையா அல்லது யதார்த்தமான சூழ்நிலைகள் காரணமாக தோன்றிய மனிதாபிமான ரீதியில் அணுகக்கூடிய பிரச்சினைகள் என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன.




தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வசதியின்மை காரணமாகவும் அவர்களுக்கென்று குளியலறைகள் தனியாக இல்லாத காரணங்களினாலும் தங்களின் வீடுகளுக்கு முன் வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவசர அவசரமாக குளிப்பது வழக்கம். வீட்டிலுள்ள வயது வந்த பெண் பிள்ளைகளுக்குக்கூட மறைவாக நின்று குளிக்க முடியாதுள்ளதே என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் தங்களின் மரக்கறி தோட்டங்களிலோ வீட்டுக்குப் பக்கத்திலோ தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்து கொள்வது வழக்கம்.




தொழிலாளிக்கும் தொழில் கொள்வோருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொழில் நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நாகரிகமான காலத்திலும் கூட இளம் பெண்கள் திறந்த வெளியில் நின் குளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இந்த வசதிகளை செய்து கொடுப்பது தொழில் கொள்வோரின் கடமையும் பொறுப்புமாகும். இவ்வாறான வசதிகள் நிர்வாகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல என்று அப்பீல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




(ஆதாரம் Bagawathy VS SLSPC-CA 47 87)) நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிமைகள் மற்றும் மனிதாபிமான காரணங்களை ஆதாரங்களாக வைத்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளும் உண்டு.


எஸ். இராமநாதன்


மாத்தனை

No comments: