தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும் மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எமக்கு ஆதரவாக போராடும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி, உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்,சந்தாப் பணத்தினை நிறுத்திவிட்டோம், உடனடியாக ஆயிரம் ரூபாவை வழங்கு, போராட்டம் வெடிக்கும்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
Wednesday, October 12, 2016
1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து ஜனாதிபதி செயலத்திற்கு சென்று நிறைவடைய ஏற்பாடகியிருந்த நிலையில் பொலிஸார் வீதியில் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள 10 பேரடங்கிய குழுவினர் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும் வரை தாம் வேலைக்கு செல்லப்போவதில்லையெனவும் இப் போராட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்
தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 14ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குதல், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குதல் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை உள்ளடக்கியதாக இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழுவின் இணைப்பாளர், சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
தீபாவளியை காரணம்காட்டி தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சட்டத்தரணி இ.தம்பையா இதனைக் கூறினார். ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் துங்க ஜயசூரிய, மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் முன்வைத்த கோரிக்கையல்ல. கடந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசாரங்களின் போதும் இதனைக் கூறியிருந்தார். இருந்தபோதும் 1000 ரூபாவை இதுவரை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றார்.
மாறாக நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குவது தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்று எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ கைச்சாத்திடப்படலாம். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர் சட்டத்துக்கு முரணான வகையில் அமையவுள்ளது. வாரமொன்றுக்கு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவது, 3 வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, பாக்கிச் சம்பளத்தை வழங்குவதில்லை ஆகிய விடயங்கள் இம்முறை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றன. எனினும் அவர்களின் வருடாந்த நிதி அறிக்கையை எடுத்துப் பார்த்தால் அது உண்மை இல்லையென்பது தெளிவாகிறது. தீபாவளி என்பது மலையகவாழ் மக்களுக்கு பரம்பரையாகக் கொண்டாடப்படும் கலாசார நிகழ்வாகும்.
ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவது வழமை. இம்முறையும் பண்டிகை முன்பணம் வழங்கப்படாது என தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முயற்சிக்கின்றன. நரகாசுரனின் அழிவை தீபாவளியில் கொண்டாடுகிறோம். நரகாசுரன்கள் போன்று செயற்படும் கம்பனிகள் செயற்படுகின்றன என்றும் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் போராட்டங்களை காட்டிக் கொடுக்காது தொழிற்சங்கங்களும் செயற்பட வேண்டும். மாறாக தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அதற்கு எதிராக மலையகம் தளுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். எவ்வாறான போராட்டம் என்பது அப்போது அறிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி இ.தம்பையா மேலும் கூறினார்.
Friday, September 30, 2016
தொடரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்
சம்பள உயர்வு போராட்டத்தில் குதித்துள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும், டயர்களை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்த நிலையில் நேற்று நான்காவது நாளாகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
நேற்றைய தினமும் டயர்களை எரித்து வீதிகளை மறித்ததுடன் உருவப் பொம்மையை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
17 மாதங்களாக தமக்கு சம்பள அதிகரிப்பினை வழங்காது முதலாளிமார் சம்மேளனம் தம்மை ஏமாற்றி வருவதாகவும் தமது வாழ்வாதாரத்தோடும் பொருளாதார நிலைமைகளுடனும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டுடனும் விளையாடி வருவதாகவும் அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீதும் தமது விரக்தியையும் அதிருப்தியையும் தெரிவித்து கோஷங்களை எழுப்பியதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு நேற்று நான்காவது நாளாக இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்ட தொழிலாளர்கள், ஆதரவாளர்கள் இணைந்து கொண்டனர். இதன்போது எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியதுடன் வீதிகளை மறித்து டயர்களை போட்டு எரித்தனர்.
அத்துடன் போடை சந்தியில் கூடிய தொழிலாளர்கள் ஹட்டன் சாஞ்சி மலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முதலாளிமார் சம்மேளனத்தன் பிரதானியொருவரின் உருவப் பொம்மையை வீதியில் நிறுத்தி தீயிட்டு கோஷமிட்டனர்.
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பிரதேசத்தில் கூடிய லபுக்கலை மேற்பிரிவு, கீழ்பிரிவு, கொண்டக்கலை, வெஸ்டோ, பம்பரகலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பிரதேசத்தில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பெரும் வாகன நெரிசலும் பதற்ற நிலையும் உருவானது.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தமக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுத் தரப்பட வேண்டும் என்றும் இல்லையெல் 850 ரூபாவையேனும் தமக்கு பெற்றுத் தர முதலாளிமார் சம்மேளனம் சம்மதிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரித் தலைமையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மஸ்கெலியா
மஸ்கெலியாவில் கூடிய தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரிக்கையை கொண்ட பதாதையை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமது எதிர்ப்பினையும் வெ ளிப்படுத்தியிருந்தனர். மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாவை பெற்றுத் தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானை கோரினர். இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
பத்தனை, போகாவத்தை
தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியின் போகாவத்தை நகரத்தில் அணிதிரண்ட பத்தனை, போகாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு நியாயமான சமபளத்தை பெற்றுத் தருமாறு இதன்போது கோஷங்களை எழுப்பி நின்றனர்.
பொகவந்தலாவை வீதியில்
இதேவேளை அட்டன் தரவலை, சலங்கந்தை, இன்வரி, அட்லி, மாணிக்கவத்தை, பட்டல்கலை, என்சீ ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் கம்பனிகளாலும் தொழிற்சங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமது கவலையையும் கோபத்தையும் வெ ளியிட்டனர்.
தலவாக்கலை
தலவாக்கலை, இரட்னகரிய, பாமஸ்டன் ஆகிய தோட்டத் தொழிலாளர்கள் பாமஸ்டன் சந்தியில் ஒன்றுகூடி 1000 ரூபா கோரிக்கையை முன்வைத்த போராட்டம் நடத்தினர். இதன்போது 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தமக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருமாறு இதன்போது வலியுறுத்திக் கூறினர்.
இதேவேளை லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலவாக்கலை பாம் வீதியில் திஸ்பன சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் வட்டவளை, டெம்பல்ஸ்டோ தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அட்டன் கொழும்பு வீதியில் ரொசல்ல பிரதேசத்தில் கூடி பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று அட்டன் ஸ்டிரதன் பிரதேச தோட்டத் தொழிலாளர்களும் அட்டன் கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அட்டன் வனராஜா மேற்பிரிவு தோட்டத தொழிலாளர்கள் பொகவந்தலாவை பிரதான வீதியில் பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் டிக்கோய நகரத்தில் பேரணியுடனான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் டிக்கோயா பட்டல்கலை தோட்டத் தொழிலாளர்களும் டயகம பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை மாவட்டத்தில்
இது இவ்வாறிருக்க பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை, வியாரகலை, தங்கமலை, கிளனூர் உள்ளிட்ட தோட்டங்களிலும், லுணுகலை அடாவத்தையிலும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடாவத்தையில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்தும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெ ளியிட்டதுடன் உடனடியாக சம்பள அதிகரிப்பினை பெற்றுத் தருமாறு கோஷமிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கோரினர்.
நன்றி- வீரகேசரி
Thursday, September 29, 2016
சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்
சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தோட் டத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் வீதிகளை மறித்தும் டயர்களை எரித் தும் ஒப்பாரி ஓலமிட்டும் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பினையும் ஆதங்கத்தினையும் கவலையையும் தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தினர்.
நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரத்திற்குட்பட்ட தோட்டங்கள், கொத்மலை நானுஓயா, கண்டி மாவட்டத்தில் புஸல்லாவை பிரதேச பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தோட்டத் தொழிலில் ஈடுபடாத பொதுமக்களும் முச்சக்கரவண்டி சாரதிகளும் மற்றும் சமூக நலன் விரும்பிகளும் இணைந்து கொண்டு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் வீதி
களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதேவேளை டயர்களையும் எரித்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
இதேவேளை தமது கவலையை வெளிப்படுத்தும் முகமாக தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்து ஓலமிட்டதுடன் முதலாளிமார் சம்மேளனத்திற்கு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். அத்துடன் தோட்ட முகாமையாளர்களிடம் மகஜர்களையும் கையளித்திருந்தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான கூட்டு ஒப்பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்பிக்கப்படாமை, சம்பள அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றமை மற்றும் பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றங்களும் காணப்படாமை, அதிகாரிகளினதும் சம்பந்தப்பட்டோரினதும் அசமந்தப் போக்கு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு தொடர்சசியான ஆர்ப்பாட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் புஸல்லாவை பிரதேசத்தில் கட்டுகித்துல, ஹெல்பொட, பெரட்டாசி, மெல்போர்ட், சோகம, சங்குவாரி, பிளக்போரஸ்ட், டெல்டா ஆகிய தோட்டங்களில் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்திய தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறும் கம்பனியின் ஒடுக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தது சம்பளம் கேட்டு போராடுவதற்கா? என்றும் கோஷங்களை எழுப்பினர். ஜனாதிபதியும் பிரதமரும் கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் தமக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஒப்பாரி
இது இவ்வாறிருக்க ஹட்டன் - பொகவந்தலாவை வீதியை மறித்து தமது எதிர்ப்பினை வெளியிட்ட பொகவந்தலாவை, நோர்வூட் சென்ஜோன் டிலரி, வென்சர், டிக்கோயா பிரதேச தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டின்சின் தோட்டத் தொழிலாளர்கள் தமது எதிர்ப்பினையும் கவலையையும் வெளிப்படுத்தும் முகமாக ஒப்பாரி வைத்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் பிரதான வீதியில் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அத்துடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தி வனராஜா தோட்ட முகாமையாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மேலும் செஞ்ஜோன் டிலரி மேற்பிரிவு, கியூ தோட்ட மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு ஆதரவாக முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தொழிலாளர்களை ஏமாற்றுவதாக தெரிவித்த முச்சக்கரவண்டி சாரதிகள் பொகவந்தலாவையிலிருந்து கியூ தோட்டத்திற்கு செல்லும் 4 கிலோ மீற்றர் வீதி நீண்டகாலமாக செப்பனிடாது குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் கோசம் எழுப்பி, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எமில்டன், லக் ஷ்பான, சென்அன்றூஸ், வாழைமலை உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லக்ஷ்பான தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக திரண்டு பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சூளுரைத்தனர்.
மேலும் நேற்று காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரையான சுமார் இரண்டு மணிநேர காலத்திற்கு றதல்ல பிரதான வீதியை மறித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இதன்போது கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலைமைகளை வெ ளிப்படுத்தியதுடன் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டால் போராட்டம் பாரியதாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
நன்றி- வீரகேசரி
Tuesday, September 27, 2016
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதற்குத் தயாரில்லை என நேற்று அறிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தமது எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்து வரும் நிலையில் 3வது நாளாக நேற்றும் மலையகப் பிரதேசங்களின் பல தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பொகவந்தலாவை மற்றும் டன்சினன் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் இழுத்தடிக்க இடமளிக்க முடியாது என்றும் ஒருவார காலத்திற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வழி செய்யப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த விவகாரம் தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் நேற்றும் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படாமை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுமையிழந்த நியைலேயே அவர்கள் சுயமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலை முதலாளிமார் சம்மேளனம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு வழியேற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிடுகின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், தொழிலமைச்சரின் தலையீட்டுடன் தீர்வொன்றைக் காண்பதற்கு வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு வரும் என தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் முக்கிய கட்சியான இ. தொ. கா வின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் எம்.பி. இது தொடர்பில் நேற்று தினகரனுக்குத் தெரிவிக்கையில்; இன்றைய பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருந்த போதும் முதலாளிமார் சம்மேளனம் அதனை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளமை அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாது ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது.
ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதும் அறிக்கைகளை வெளியிடுவதும் என தத்தமது அரசியல் நோக்கங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதையும் காணமுடிந்தது.
கூட்டு ஒப்பந்தம் என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் ஒருவார காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ, கெம்பியன், அத்துடன் சாமிமலை ஸ்ரபி தோட்டத்திலும் இடம்பெற்றன.
வீதிமறியல் போராட்டத்தின் காரமாண போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு ஒருவார கால அவகாசத்தை கேட்டு ஸ்டர்ஸ்பி தோட்ட மக்கள் தோட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, டின்சின் தோட்டம், ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை கொட்டியாக்கலை, கெம்பியன், மற்றும் செப்பல்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கெம்பியன் நகரத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
இதேபோன்று சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்திலும் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு அர்ப்பாட்டங்களையும், போராட்டங்களை முன்னெடுத்ததோடு முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
Subscribe to:
Posts (Atom)






