Tuesday, May 24, 2016

தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும். 

தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. 

2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது 

இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்­கொ­டுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார். 

மண் சரிவு அபாயம் - 390 பேர் வெளியேற்றம்

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 6, 7, 8ஆம் ஆகிய இலக்க லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புப் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால், 6ஆம் இலக்க லயன்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ஆம் இலக்க லயன்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ஆம் இலக்க லயன் தொகுதியில் 10 குடும்பங்களும், தற்காலிகக் கூடாரங்கள் இரண்டில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்கலாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 சிறுவர்களும் 6 மாத சிசுக்கள் இருவரும் அடங்குகின்றனர். மேலும், அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால், போதியளவான மலசலக்கூட வசதிகள் இன்மையால் அவர்கள், பல்வேறான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்,  இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒருவருட காலமாக எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே, தங்களுடைய உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் இம்முறை, அனர்த்த அபாயம் அதிகரித்துவிட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, பெல்மதுளை பொரோணுவ தோட்ட மேற்பிரிவு இலக்கம் - 03 லயன் அறைகளில் வசித்துவந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாகவே இவர்கள், இடம்பெயர்ந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டட ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இவ்விடம் மண்சரிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய இடமென்று இனங்காணப்பட்டது. அப்பகுதியிலிருந்து வெளியேறியோர், பொரோணுவ தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குருநாகல் கிரிந்திவெல, உடவெல கல்உடகந்தையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது,

இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம்

மத்துகம வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 14 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறி தோட்ட வைத்தியசாலையில் சென்று தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டபோது “மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புக்களை விட்டு வெளியேறமாட்டோம்” என தோட்டக்குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு ஏற்பட்ட மண்சரிவையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து இப்பகுதியில் மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு வசித்துவரும் குடும்பங்களை வேறு இடத்துக்கு சென்று குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு 2014ம் ஆண்டு ஜீன் மாதம் கடிதம் மூலம் தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியிருந்தது.  

இதற்கி­ணங்க 100 நாள் ஆட்சியில் காணி ஒதுக்கப்பட்டு வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டிய பாதுகாப்பான வசதியான இடத்துக்கு மாறாக தோட்ட நிர்வாகம் தெரிவு செய்திருந்த காணியை விரும்பாத குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர்களான பி. திகாம்பரம், மனோகணேசன், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் பல தடவைகள் கொண்டு வந்தும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டாது கைவிடப்பட்டு விட்டது.

மீரியபெத்த சம்பவத்தையடுத்து விழிப்படைந்த தோட்ட நிர்வாகம் இங்கு வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றி பின்னர் மீண்டும் லயன் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பியது. தற்பொழுது நிலவி வரும் காலநிலை காரணமாக அச்சமடைந்துள்ள தோட்ட நிர்வாகம் மீண்டும் வெளியேறுமாறு கேட்டுள்ளது.

காலநிலை மோசமடையும் போது வெளியேறு என்று கூறுவதும் காலநிலை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் பழைய இடத்துக்கே போ என்று கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
எங்களுக்கான வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தால் வெளியேறுவோம். அல்லாவிடின் மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மடிந்து போனாலும் பரவாயில்லை. நாங்கள் வெளியேறப் போவதில்லை. மண்சரிவு ஏற்­பட்டு புதையுண்டு போகும் நிலை ஏற்படுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், ட்ரஸ்ட் நிறுவனம், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் மலையக தலைவர்களுமே ஏற்க வேண்டும்.

எனவே அத்தகையதொரு துரதிர்ஷ்ட நிலை ஏற்படும் முன்னர் மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் இது குறித்து விசேட கவனம் செலுத்தி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஆபத்தை எதிர்நோக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, May 20, 2016

இயற்கையின் பேரழிவினால் மக்களின் துயரம்

கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய களுபான தோட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானவர்கள் விபரம்

எஸ்.சிவராம் (40), ஜீ.நவின் (12), ஜீ.வினோஜ், எஸ்.பிரேமளாதேவி (23), சுஜந்தினி (19), கலைச்செல்வன் (27), டபிள்யூ. கதிரேசன் (53), செல்வராணி (56), ஆர். ராஜன் புஸ்பவதி (48), ஆர்.தீபா (19), அனுதராஜா தரணி (04), பார்வதி (68), பெரியசாமி (72), நிரஞ்சலா உள்ளிட்ட 14 பேரே புதையுண்டவர்களாவர்

இவர்களில் நேற்று முன்தினம் ஆறுமாதக் குழந்தையொன்றும் அக்குழந்தையின் தந்தையான கலைச்செல்வனும் மீட்கப்பட்டதுடன் மேலும் 12 சடலங்கள் மீட்கப்பட்டன
பாதிப்புக்குள்ளான 300 இற்கும்  அதிகமானோர் யக்கல வித்தியாலயத்திலும், லெவல தமிழ் மகாவித்தியாலயத்திலும், உந்துகொட சிங்க வித்தியாலத்திலும் , தன்னிமலை விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் லிந்துலைசென்கூம்ஸ் nலிமிலியர் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 36 பேர் இடம்பெயர்ந்து அத்தோட்டத்தில் கொழுந்து மடுவத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு பெய்த கடும் மழையினால் தொழிலாளர்களின் குடியிருப்புக்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோட்ட நிர்வாகமோ இத் தொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவித அக்கறை கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மாவத்தகம பிரதேசத்தில் கண்டி குருனாகல் பிரதேசத்தில் மலையொன்று தாழிறங்கும் அபாயம் உள்ளதால் (மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதால); 35 குடும்பங்களைச் சேர்ந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திற்குட்பட்ட தெல்கன, ரங்கல பெரிய டிவிசனை சேர்ந்த 75 குடும்பங்கள் மண்சரிவு அனர்த்தம் காரணமாக நேற்றைய தினம் அப்பிரதேச வேன்சைட் தமிழ் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனால் 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

அரநாயக்க, சாமசர மலை சரிந்து வருவதால்,  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரநாயக்கவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 135 வீடுகள் புதையுண்டுள்ளனவெனவும், அவ்வீடுகளில் வசித்தோரது 19 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனவெனவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகத் மகேந்திர கூறினார்.

குறித்த கிராமங்களில் வசித்த 220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களுமென சுமார் 1,700பேர், 9 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜகத் மகேந்திர கூறினார். 

அரநாயக்க, போடாபே மலை மற்றும் ஜனபத மலை ஆகியனவும் மணிசரிவுக்கு உள்ளாகும் அபாயம்; உள்ளதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களைத் தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இரத்தோட்டை, பம்ரபகலவத்தையில் லயன் குடியிருப்பின் மீது, நேற்றுமாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென இரத்தோட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

கம்பளை தொலஸ்பாகையில் பேரவில மலைவீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், அந்த பிரதேசத்தைச் ரேச்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர், அங்கிருந்து வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளதாக இஹலகோரள பிரதேசசெயலாளர் மங்கள விக்ரமராச்சி தெரிவிக்கின்றார். சுமார் 5 ஏக்கர் பிரதேசத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், கிராமத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கு மாற்று வீதிகளை பயன்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

Thursday, May 19, 2016

மண்ணில் புதையுண்ட தொழிலாளர் வாழ்ந்த லயன் குடியிருப்புக்கள்

மாவனல்ல அரநாயக்க பகுதியில் நேற்றுமுன்தினம் 17-05-2016 அன்று மாலை சாமபுர என்ற மலை இடிந்து ஏற்பட்ட மண்சரிவினால் சிரிபுர, எலங்கபிட்டிய, பல்லேபாகே மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. ஏலங்கபிட்டிய மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையே முதன்முதலில் மலை மேட்டுடன் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால்  220 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய மண்சரிவில் 66 வீடுகள் முற்றாக புதையுண்டுள்ளன. காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மண்ணில் புதையுண்டு சிக்கி மரணத்தவர்களின் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 134 இற்கு மேற்பட்டோர் இதுவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. 
கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய பகுதியில் களுபஹனவத்த தோட்டத்தில்   ஏற்பட்ட மண்சரிவினால் தொழிலாளர்கள் ஆறு லயன் குடியிருப்புக்கள் மண்சரிவில்; மூழ்கியுள்ளதால் 17 பேர் புதையுண்டுள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 14 பேர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மண் சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் நேற்றைய தினமும் கடும் மழையினால் மீட்பு பணியாளர்கள் தங்கள் பணியை தொடர முடியாதிருந்ததாக இடர் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் அப்பிரதேசங்களுக்கு செல்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்திருந்தவேளை அம்மலையிலிருந்து நீர் மற்றும் கற்பாறைகள், மண்திட்டுக்கள் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என தெரிவித்துள்ள என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் நேற்றைய தினம் மலையகத்தில் கடும் மழை பெய்தது. இதன்காரணமாக பல பிரசேதங்கள் நாரில் மூழ்கியதுடன் மண்சரிவு அனர்த்தம் பல இடங்களுக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பிரதேத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தினால்  ஆறு பேர் மண்சரிவில் சிக்குண்டுள்ளனர். அதேபோன்று தெல்தோட்ட, நாவலப்பிட்டிய, கலகெதர போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 2800 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். 

கடுகண்ணாவ இலுக்குவத்தை மண்சரிவில் சிக்குண்டு புதையுண்ட இரண்டு வீடுகளில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேரின் சடலங்கள்; மீட்கப்படடுள்ளன. இந்நி­லையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம்; மீட்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சிக்குண்டவர்களில் இரு பெண்களும் சிறுவர்கள் மூவரும் இளைஞர் ஒருவர் எனத் தெரிகிறது.

களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, டெல்கீத் தோட்டம், இலுப்புவத்த டிவிசனைத் சேர்ந்த 15 குடும்பங்கள், மத்துகம வோகன் தோட்ட கீழ்ப்பிரிவை சேர்ந்த 15 குடும்பங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். தோட்ட நிர்வாகம் இவர்களை அக் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறி தோட்ட ஆலயங்களிலும், தோட்ட வைத்தியசாலைகளிலும் தங்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

புசல்லாவ பிரதேசத்தில் கடுமையான மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது கம்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெல்பிட்டிய கலஹா பிரதேசத்தில் மண்சரிவினால் 05 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. புசல்லாவ சோகம தோட்ட கீழ்ப்பிரிவில் நில வெடிப்பு காரணமாக வவுஹபிட்டிய, பிட்டகந்த பிரதேசத்தில் மண்சரிவு, வெள்ளம் அபாயம் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து கலஹா சனசமூக நிலையத்திலும் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலைமையில் கம்பளைக்கும் நுவரெலியாவுக்கும் இடையில் பிரதான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தெல்பிட்டிய அட்டபாகே, சங்குவாரி, இரட்டைபாதை, பிட்டகந்த, புசல்லாவ, ஹெல்பொட, ரம்பொட ஆகிய பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்திருந்ததையும் கற்பாறைகள் வீழ்ந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 

Tuesday, May 17, 2016

தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைக்கும் நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது

1000 ரூபா சம்பள உயர்வுக்காக தொழிலாளர்களை போராட அழைப்பது வேடிக்கையானது மட்டுமல்ல அது கம்பனிகளுக்கு துணை போகும் செயலாகும் என மக்கள் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கூட்டு ஒப்பந்தம் சட்டப்படி இரத்துச் செய்யப்படாலம் இருக்கும் இந்நிலையில் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகும். 

இந்தப்பின்னணியில் கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் நாளாந்த 100 ரூபா மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைத்திருப்பது வேடிக்கையானது என்பதுடன் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை காட்டிக்கொடுத்து பெருந்தோட்ட கம்பனிக்கு துணை போகும் நடவடிக்கையாகும். 

1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை இ.தொ.கா முன்மொழிந்திருந்தாலும் அது அனைத்துப் பெருந்தோட்டக் தொழிலாளர்களின் கோரிக்கையாகியுள்ளது. நியாயமான அக்கோரிக்கையை நாளாந்தம் ரூபா 100 என்ற கோரிக்கைக்கு தாத்துவது நேர்மையான அணுகுமுறையாகாது. 

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா வழங்கும்படி தனி;யார் துறையை கட்டாயப்படுத்துவதற்காக 2016ம் ஆண்டு 4ம் இல நிவாரணப்படி சட்டம் அமுலில் உள்ளது. அதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழில் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன கூற காரணம் தோட்டத் தொழிலாளிகளுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள உயர்வு தொடர்பில் இணக்கம் காணப்படாமைகும். 

நாளாந்தம் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப் போவதாக தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பது வேடிக்கையானது. இதுவொரு வகையில் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கையை காட்டிக்கொடுத்துவ்pட்டு பெருந்தோட்டக் கம்பனிக்கு துணைபோவதாகும். இது வாழ்க்கை செலவு படியாக ரூ 17.50 வேண்டும் என போராடிய போது வெறும் 10 சதம் போதும் இணங்கிய காட்டிக்கொடுப்பு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது. 

ரூபா 1000 நாளாந்த சம்பளமாக இ.தொ.கா உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காது வாய் சவாடல்களை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு கட்டத்தில் ரூபாய் 800 அதிகமாக வழங்க கம்பனிகளுக்கு உடன்பாடு இருந்த நிலையில் 2014ம் சட்டத்தின் படியான நாளாந்தம் ரூபா 100 சம்பள உயர்வுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் போராடப் போவதுடன் அதற்கு தொழிலாளர்களை அழைப்பது வேடிக்கையானது என்பதுடன் அவர்களை தற்கொலைக்கு தள்ளுவதற்கு ஒப்பானதாகும் என்று கூறியுள்ளார். 

நன்றி- தமிழ் மிரர்

சீரற்ற காலநிலை தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டன

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மண்சரிவும், போக்குவரத்து துண்டிப்பும் வெள்ளப்பெருக்கும் காணப்படுகின்றன.  17-05-2016 செவ்வாய்கிழமை மாலைவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி மலையகத்தில் கடுகண்ணாவ பிரதேசத்தில் 06 பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 16-05-2016 அன்று காலையில் தெஹியோவிட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் புதையுண்டநிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  

புளத்ஹோபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 17 பேர் காணாமற் போயுள்ளதாகவும் இப்பெருந்தோட்ட மக்கள் குடியிருப்புக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக கேகாலை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதேபோல் இரத்தினபுரி பிரதேசத்தில் இம்புல்பே என்னும் இடத்தில் மண்சரிவினால் ஒருவர் உயரிழந்துள்ளார். மேலும் ஒருவர் எஹலியகொட  பிரதேசத்தில் மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கம்பளை அட்டபாகை மொரகொல்ல தனியார் தோட்டத்தில் நான்கு வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் குடியிருந்த நான்கு குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் கம்பளை கலத்த சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதேபோன்று கண்டி தெல்தோட்ட பகுதியில்17-05-2016 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லயன் அறைக்குள் வெடிப்பு ஏற்பட்டதால் ஊற்று நீர் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது 13 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாடசாலை கட்;டிடம் ஒன்றில் தங்கியுள்ளனர். தெல்தோட்ட கலஹா பிரதான வீதியில் தோட்ட பிரதேசமொன்றின் வீதியில் பெரும் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபையின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பகலை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் லிப்பகலை தோட்ட 10 குடும்பங்களைச் சார்ந்த லயன் குடியிருப்பில் மக்கள் அச்சமடைந்த நிலையில் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. 

தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சிறு வருமானத்திற்காக மேற்கொண்டு வந்த காய்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் விவசாய பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புரூக் போன்ற பகுதிகளில் ஆற்றோரங்களில் விவசாயம் செய்தவர்களுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளனர். 

ஹட்டன் ரொத்தஸ் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்து குடியிருப்பாளர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு கட்டிட அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
நாவலப்பிட்டி கினிகத்தேன பிரதான வீதியில் பாதை சரிந்து வீழ்ந்துள்ளது. அப்பகுதியில் ஒரு வழிபாதையாக ஏற்படுத்தப்பட்டு சாரதிகள் மிகக் கவனவாக வாகனத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

கோலை மாவட்டத்தில் ரூவான்வெல, அங்குருவெல, கரவனெல்ல, தல்துவ ஆகிய பகுதிகளில் வெள்ளம் இன்னமும் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது. 

இதேவேளை அரநாயக்கா மாவனெல்ல எரங்கபிட்டிய, எனும் பகுதியில் கிராமமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 200 இற்கு மேற்பட்ட வீடுகள் பாhதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புக்கருதி அப்பிரதேசத்துக்கு உதவியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறியகிடைக்கிறது.