மாவனல்ல அரநாயக்க பகுதியில் நேற்றுமுன்தினம் 17-05-2016 அன்று மாலை சாமபுர என்ற மலை இடிந்து ஏற்பட்ட மண்சரிவினால் சிரிபுர, எலங்கபிட்டிய, பல்லேபாகே மூன்று கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. ஏலங்கபிட்டிய மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையே முதன்முதலில் மலை மேட்டுடன் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் 220 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய மண்சரிவில் 66 வீடுகள் முற்றாக புதையுண்டுள்ளன. காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மண்ணில் புதையுண்டு சிக்கி மரணத்தவர்களின் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 134 இற்கு மேற்பட்டோர் இதுவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை மாவட்டம் புளத்ஹோபிட்டிய பகுதியில் களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தொழிலாளர்கள் ஆறு லயன் குடியிருப்புக்கள் மண்சரிவில்; மூழ்கியுள்ளதால் 17 பேர் புதையுண்டுள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 14 பேர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண் சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் நேற்றைய தினமும் கடும் மழையினால் மீட்பு பணியாளர்கள் தங்கள் பணியை தொடர முடியாதிருந்ததாக இடர் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் அப்பிரதேசங்களுக்கு செல்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்திருந்தவேளை அம்மலையிலிருந்து நீர் மற்றும் கற்பாறைகள், மண்திட்டுக்கள் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகளை முன்னெடுக்க முடியவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என தெரிவித்துள்ள என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் நேற்றைய தினம் மலையகத்தில் கடும் மழை பெய்தது. இதன்காரணமாக பல பிரசேதங்கள் நாரில் மூழ்கியதுடன் மண்சரிவு அனர்த்தம் பல இடங்களுக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று முன் தினம் கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பிரதேத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தினால் ஆறு பேர் மண்சரிவில் சிக்குண்டுள்ளனர். அதேபோன்று தெல்தோட்ட, நாவலப்பிட்டிய, கலகெதர போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த 2800 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கடுகண்ணாவ இலுக்குவத்தை மண்சரிவில் சிக்குண்டு புதையுண்ட இரண்டு வீடுகளில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேரின் சடலங்கள்; மீட்கப்படடுள்ளன. இந்நிலையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம்; மீட்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சிக்குண்டவர்களில் இரு பெண்களும் சிறுவர்கள் மூவரும் இளைஞர் ஒருவர் எனத் தெரிகிறது.
களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, டெல்கீத் தோட்டம், இலுப்புவத்த டிவிசனைத் சேர்ந்த 15 குடும்பங்கள், மத்துகம வோகன் தோட்ட கீழ்ப்பிரிவை சேர்ந்த 15 குடும்பங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். தோட்ட நிர்வாகம் இவர்களை அக் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறி தோட்ட ஆலயங்களிலும், தோட்ட வைத்தியசாலைகளிலும் தங்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.
புசல்லாவ பிரதேசத்தில் கடுமையான மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது கம்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெல்பிட்டிய கலஹா பிரதேசத்தில் மண்சரிவினால் 05 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. புசல்லாவ சோகம தோட்ட கீழ்ப்பிரிவில் நில வெடிப்பு காரணமாக வவுஹபிட்டிய, பிட்டகந்த பிரதேசத்தில் மண்சரிவு, வெள்ளம் அபாயம் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து கலஹா சனசமூக நிலையத்திலும் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் கம்பளைக்கும் நுவரெலியாவுக்கும் இடையில் பிரதான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தெல்பிட்டிய அட்டபாகே, சங்குவாரி, இரட்டைபாதை, பிட்டகந்த, புசல்லாவ, ஹெல்பொட, ரம்பொட ஆகிய பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்திருந்ததையும் கற்பாறைகள் வீழ்ந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment