Thursday, February 18, 2016

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் கோப்புகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் அதனை செய்யாமல் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கூட்டம் நடைபெறுவதில் எவ்வித பயனும் இல்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்,பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் (15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
(15.02.2016) அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்திற்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரட்ணயாக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரில் 6 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர சபை, நகர சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இந்த தீர்மானத்தை சபைக்கு முன்வைத்தார்.
குறித்த காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே எமது பெருந்தோட்ட மக்கள் தமது கலைகலாச்சார நடவடிக்கைகளை இந்த மண்டபத்தின் வாயிலாகவே முன்னெடுக்கின்றனர். எனவே இதற்கு அருகாமையில் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது பொறுத்தமற்ற ஒரு செயலாக அமைந்துவிடும். எனவே அதனை வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இந்த சபையின் ஊடாக ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.இதனை தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு இந்த காந்தி மண்டபத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பது பொறுத்தமாக இருக்கும் என தனது கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து இதனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நானுஒயா டெஸ்போட் சுற்றுவட்ட பாதை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது இந்த சுற்று வட்ட பாதை வழியாக பேருந்துகள் பயணிப்பதில்லை எனவும் பேருந்துகள் அனைத்தும் குறுக்கு வழியாக செல்வதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலளார் எலன் மீகஸ்முல்ல தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்கு தேசிய போக்குவரத்து அதிகாரசபையும் ஹட்டன் போக்கு வரத்து சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனவே இந்த பிரச்சினை தற்பொழுது தீhக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.எனவே இது தொடர்பாக நானுஒயா பொலிஸ் நிலையத்திற்கு ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

Saturday, February 13, 2016

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில்  சம்பள கட்டளைகள் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்                                   

மேலும் தெரிவிக்கையில், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது. இந்தச் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தச் சம்பள அதிகரிப்பானது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, தனியார்துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யவுள்ளதாக அரசு கூறுகிறது.
இந்தச் சம்பள அதிகரிப்பு பற்றி அரசு தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏனெனில், இந்த விடயத்தில் அரசு மூடிமறைத்து செயற்படுகின்றது. மலையக மக்கள் விடயத்தில் ஏன் இவ்வாறு அநீதியாக செயற்படுகின்றீர்கள்?

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு உழைப்பிற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்

தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி, சரியான வாழ்வாதார முறையின்றி மலையக தோட்ட தொழிலாளர்கள் லயன் அறைகளில் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ப சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன சரியான முறையில் வங்கியில் இடப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

வேலையை விட்டு விலகிச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை அவர்களால் சரியான முறையில் பெற முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான கண்காணிப்புக்கள் சரியான முறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

அரவிந்த குமார் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றுகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.

1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்

மகிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். மலையக மக்களும் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் குரல் கொடுக்காமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் மொழியில் தமது கோரிக்கைகளை மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Friday, February 12, 2016

அலட்சியம் வேண்டாம் வேதனையளிக்கிறது

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் இது­வரை கைச்­சாத்­தி­டப்­ப­டாத நிலையில் அந்த மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நோக்கில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதும் அனைத்து பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த விட­யத்தில் தலையிட்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். அர­சாங்கம் தலை­யிட்­டி­ருந்­தாலும் ஒன்றும் நடக்­க­வில்லை. ஏற்­க­னவே இருந்த கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாக தற்­போது ஒரு வருடம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட முடி­ய­வில்லை.

நாட்டின் ஏனைய தொழிற்­து­றை­யினர் பெறு­கின்ற சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான சம்­ப­ளத்­தையே தோட்டத் தொழி­லா­ளர்கள் பெறு­கின்­றனர். அவர்கள் தமக்கு அதி­க­ரித்­துக்­கொ­டுக்­கு­மாறு கோரி­யி­ருக்கும் சம்­பளத் தொகையும் நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது. அந்த தொகைக்­கூட நாட்டின் ஏனைய துறை­யினர் பெறும் சம்­ப­ளத்­துடன் ஒப்­பி­டு­கையில் மிகவும் குறை­வா­ன­தாகும்.

இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்தை இது­வரை கைச்­சாத்­தி­டாமல் இருப்­ப­தா­னது ஒரு வகையில் அந்த மக்­களின் உரி­மை­களை மீறு­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெலும்­பாக இருக்­கின்­றனர். ஆனால் அவ்­வாறு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு முது­கெலும்­பாக இருக்கும் மக்­க­ளுக்கு ஒரு­வ­ருட கால­மாக சம்­பள உயர்வை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் இது எந்­த­ளவு தூரம் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என்­பது புரி­கின்­றது.

எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்கில் இருக்­க­வேண்டாம். குறிப்­பாக தொழிற்­சங்­கங்­களும் முத­லாளி மார் சம்­மே­ள­னமும் இதனை பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அர­சாங்கம் இருந்­து­வி­டக்­கூ­டாது.

விசே­ட­மாக புதிய அர­சாங்­கத்­துக்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் இந்த அர­சாங்­கமும் அந்த மக்­களின் இந்த பிரச்­சினை தொடர்பில் அலட்­சி­யப்­போக்­குடன் இருந்­து­வி­டக்­கூ­டாது. உட­ன­டி­யாக இந்த விட­யத்தில் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­க­வேண்டும்.

மேலும் மலை­யக அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வேண்டும். வர­லாறு முழு­வதும் தோட்டத் தொழி­லா­ளர்கள் பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர்.

குறிப்­பாக சுகா­தாரம், கல்வி உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.

Thursday, February 11, 2016

சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது

அடிப்­படைச் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு ஒப்­பந்தம் முர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அது­தொ­டர்­பி­லான உரிய மீளாய்­வு­களைச் செய்­ய­வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் சம்­பளச் சபைக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த பிரே­ரணை குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே  தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலை­யாட்­களை உள்­வாங்கக் கூடி­ய­தான சட்ட நடை­மு­றை­யொன்று இந்­தி­யாவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் ராஜஸ்­தானில் வீட்டு வேலை­யாட்­க­ளாகப் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேத­னமா­க வழங்­கப்­பட வேண்­டு­மென அச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது நாட்டில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­பளம் தொடர்­பான சட்­ட­மூலம் தொடர்பில் பேசு­கின்றோம். தோட்டத் தொழி­லாளர் விவ­காரம் குறைந்த பட்ச வேதன சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் இச்­ச­பையில் பலர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

தனியார் துறைக்­கான 2500 ரூபா அதி­க­ரிப்பை பெருந்­தோட்டத் தொழி லா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுத்தி­ருப்­ப­தற்கு எடுத்­தி­ருக்கும் நடவடிக் ­கையை வெற்­றி­யாகக் கருதமுடியும். நாளொன்­றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபா­வா­கவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபா­வா­கவும் இருக்கும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் தோட்­டத்­தொ­ழி­லாளர் விவ­கா­ரத்தில் கூட்டு ஒப்­பந்தம் முறையின் கீழ் செல்­லும்­போதும் அர­சாங்­கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்­பது சிக்­க­லுக்­குள்­ளாகும். கூட்டு ஒப்­பந்தம் இதற்கு தடை­யாக அமையும். இத­னால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்­பந்­தத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்தி வரு­கிறோம். குறிப்­பாக தொழி­லா­ளர்­களின் வர­வுடன் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூட்டு ஒப்­பந்தம் காணப்­ப­டு­கி­றது.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலு­வை­யி­லுள்ள ஊழியர் சேம­லாப நிதி­யத்தை செலுத்­து­வ­தற்­காக தோட்­டங்­களில் உள்ள மரங்­களை வெட்டி அதன்­மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை பயன்­ப­டுத்­து­மாறு கடந்த அர­சாங்­கத்­தினால் வழி­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இயற்­கையை அழித்­தொ­ழித்­து­விட்டு நிலைத்­தி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்

மலை­ய­கத்­திற்­கென்று தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இதனை தடுக்க நினைப்­ப­வர்கள் சமூ­கத்தின் துரோ­கி­க­ளாவர் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன்  மலை­ய­கத்­திற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழ­க­மொன்று அவ­சி­யம்­தானா? என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்

அவர்  மேலும் தெரி­விக்­கையில், மலை­ய­கத்­திற்கு தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அவ­சி­யத்தை நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளையும் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றேன். மலை­ய­கத்தைச் சேர்ந்த பல புத்­தி­ஜீ­வி­களும் இதனை வர­வேற்றுப் பேசி­யுள்­ளனர். அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ர­னினால் கடந்த காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவும் இது பற்றி தீவி­ர­மாக ஆராய்ந்­தது. இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக நிலை­மாறி பல்­க­லைக்­க­ழக கல்­லூரி தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழ­ககு பல்­க­லைக்­க­ழகம் போன்று மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல­்க­லைக்­க­ழகம் தேவை என்­ப­தனை பெரும்­பான்மை சிங்­க­ளவர், சிங்­கள மக்கள் கூட எதிர்க்­க­வில்லை. எனினும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சில விஷ­மிகள் இதனை எதிர்த்து வரு­கின்­றனர். இன ரீதி­யாக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இத்­த­கை­யோரை மலை­யக சமூ­கத்தின் துரோ­கி­க­ளா­கவே கருதவேண்டி இருக்­கின்­றது. இவர்கள் தமது நிலை­யினை மாற்றிக் கொண்டு சமூக முன்­னேற்றம் கருதி செயற்­பட வேண்டும்.

மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால் மலை­யக சமூ­கத்தின் இனத்­துவ அடை­யாளம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு மேலும் பல நன்­மை­களும் உரு­வாகும் நிலை ஏற்­படும். மலை­யக நாட்டார் பாடல்கள், மலை­யகக் கல்வி, மலை­யக கலா­சாரம், மலை­யக சிந்­தனை, மலை­யக பாரம்­ப­ரியம் என்ற ரீதியில் மலை­யகம் தொடர்­பான பல்­வேறு இனத்­துவ அடை­யா­ளங்­க­ளையும் தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு உரு­வாகும்.

காமன் கூத்து உள்­ளிட்ட மேலும் பல தனித்­து­வ­மான விட­யங்­களை வேறு பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­களின் ஊடாக நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூல­மாக இத்­த­கைய விட­யங்­களை நாம் உள்­வாங்கிக் கொள்­ளவும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் முடியும் என்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது. மேலும் மலை­யகம் தொடர்­பான கற்கை நெறி­க­ளை நாம் மலை­ய­கத்­திற்­கென்று தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் பட்­சத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். சமூக அபி­வி­ருத்­திக்கு இத்­த­கைய நிலை­மைகள் பெரிதும் உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மாகும் சந்­தர்ப்­பத்தில் தனி­யான பல்­க­லைக்­க­ழக கல்­லூரி ஒன்­றினை மலை­ய­கத்­துக்­கென்று அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் தப்­பில்லை. ஆனாலும் கல்­லூ­ரியைக் காட்­டிலும் தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமே காலத்தின் தேவை­யாகும் என்­ப­தனை யாரும் மறந்து விடக்­கூ­டாது.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்­துக்­கென்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் மலை­யக அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சகல தரப்­பி­னரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.
ஏனைய சமூ­கங்­களைப் போன்று நாம் பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழகம் வாய்ப்­ப­ளிக்கும் என்­பது உறு­தி­யாகும். வீணான சாட்­டுக்­களைக் கூறி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நிலைமை இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் எதிர்­கால சந்­த­தி­யினர் நிச்­சயம் பழி சொல்வர் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.

தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பாரா­ளு­மன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டவும் இல்லை. எனவே தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி. மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பள சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­விதி அங்­கீக­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக தொழி­லாளர் அமைச்சு முன்­வைத்த பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் தெரி­வித்தார்.

வாழ்­வ­தற்கு வழி­யில்­லாது மல­ச­ல­கூட வச­தியும் இல்­லாது தோட்டத் தொழி­லா­ளர்கள் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர். மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று தொழில் இல்­லாமல், வாழ்­வ­தற்கு வழி­யில்­லாமல் பெரும் கஷ்­டத்தில் வாழ்­கின்­றனர்.

ஜன­வ­சம உட்­பட பல கம்­ப­னிகள் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளத்தை நேரத்­திற்கு வழங்­கு­வ­தில்லை. ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு நாள் சம்­ப­ள­மாக ரூபா 620 தான் வழங்­கப்­ப­டு­கி­றது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்­கின்­றது. இந்தச் சம்­ப­ளத்தை பெற்றுக் கொண்டு எவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்­பள உயர்வை வழங்­குவோம் என உறு­தி­மொ­ழி­களை வழங்கி பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள் இன்று உறு­தி­மொ­ழி­களை காற்றில் பறக்­க­விட்டு அம் மக்­களை ஏமாற்றி கஷ்­டத்தில் தள்­ளி­விட்­டுள்­ளனர்.

2500 ரூபா சம்­பள உயர்வும் இல்லை. வீடும் இல்­லாமல் தோட்டத் தொழி­லா­ளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களை ஏமாற்­றா­தீர்கள். அவர்­க­ளுக்கு வாழ்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். தொழி­லா­ளர்­க­ள் இன்று மல­சல கூட வச­தியும் இல்­லா­ம­லேயே வாழ்­கின்­றனர். எனவே மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை வட­ப­குதி அர­சி­யல்­வா­திகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் கிளி­நொச்­சியிலும் வாழ்­கின்­றனர்.

அத்­தோடு தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து மரண சகாய நிதி­யாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழி­லாளி இறக்கும் போது மரண நிதி­யு­தவி வழங்­கப்படுவ­தில்லை. சவப்­பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.

Wednesday, February 10, 2016

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதியுச்ச அதிகார பகிர்வு அவசியம் என கிளிநொச்சியில் சமூக மேம்பாட்டு அமையம் வலிறுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்களால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சியில்  புதிய அரசியலமைப்பு யோசணைகள்  பெறும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  
புதிய அரசியலமைப்பானது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுடையதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் எதிரான உச்சப் பாதுகாப்பை வழங்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
இன, மொழி, மத, சாதியக் கட்டமைப்பு, பால்நிலை பாகுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சமூகப்பாதுகாப்பு என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைச்சட்டங்களின் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதன் ஊடாக ஒவ்வொரு தனிமனிதனுடையதும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
உள்வாங்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பல்லினத்தன்மை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நடைமுறையைக் கொண்டிருப்பதற்கான பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடங்கியிருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இனங்கள்
மொழி, சமயம், பண்பாட்டு மானிடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவ் அடையாளங்களுடனான தேசிய சமூகங்களாக அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
01.சிங்களவர்
02.தமிழர்
03.முஸ்லீம்கள்
04.மலையகத்தமிழர்
05.மலே இனத்தவர்
06.பறங்கியர்
ஒவ்வொரு தேசிய சமூகங்களும் அவற்றின் விசேட தன்மைகளையும், அடையாளங்களையும் அரசியலமைப்பு அங்கீகரித்து உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன்மூலமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லினத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு நீடித்த சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எட்ட முடியும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மைத்  தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை (ர்ழரளந ழக யேவழையெடவைநைள) இனப்பிரிவுகளின் சம எண்ணிக்கையிலான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது பாராளுமன்றுக்கு வெளியாகவும் ஆனால் சமமான அந்தஸ்தை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
தேசிய இனங்களின் சபையானது தேசிய இனம் ஒன்றின் மொழி உரிமை, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றின் மீது நிகழ்த்தப்படும் சட்டவாக்கம், அழுத்தம் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு பொருத்தமான சட்டவாக்கங்களையும் முன்வைக்க வேண்டும்.
நீதித்துறைக் கட்டமைப்பில் உச்சநீதிமன்றத்தில் இனத்துவ விவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் தனித்துவமாகச் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் அரசியல் உரிமை மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
அரச கரும மொழிகள்
அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் என்பனவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் நடைமுறையில் அது இதுவரை அமுலாக்கம் பெறவில்லை என்பது பகிரங்கமான உண்மையாகும். எனவே, இலங்கையின் ஆள்புலத்தில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாகக்கருமங்களை ஆற்றக்கூடிய பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் அரச கருமமொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் நிர்வாக நீதிமன்ற மொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்விச் செயற்பாட்டில் காணப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அமுலாக்கப்பட்டுள்ள மும்மொழித்திறன் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரம் வரை  கலைத்திட்டத்தில் மும்மொழிக் கற்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல் முறை
இலங்கையின் சமாதான சகவாழ்வு உறுதிசெய்யும் முறையிலான சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்திற்கு மேலதிகமாக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவம் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். எனவே, அரசியலமைப்பின் ஊடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மகளீர் பிரதிநிதித்துவத்துக்கான பால்நிலைச் சமத்துவத்தின் முன் நிபந்தனையாக உள்ளூராட்சிச் சபைகளில் மகளீருக்கான ஒதுக்கீடு மூன்றில் ஒன்றாகவும், மாகாணசபைகளில் ஐந்தில் ஒன்றாகவும், பாராளுமன்றில் ஆறில் ஒன்றாகவும் மகளீர் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளின் தலைமைப்பொறுப்பை பெண்கள் வகிக்கக்கூடிய அடிப்படையில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்கப்படலாகாது.

அதிகாரப்பகிர்வு
வடக்குக் கிழக்கு இணைந்ததான பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படல் வேண்டும். இச்சபைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துக்கள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.
மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாகவே வரையறை செய்யப்பட வேண்டும்.
மாகாணசபைகள் முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாணசபைகள் ஸ்தாபிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாது இருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதிசெய்தல் வேண்டும்.
மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் உள்வாங்க வேண்டும்.
இதேபோன்று உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நேரடித்தலையீடு தவிர்க்கப்படுதல் அரசியலமைப்புச்; சீர்திருத்தத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கு இடையேயும், மாகாண அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது சுயாதீனமானதும், சட்ட வலுவுடைய நிறுவனமாகவும் செயற்படுவதை அரசியலமைப்புச் சீர்திருத்தம் உறுதிசெய்ய வேண்டும்.
மலையக மக்களின் சிறப்புரிமை (கிளிநொச்சி மாவட்டம் சார்பானது)
கிளிநொச்சி மேற்கில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னைநீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், லுஆஊயு குடியிருப்பு ஆகிய மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
வளப்பகிர்வு
எமது நாட்டின் வளங்களான கனிமவளங்கள், ஆளனிவளங்கள், நீர்நிலைகள், நீர்வளங்கள், நிலவளங்கள், வனவளங்கள் போன்றவை தேவைக்கேற்ப வளப்பகிர்வுகளைப் பங்கிடுவதற்கு தேவையின் அடிப்படையில் ஒரு பொதுக்கொள்கை வகுக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதனைப்பெறுவது அல்லது பயன்படுத்துவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமையை மீறாத வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நியாயம் கிடைக்கத்தக்க வகையில் பங்கீடு செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யவேண்டும்.
விவசாயப் பொருளாதார நாடான எமது நாட்டின் விவசாயிகளினுடைய அடிப்படை உரிமைகள் அரசியல் சாதனத்தின் ஊடாக பாதுகாக்கப்பட வேண்டும். தேவை கூடிய பிரதேசங்கள் அல்லது அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்து சமச்சீராக எல்லாப் பிரதேசங்களும் எல்லா வளங்களும் உடைய பிரதேசங்களாக மாற்றி எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும்.
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் விசேட ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.

பொதுச்சேவைகள்.
எமது நாட்டின் புதிதாக அரச சேவைகளுக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரும் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் க.பொ.த சாதாரண சித்தியை வலியுறுத்துவதன் மூலம் தேசிய பொதுச்சேவைகள் வினைத்திறனுள்ளதாக அமைவதையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
பொலிஸ் நியமனங்களின் போதும் இன விகிதாசாரங்கள் பேணப்படல் வேண்டும். அவ்வாறே இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவற்றின் ஆட்சேர்ப்பு அல்லது நியமனங்களின் போது நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய நியமனங்கள் செய்வதன் மூலம் நல்லிணக்கத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை வேண்டுகிறோம்.
உழைப்பாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்காதவாறும் பாதுகாப்பானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றம் செய்வதை அரசியல் சாதனத்தின் ஊடாக உறுதி செய்தல் வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளின் போதும் பொருளாதார கொள்கைகளைச் சீரமைக்கும் போதும் அதுதொடர்பான சமூகங்களின் பிராந்திய ரீதியாக கருத்துக்கணிப்பு பெற்று மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொறிமுறையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பேணுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.