Monday, July 19, 2010

கொட்டாஞ்சேனை வீடொன்றில் மலையகயுவதி மர்மகொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள ‘கோல்டன் ரெசிடன்ற்ஸ்’ அடுக்கு மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பதுளை, நமுனுகல, கலுகல்ல தோட்டப்பிரிவைச் சேர்ந்த வெள்ளச்சாமி சீதா ஹெலன் ராணி(37) மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ள போதும் அப் பெண் தாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யபட்டுள்ளனர்.

கொழும்பில் இவ்வாறு பணிப்பெண்ணாக பணிபுரிந்த பல மலையக பெண்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Sunday, July 18, 2010

கிராம சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்

தேர்தல் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பொது மக்களிடமிருந்தும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் ஆலோசனைகளை கோரியிருக்கிறது.

இக்கோரிக்கைக்கு இணங்க மலையகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அரசுக்கு ஆலோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த தலைமைகள் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வாக்குரிமையற்றவர்களாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 7 ஆக இருந்தது. இந்திய வம்சாவழியினர் சார்பில் போட்டியிடாத தொகுதிகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஆதரித்தோம். இதனால் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சியால் பெறமுடியாமல் போனது. சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் டி.எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

ஐ.தே.க. அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் செய்த முதல் வேலை இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமையை பறித்ததுதான். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947 இல் பாராளுமன்றத்தில் நூறு ஆசனங்கள் இருந்தபோது அதில் ஏழு ஆசனங்களை இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் சார்பில் பெறக்கூடியதாக இருந்தது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 40 ஆயிரம் பேருக்கு 1 பிரதேச செயலகம் இருக்கிறது. ஆனால் அம்பகமுவ பிரதேச செயலப் பிரிவை எடுத்துக் கொண்டால் சுமார் 2 இலட்சம் மக்கள் உள்ளனர். இங்கு மேலதிகமாக 4 பிரதேச செயலகமும், 4 பிரதேச சபைகளும் அமைய வேண்டும். அதுபோலவே நுவரெலியா பிரதேச செயலக பிரிவிலும் சுமார் 2 1ஃ2 இலட்சம் மக்கள் உள்ளனர்.

இங்கு மேலதிகமாக 5 பிரதேச செயலகமும் 5 பிரதேச சபையும் அமைய வேண்டும் அத்துடன் பாதுக்கை, கண்டி, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, தெனியாய, பன்னிகல், கொழும்பு, மொனராகல பகுதிகளுக்கும் எமது மக்களின் எண்ணிக்கைக்கேற்ப பிரதேச செயலகங்கள் அமைக்க வேண்டுமென அரசாங்கத்துக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே கிராமசேவகர் பிரிவுகளும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதிகாரம் பரவலாக்கும் நோக்கில் அரசாங்கம், ‘கிராம வசம’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போவதாக அறிய வருகின்றது. அரச சேவையை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ் ஆலோசனையை அரசு முன்வைத்துள்ளது. ஆகவே 1500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் நியமிக்க வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் நமது நாட்டில் குடிசன மதிப்பீடு செய்ய உள்ளனர். இதில் எமது இன அடையாளமான ‘இந்தியத் தமிழர்’ என்று நாம் எமது இன அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் இலங்கை தமிழர் என்று எம்மை குறிப்பிடுவதால் எமது இன விகிதாசாரம் குறைவடைய வாய்ப்புள்ளது. நாம் எம்மை மலையக மக்கள் என்றும் பேச்சி வழக்கில் கூறுகின்றோம். ஆனால் நமது இன அடையாளம் ‘இந்திய தமிழர்’ என்பதாகும். அது தொடர்பாகவும் நமது இளைஞர்களுக்கு இப்போதிருந்தே அறிவூட்ட வேண்டும். ஒவ்வொரு ஜுன் மாதமும் வாக்காளர் இடாப்பு திருத்தப்படும். இம் மாதம் வாக்காளர் இடாப்புப் படிவம் இப்போது விநியோகிக்கப்படுகின்றது. கிடைக்காதவர்கள் தோட்டத்துரையூடாகவும், கிராம சேவகர்களிடன் பெற்று பூரணப்படுத்தி வாக்காளர்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அநேகமாக தொகுதி வாரியான தேர்தலாக அமையலாம். அதில் வாக்குகள் கனிசமாக இருந்தால் கட்சி பேதமில்லாமல் சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும்.

பி. மோகன் சுப்ரமணியம்
அட்டன்

Friday, July 16, 2010

சமூக அநீதிக்கு உள்ளாக்கப்படும் மலையகத் தமிழ்ப் பெண்கள்

உலகில் பெண்கள் உரிமைகள் பற்றி உரக்கப்பேசப்பட்டு வருகின்றது. மேடைப் பேச்சுகளுக்கும் அறிக்கைகளுக்குமே பெண்கள் உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவா அல்லது நாட்டின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமை வரையறுக்கப்பட்டுள்ளதாஎன்று நமது நாட்டில் உள்ள நிலைமையைக் கவனிக்கும்போது வினவத் தோன்றுகின்றது. சந்தேகம் எழுகின்றது.

நமது நாட்டில் பெண்களின் உரிமைகள்,தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த மகளிர் விவகார அமைச்சென்ற ஒன்றுள்ளது. அத்துடன், தொழில் திணைக்களத்தில் பெண்கள் தொடர்பாக ஒரு பிரிவும் உள்ளது.

இவற்றை விடவும் அரசசார்பு,அரச சார்பற்ற பல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் என்றும் பல பெண்கள் உரிமை, தேவை,பாதுகாப்பு என பல் தரப்பட்டவற்றை ஆய்வு செய்து கவனிக்க பல அமைப்புகளும் நமது நாட்டிலுள்ளன. பெண் உரிமைக்காகக் குரலெழுப்பி கூட்டம் போட்டு கலைவிழா நடத்தி விருந்துபசாரம், கேளிக்கைகள் நடத்தும் பெண்கள் அமைப்புகளுக்கும் பஞ்சமில்லை.

இருந்த போதிலும் இந்நாட்டின் உழைக்கும் பெண்களில் குறைந்த சம்பளத்தில் கூடிய வேலைப்பளுவைச் சுமந்து கடினமான வேலைகளில் வெயில், மழையென்று பாராது மலைகளில் ஏறி, இறங்கி வேலை செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகச் செயற்படும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்குச் சட்ட ரீதியாக வரையறை செய்யப்பட்டுள்ள எந்தவொரு உரிமையும் கிட்டுவதில்லை என்பது வெளிப்படையானது. வேதனைக்குரிய இவ்வாறான புறக்கணிப்புத் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.

திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு கடந்த பல தசாப்தங்களாக மலையகப் பெருந்தோட்டப் பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது மறைக்கக்கூடிய விடயமல்ல. மலையகப் பெருந்தோட்ட ஆண் தொழிலாளர்களும் சிறுதொகைப் பணத்திற்காக் கருத்தடை அறுவை செய்து கொள்வதும் பிரசவித்த பெண்களுக்குப் பிரசவத்தின்போதே கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது. ஆய்வின்போது இது நடைமுறையிலிருப்பது உறுதியாகியுள்ளது.

பிரசவித்த தாய்மாரின் விரும்பமறியாமலே கருத்தடை சிகிச்சைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு விடுவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது அவர்களின் சம்மதம் இன்றியே இது நடைபெறுகின்றது. இதுவொரு உரிமை மீறல் என்பதை அப்பாவித் தொழிலாளரும் புரிந்துகொள்வதில்லை. கருத்தடை செய்வோரும் தாம் செய்வது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அல்லது திட்டமிட்டு ஆற்றும் செயற்பாடாக மேற்கொள்கின்றனர்.

இது இவ்வாறிருக்க அண்மையில் தோட்டங்களில் தொழில் வழங்குவதற்கு முன் பெண்கள் கருவுற்றிருக்கின்றனரா என்ற பரிசோதனை செய்யப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கருவுற்ற பெண்களுக்குத் தோட்டங்களில் வேலை வழங்கப்படமாட்டாது என்பது இதன் வெளிப்பாடு. கருத்தடை செய்வது ஒருபுறமாக நடைபெற்று வருவதுடன் கருத்தரிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலையே கருத்தரித்துள்ளனரா? என்று பரிசோதனை செய்து வேலை வழங்கும் செயலாகும். இது உலகிலே எங்குமில்லாத நிலை மட்டுமல்ல, நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகவும் உள்ளது.

இது தொடர்பில் உரிய முறையில் உரிமைக்குரல் எழுப்பாது விட்டால் அடுத்த கட்டமாக திருமணம் செய்தால் வேலை வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்படலாம்.

கருத்தரித்த பெண்களுக்கு மாதாந்த வைத்திய பரிசோதனை, ஆலோசனை, ஊட்ட உணவு எனப் பல நமது நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. மலையகப் பெருந்தோட்டக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றி எவரும் அக்கறை செலுத்துவதில்லை.

இவ்வாறான சுகாதார வசதிகள் உண்டு என்பதை மல்லயகத் தமிழ்த் தொழிலாளரும் அறிந்தவர்களாக இல்லை. இதுவொரு பரிதாப நிலை. நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராகவுள்ள தொழிலாளர்கள் நாட்டின் தேசிய சுகாதாரக் கட்டமைப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாகவேயுள்ளனர். இதுவே நடைமுறையிலுள்ள நிலைமை யதார்த்த நிலை.

இதுமட்டுமல்ல, பல பெருந்தோட்டங்களில் பிரசவிக்கவுள்ள தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல உரிய வசதிகள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாகவுள்ளது. பெருந்தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் செப்பனிடப்படாது குன்றுங் குழியுமாக இருப்பது கூறித் தெரிய வேண்டியதொன்றல்ல. மத்திய மாகாண வீதி அபிவிருத்தியில் பெருந்தோட்ட வீதிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதும் வீதி அபிவிருத்திக்குப் பொறுப்பான எவரும் அக்கறை செலுத்துவதாயில்லை. இதேநிலை, ஊவா,சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட வீதிகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களை தோட்டங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்குக் கூட்டிச் செல்வது ஆபத்துகள் நிறைந்ததாயுள்ளது.

தோட்ட நிர்வாகங்கள் பல சந்தர்ப்பங்களில் வாகன வசதி செய்து கொடுப்பதில்லையென்ற குற்றச்சாட்டுமுள்ளது. தேயிலைக் கொழுந்து,பசளை மூடைகள்,விறகு போன்றவை கொண்டு செல்லல் பயன்படுத்தப்படும் லொறிகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் வெறுமனே ஏற்றப்பட்டு அனுப்பப்படுவதும் நடைமுறையிலுள்ளது. சீரான பாதைகளிலேயே லொறிகளில் பயணம் செய்வது சிரமமானது. கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ வேதனையில் துடிக்கும்போது அவர்களை பொருட்கள் ஏற்றுவதுபோல் ஏற்றிக்கொண்டு செல்வது நியாயமானதா?மனிதாபிமானதா?. இதைப்பற்றி பொறுப்புடன் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்?

அண்மையில் இவ்வாறு லொறியில் ஏற்றி அனுப்பப்பட்ட கர்ப்பிணித்தாய் இடைவழியில் பிரசவித்த குழந்தை இறந்த செய்தியும் வெளியாகியது. பிரசவித்த குழந்தையை வீசியெறியும் பண்பாடு பெருகிவரும் நம் நாட்டில் அவ்வாறு வீசியெறிவதால் குழந்தை இறந்தால் அதன் தாய் கொலை செய்த குற்றத்திற்குள்ளாக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது.

பிரசவிக்கும் குழந்தை உரிய பாதுகாப்பான வசதிகள் செய்யப்படாமல் இறக்கும் நிலையேற்படும்போது அதுவும் ஒரு கொலையாகவே கொள்ளப்படக்கூடியதாகும். இதை எவரும் கருத்தில் கொள்ளாதிருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது. எல்லை மீறிய குரூர செயற்பாடாகக் கொள்ளவும் முடியும்.

அண்மைய கணிப்பீட்டின்படி நாட்டின் உணவு இறக்குமதியில் அறுபது வீதம் தேயிலை ஏற்றுமதி மூலம் கிட்டும் வருமானத்திலிருந்தே மேற்கொள்ளப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உணவு இறக்குமதிக்கு உழைத்து உதவும் தோட்டத் தொழிலாளரின் அவல நிலை மனித உணர்வுள்ளவர்களுக்கு உறுத்தாமல் இருப்பது புதுமையானது பரிதாபகரமானது.

நமது நாட்டில் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளுள்ளன. மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற கூக்குரலும் எழுப்பப்படுகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை என்று குரலிடப்படுகின்றது.

ஆனால், எவருக்கும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துன்பம் தெரிவதில்லை. புரிவதில்லை.தெரிந்திருந்தும் அவர்களை மனித இனத்தவர்களாகக் கணிக்கும் பகுத்தறிவை மனிதப்பண்பை இழந்து விட்டார்களா? நமது நாட்டில் நிலவிவரும் காட்டுமிராண்டித் தனத்திற்கு மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்கு இழைக்கப்படும் பாரபட்சம்,அநீதி ஒரு எடுத்துக்காட்டாகவுள்ளது என்றால் எவரும் வெட்கப்படத் தேவையில்லை. யதார்த்தம் அதுவாகவேயுள்ளது.

மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டியதொன்றாகும். இது தொடர்பில் குரல்கொடுத்து நியாயம்பெற முனையாமலிருப்பது மனிதகுலத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகமாகும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் இன,வர்க்க ரீதியாக சிந்திப்போரின் செயல் அமைந்துள்ளது. கண்டிக்கப்பட வேண்டிய,களையப்பட வேண்டிய இந்த அயோக்கியத்தனமான செயல்களுக்கு முடிவு கட்டுவதற்கு மலையக அரசியல்,தொழிற்சங்க,சமூக,சமய அமைப்புகள் தம்மிடையேயுள்ள தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு தம்மை நம்பியுள்ள சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பேண வழிகாண வேண்டும். அதுவே இன்றைய தேவை. அவசர, அவசிய தேவை. உரியவர்கள் கவனம் இதில் செலுத்தப்படுமா?

நன்றி- தினக்குரல்

Wednesday, July 14, 2010

மலையக வரலாற்றில் தடம் பதித்த சி.வி

தொழிற்சங்கவாதியும் இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளை 1914-04-14 ம் திகதி கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை வட்டக்கொடை மடக்கும்புர தோட்டத்தில் பெரிய கங்காணியின் மகனாக பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது.

சி.வி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் மலைய இலக்கிய பரம்பலில் சாரல் நாடன், அந்தனி ஜீவா, இ. தம்பையா, பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசியர் அம்பலவாணர் சிவராசா, கலாநிதி க. அருணாச்சலம், கவிஞர் சு. முரளிதரன், ஜெ. சற்குருநாதன் , லெனின் மதிவாணன், என பலதும் ஆய்வுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அதிகமானவர்கள் சி.வி யின் இலக்கிய ஆளுமையினையே அதிகமாக தொட்டு ஆய்வு செய்துள்ளனர். இவரது அரசியல் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் குறைவாகவே ஆய்வுகளில் காணப்படுகின்றன.

அட்டன் மெதடிஸ்த கல்லூரி, நுவரெலியா புனித திருத்துவ கல்லூரி, கnhழும்பு நாலந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த சி.வி, சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தின் தலவாக்கொல்லை பிரதேச உறுப்பினர் ஆனார்.

இலங்கை இந்திய காங்கிரஸின் செயற்பாட்டாளரான சி.வி வேலுப்பிள்ளை 1948ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட காலத்தில் இதற்குக் காரணமாய் இருந்த டி.எஸ். சேனநாயக்காவிற்கு ஆதரவாக இருந்த பல தமிழ் தலைவர்களை கடுமையாக எதிர்த்தவர். பின் நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தோழர் கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவி மலையகத்தில் அடையாளப்படுத்தக் கூடியதும் மக்கள் நலன் சார்ந்ததுமான மாற்று தலைமைக்கான தொழிற்சங்கத்தினை நிறுவி கட்டிக் காத்தவர்.

தனது இலக்கிய வரலாற்றின் இலக்கிய படைப்பிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் தொடர்பாக எழுதிய சி. வி இலக்கியங்கள் உழைக்கும் பாட்டாளிகளின் குரலாக அன்று துவங்கி இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சிகரம் பேராசிரியர் கைலாசபதியின் பாராட்டைப் பெற்ற மலையக படைப்பாளி சி. வி மாத்திரமே என்று எழுத்தாளர் அந்தனி ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். மலையக வரலாற்றினை நோக்கும் போது சி.வி யின் இடததினை சமன் செய்ய இதுவரை எந்த இலக்கியவாதியும், தொழிற்சங்கவாதியும் தோன்றவில்லை என்றால் மிகையாகாது.

சி.வி யின் வாழ்வும் பணியும் நேர்மையும் உழைப்பும் இன்றைய தொழிற்சங்க வாதிகளும் இலக்கியவாதிகளும் கற்று வாழ வேண்டியது கட்டாயமாகும். மலையக வரலாற்றுத் தடத்தில் மிக ஆழமாக தனது பதிவுகளை வைத்தவர் சி. வி ஆவார்.

ஆங்கில மொழியில் மலையக தமிழ் மக்களின் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய இவர் தனது இலக்கிய பணியில் மாத்திரம் மட்டுப்பட்டு சோம்பிக் கி;டக்காமல் இயக்கப் பணியிலும் தடம் பதித்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய உண்மைகளாகும். 1984-11-19ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார் சி. வி அவரது நினைவாக வட்டக்கொடை பூண்டுலோயா வீதியில் கல்லறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

“ ஆழப்புதைந்த- தேயிலைச் செடியின் அடியிற்
புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் - ஏறி மித்து இங்கெவர்
வாழவோ தன்னுயிர் தருவன்”

- சி.வி -

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்குபதிவு மறுக்கப்படுகின்றதா?

வாக்காளர் பதிவும், மீளாய்வும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய முடியாது என்று பல கிராம சேவகர் பிரிவுகளில் பதிவுகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் நிலை குறித்து தற்போது பலரின் கவனம் திரும்பியுள்ளது.

இவ்வாறு வாக்குப்பதிவு மேற்கொள்ளாமையால் இவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறுவது, அரச உத்தியோகம் பெறுவது போன்றவற்றின் போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அண்மையில் மலையகத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைக்கு பயிலுனர் ஆசிரியராக சேர்தல், போன்றவற்றின் போது தான் இலங்கை பிரஜை என்பதினை உறுதிப்படுத்த முடியாமல் பலர் இவ்வாய்ப்புக்களை இழந்துள்ளமை முக்கிய விடயம்.

எனினும் இவர்களும் வாக்குப்பதிவுக் உரித்துடையவர்கள் என பல அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அது தொடர்பான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் அவை தெளிவுப்படுத்தியுள்ளன.

1942ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்ற பிரஜையாக்கப்பட்ட மலையக சமூகத்தினருக்கு 1964ம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974ம் ஆண்டின் சிறிமா-இந்திரா ஒப்பந்தங்களின்படி 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமையும் 375,000 பேருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட போதும் அவற்றில் இந்திய குடியுரிமைக்கு 6,00,000 பேரும் விண்ணப்பிக்கவில்லை. குறிப்பாக இவர்களில் 94,000 பேர் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உடனனே இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு 5ம் இலக்க சட்ட மூலம் நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகும் 2003ம் ஆண்டு பிரஜா உரிமை திருத்தச்சட்டத்தின் மூலம் பிரஜா உரிமை வழங்கப்பட்டாலும் இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு வாக்குப்பதிவு மறுக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின்படி ஒருவர் தன்னை வாக்காளராக பதிவு செய்வதற்கு இலங்கை பிரஜை என்ற அந்தஸ்து முக்கியமாகும். எனவே இந்திய கடவுச்சீட்டை கொண்டிருந்தாலும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்தோடு உள்ள சகலரும் தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 13, 2010

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அபிவிருத்திக் கூட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஹட்டனில் (10-07-2010) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், கல்விமான்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் நுவரெலியா, அம்பேகமுவ, கொத்மலை, ஹங்குராங்கத்த, மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட அபிருத்தி பணிகள் பற்றி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

குல்வி, வீடமைப்பு. மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மலையகத்திற்கென தனியான பல்கலைகழகம், ஹட்டன்- டிக்கோயா நகரசபையை மாநகரசபையாக தரம் உயர்த்துதல் மற்றும் அரசிலமைப்பு சீர்திருத்தம் பற்றிய விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைகையில் அபிவிருத்திக் குழுக்களை அமைப்பது பற்றி முன் வைக்கப்பட்ட பிரேரணையில் அக் குழுவில் பிரதேச கல்விமான்கள்,, புத்திஜீவிகள், அரசியல் பிரதினிதிகள் உள்ளடக்கப்படுவர். அக் குழுக்களின் ஊடாக அபிவிருத்திப் பணிகள் அமைச்சரின் கவனததிற்கு கொண்டு வருவது என உத்தேசிக்கப்பட்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மலையக மக்களினதும், ஏனைய கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கைகளை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கூட்டங்களை ஏனைய பிரதேசங்களில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தெரிவித்தார்.

ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாகக் கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியதையடுத்து இப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கிலோ கிராம் கொழுந்தை மட்டுமே பறித்து வந்தனர். ஆனால் தோட்ட முதலாளிமார்கள் ஒரு நாளைக்கு 22 கிலோ கிராம் கொழுந்து பறிக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கி.கி கொழுந்து பறிப்பவர்களுக்கு அரைநாள் சம்பளமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.