இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்குபதிவு மறுக்கப்படுகின்றதா?
வாக்காளர் பதிவும், மீளாய்வும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய முடியாது என்று பல கிராம சேவகர் பிரிவுகளில் பதிவுகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் நிலை குறித்து தற்போது பலரின் கவனம் திரும்பியுள்ளது.
இவ்வாறு வாக்குப்பதிவு மேற்கொள்ளாமையால் இவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறுவது, அரச உத்தியோகம் பெறுவது போன்றவற்றின் போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அண்மையில் மலையகத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைக்கு பயிலுனர் ஆசிரியராக சேர்தல், போன்றவற்றின் போது தான் இலங்கை பிரஜை என்பதினை உறுதிப்படுத்த முடியாமல் பலர் இவ்வாய்ப்புக்களை இழந்துள்ளமை முக்கிய விடயம்.
எனினும் இவர்களும் வாக்குப்பதிவுக் உரித்துடையவர்கள் என பல அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அது தொடர்பான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் அவை தெளிவுப்படுத்தியுள்ளன.
1942ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்ற பிரஜையாக்கப்பட்ட மலையக சமூகத்தினருக்கு 1964ம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974ம் ஆண்டின் சிறிமா-இந்திரா ஒப்பந்தங்களின்படி 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமையும் 375,000 பேருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட போதும் அவற்றில் இந்திய குடியுரிமைக்கு 6,00,000 பேரும் விண்ணப்பிக்கவில்லை. குறிப்பாக இவர்களில் 94,000 பேர் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உடனனே இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு 5ம் இலக்க சட்ட மூலம் நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகும் 2003ம் ஆண்டு பிரஜா உரிமை திருத்தச்சட்டத்தின் மூலம் பிரஜா உரிமை வழங்கப்பட்டாலும் இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு வாக்குப்பதிவு மறுக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின்படி ஒருவர் தன்னை வாக்காளராக பதிவு செய்வதற்கு இலங்கை பிரஜை என்ற அந்தஸ்து முக்கியமாகும். எனவே இந்திய கடவுச்சீட்டை கொண்டிருந்தாலும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்தோடு உள்ள சகலரும் தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment