Tuesday, April 21, 2009

எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் சிலர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக எதுவித ஆதாரமுமின்றி விமர்;சித்து வருகிறார்கள். இவர்கள் ஒப்பந்தத்தை விமர்சித்து பேசிவருவது விசித்திரமாக இருக்கிறது. தொழிலாளர் நலன்களைவிட தங்கள் மத்தியில் உள்ள தனிப்பட்ட விரோத குரோதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தனிப்பட்ட குரோதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தொழிலாளர்களது பிரச்சினையோடு கலந்து குழப்பியடிப்பது தொழிலாளர் நலன்களை எவ்விதத்திலும் பாதுகாக்காது.
தொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் பேசப்பட்டு இறுதியாக ஏற்படும் முடிவினை எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ளும் ஆவணமே ஒப்பந்தம் எனப்படுவதாகும். இணக்கப்பாட்டுக்கு வரும் விடயத்தை எழுத்து வடிவில் ஒப்பந்தமாக செய்து கொள்வதானது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கேயாகும்.
தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், பாதிப்படைபவர்கள் தொழிலாளர்களே. இன்று தொழிலாளர்களின் நன்மை கருதி பல தொழிற் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஊழியர் சேமலாப நிதி சட்டம், சேவைக்கால பணம் வழங்கும் சட்டங்கள் முக்கியமானவைகளாகும். ஆனால் இந்த சட்டங்களையும் தொழில் கொள்வோர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய மில்லியன் கணக்கான ரூபாய்களை தொழில் கொள்வோர் வழங்காமல் மோசடி செய்துவருகிறார்கள். தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பயனாகவே இதனைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்வாரான காலகட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று இல்லாதிருந்தால் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி முதலாளிகள் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தையும்கூட குறைத்துக் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஒருவருக்கொருவர் மத்தியில் உள்ள தனிப்பட்ட குரோதங்களையும் நோக்காக வைத்துக் கொண்டு கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர் துரோக ஒப்பந்தம் என்றும் இது ஒரு அடிமை சாசனம் என்றும் வசைபாடிவருகின்றனர். ஆனால் இதில் தொழிலாளர்கள் ஒன்றை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.யார் எதனைச் சொன்னாலும் இதுவரை காலமும் தொழிலாளர்கள் அதிகரித்த சம்பள உயர்வினைப் பெற்று வருவது தொழிலாளர் துரோக ஒப்பந்தம். இன்னொரு விடயத்தையும் தொழிலாளர்கள் மறந்து விடவில்லை. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கைகளைவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இவர்களால் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு ஒரு சதத்தையேனும் சம்பள உயர்வாகப்பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்பதாகும்.

Friday, April 17, 2009

மலையக அமைப்புகளின் ஆலோசனையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு கட்சிகள் வழிவிட வேண்டும்

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலையகக்கட்சிகள் அதிலிருந்து விலகி மக்களின் தேவைக்கேற்றவாறு ஒப்பந்தத்தை மாற்றி எழுதவேண்டும் அல்லது மக்களின் நலனில் அக்கறையுள்ள மலையக அமைப்புகளின் ஆலோசனைகளுடன் புதிய ஒப்பந்தத்தை எழுதுவதற்கு வழிவிட வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது.

இக்கூட்டு ஒப்பந்தம் பற்றியோ இந்த ஒப்பந்தம் எவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக உள்ளது என்பது பற்றியோ போதிய விளக்கமோ, தெளிவோ இல்லை நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து தொழிலாளர்களது வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது சம்பள உயர்வு பற்றி வேறு கதைகளை கதைக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டாம் என்று ஐ.தே.கட்சியிடம் இவர்கள் கூறமுடியாதா?

தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களால்தான் மலையகம் மாறும் என்ற போக்கில் இன்னுமொரு மாயை உருவாக்கப்படுகின்றது. கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களால் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாதா அல்லது சம்பளத்தை கூட்டிக் கேட்க முடியாதா?

Thursday, April 16, 2009

மொனராகலை பகுதி தமிழ் தொழிலாளர்கள் மீது காடையர்கள் அட்டகாசம்

மொனராகல மாவட்டம் புத்தள, இக்கம்பிட்டிய பகுதிகளில் அப்பாவி சிங்கள மக்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பெரும்பான்மையின காடையர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெள்ளச்சிட தோட்டம், போகாலயின் றப்பர் தோட்ட மக்களே. கிராமங்களிலிருந்து இளைஞர்கள் பலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளதாகவும், தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதனால் 11 தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மொனராகலை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் - சுரேஷ் வடிவேல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி மற்றும் வெள்ளநிவாரணம், தர்மசம்பளம், அங்கவீனர்களுக்கான நிவாரண உதவிகள், விதவைகளுக்கான மேம்பாட்டு உதவி ஆகியன இதுவரை காலமும் பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச் உதவிகள்;, நிவாரணங்களை பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையிலானவேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் பசறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Monday, April 13, 2009

தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டடைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார் மேலும் இப் பேச்சுவார்த்தையில் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்ற உள்ளனர் என்றும இப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய கூட்டொப்பந்தம் செல்லுபடியாகுமென்றும் என்றார் தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வக்கேற்ப தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்படவேண்டுமென்று மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 12, 2009

இந்திய அரசு பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யும்- இந்திய தூதுவர்

இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

Saturday, April 11, 2009

சம்பள உயர்வு குறித்து மக்களிடம் கருத்துகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்துகளை பெற்று வருவதாகத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறுபட்ட தொகைகளை குறிப்பிடுகின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் அச் சம்பள உயர்வை பெறுவது தொடர்பில் அவர்கள் குறிப்பிடவேண்டும். புதிய கூட்டு உடன்படிக்கை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

சம்பள உயர்வை என்ன அடிப்படையில் கோரலாமென்பதை தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரியுள்ளார். முதலில் தற்போதைய சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை எந்தளவு வழங்குமென்பதை சிந்திக்க வேண்டும். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அரசு என்ன செய்ய வேண்டுமென்பதையும் சிந்திக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களுக்கு பொருட்களின் விலை உயரும் போது சம்பளங்களை அரசு உயர்த்துகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளனர். எனவே, பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற அரசு விலையுயர்வால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்(பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும்)