குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் சிலர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக எதுவித ஆதாரமுமின்றி விமர்;சித்து வருகிறார்கள். இவர்கள் ஒப்பந்தத்தை விமர்சித்து பேசிவருவது விசித்திரமாக இருக்கிறது. தொழிலாளர் நலன்களைவிட தங்கள் மத்தியில் உள்ள தனிப்பட்ட விரோத குரோதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தனிப்பட்ட குரோதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தொழிலாளர்களது பிரச்சினையோடு கலந்து குழப்பியடிப்பது தொழிலாளர் நலன்களை எவ்விதத்திலும் பாதுகாக்காது.
தொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் பேசப்பட்டு இறுதியாக ஏற்படும் முடிவினை எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ளும் ஆவணமே ஒப்பந்தம் எனப்படுவதாகும். இணக்கப்பாட்டுக்கு வரும் விடயத்தை எழுத்து வடிவில் ஒப்பந்தமாக செய்து கொள்வதானது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கேயாகும்.
தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், பாதிப்படைபவர்கள் தொழிலாளர்களே. இன்று தொழிலாளர்களின் நன்மை கருதி பல தொழிற் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஊழியர் சேமலாப நிதி சட்டம், சேவைக்கால பணம் வழங்கும் சட்டங்கள் முக்கியமானவைகளாகும். ஆனால் இந்த சட்டங்களையும் தொழில் கொள்வோர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய மில்லியன் கணக்கான ரூபாய்களை தொழில் கொள்வோர் வழங்காமல் மோசடி செய்துவருகிறார்கள். தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பயனாகவே இதனைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்வாரான காலகட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று இல்லாதிருந்தால் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி முதலாளிகள் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தையும்கூட குறைத்துக் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஒருவருக்கொருவர் மத்தியில் உள்ள தனிப்பட்ட குரோதங்களையும் நோக்காக வைத்துக் கொண்டு கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர் துரோக ஒப்பந்தம் என்றும் இது ஒரு அடிமை சாசனம் என்றும் வசைபாடிவருகின்றனர். ஆனால் இதில் தொழிலாளர்கள் ஒன்றை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.யார் எதனைச் சொன்னாலும் இதுவரை காலமும் தொழிலாளர்கள் அதிகரித்த சம்பள உயர்வினைப் பெற்று வருவது தொழிலாளர் துரோக ஒப்பந்தம். இன்னொரு விடயத்தையும் தொழிலாளர்கள் மறந்து விடவில்லை. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கைகளைவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இவர்களால் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு ஒரு சதத்தையேனும் சம்பள உயர்வாகப்பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்பதாகும்.
No comments:
Post a Comment