Tuesday, September 23, 2008

மலையக மக்களின் பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.

1948ம் ஆண்டு மலையக மக்களின் நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் 30 ஆண்டுகள், எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பின் எமது மக்களினதும், தலைவர்களினதும் முழு சக்தியும் பிரஜாவுரிமையை மீளப் பெறுவதிலேயே கழிந்தது. இதய சுத்தியோடு சில போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதன் பிறகு மலையக மக்களின் பிரச்சினையை 2003ம் ஆண்டு பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினை போன்றே பார்க்கப்பட்டது. எமது தேசிய இன அடையாளத்தையும், தேசிய இன உரிமையையும் நிலை நாட்டுவதன் மூலம் எமது பிரஜாவுரிமை உட்பட எமது சகல உரிமைகளையும் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கும் உள்ளது போல் நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையில் எமது பிரச்சினை பார்க்கப்படவில்லை.

தேசிய கட்சிகளான ஐ.தே.க வாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க ஆக இருந்தாலும் இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சியதிகாரத்திற்கும், இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்வது என்றே பார்க்கப்பட்டது. திமபு பேச்சுவார்த்தையில் தமிழ் இயக்கங்களின் பிரஜாவுரிமை தொடர்பான வலியுறுத்தல் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தது. பௌத்த பிக்குகளும், சிங்கள இனவாத அமைப்புக்களும் இந்தியா போன்ற வல்லரசொன்று எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்காக இந்த பிரஜாவுரிமை விடயத்தில் ஆதரவு நல்கின.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை ஒவ்வொரு கட்சியினதும் நலம் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகால நோக்கில், முழுமையாக தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையோடு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களைப் போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை

-சமகால அரசியல் - தீர்வு – அ. லோறன்ஸ் -

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெருந்தோட்டப் புறங்களுக்கும் முன்னெடுக்கப்பட கூடியதாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் பாரியார் புசல்லாவ நியூபீகொக் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களை பார்வையிடும் போது மக்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்குடன் ஒப்பிடும் போது அச்சமற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவூட்டல் நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத தடையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கண்டியிலும், மாத்தளையிலும் நடத்தப்பட்ட அறிவூட்டல் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு மாத்தளை பிரதேச செயலகம், ரொக்சைட் தோட்ட மண்டபம், கண்டி குருதெனிய கல்வி வள நிலையம், லொவர் கொத்மலை கிளப் ஆகிய இடங்களில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்கள், தோட்ட சமூக நல அதிகாரிகள், தோட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறப்பு சான்றிதழ் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய மனித வள அபிவிருத்தி நிதியம் இதனை முன்னெடுத்துள்ளது.
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

தொடர்ச்சி......

-ஷோபனாதேவி இராஜேந்திரன்-

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையிலான இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியினை கல்வி வழங்கி தயார்ப் படுத்துகின்றது. ஆனால், இத்தகைய அடிப்படை கல்வியைக்கூட பெருந்தோட்டத்துறையில் சுமார் 16 வீதமான சிறார்கள் எய்த முடியாத நிலை (தொழிலில் ஈடுபட்டுள்ள) காணப்படுகின்றது.

தொழிற் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள்

தோட்டத்துறையைச் சேர்ந்த சிறுவர்கள் தொழிலில் நுழைவதற்கான பல்வேறு விதமான வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்கள் முறைசாராத தொழிற் சந்தைகளிலேயே தொழிலைப் பெறுகின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 60 வீதமான சிறுவர்கள் தரகர்கள் மூலமே தோட்டத்திற்கு வெளியே தொழிலைப் பெற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு தோட்டத்திலும் குறிப்பாக வீட்டுப் பணியாட்களாக சிறுவர்களை அனுப்புவதற்கான தரகர்கள் அத்தோட்டத்திற்குள்ளேயே இருக்கின்றனர்.

இவ்வாறு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தரகர்கள் அவர்களது பெற்றோரை ஏமாற்றி சிறுவர்களைத் தொழிலுக்கு சேர்த்து விடுகின்றனர். இதற்கான சன்மானத்தை தொழிலுக்கு அமர்த்தும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி சிறுவர்களை ஏமாற்றி அவர்களை வீட்டுக்கு வீடு மாற்றுவதன் மூலம் தொழிலுக்கு அமர்த்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். சிறுவர்களை மூலதனமாக வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டுகின்ற இந்த தரகர்கள் எத்தகைய குற்றவாளிகள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம் அல்லவா?

அட்டவணை-04
தரகர்கள் - 60 வீதம்

பெற்றோர் - 20.5 வீதம்
ஏனைய உறவினர்கள் - 6.5 வீதம்
தொழில் வழங்குநர் – 8.3 வீதம்
சிறுவர்கள் - (தாமாகவே சேருதல்) – 3.2 வீதம்
ஏனையவை – 1.4 வீதம்

மொத்தம் - 100 வீதம்

அட்டவணை 4 இன் படி 20.5 வீதமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடியாகவே தொழிலில் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு நேரடியாக தொழிலில் சேர்க்கின்றபோது தொழில் வழங்குநர்களால் தரகர்களுக்கு சன்மானம் கொடுப்பதைப் போலவே பெற்றோர்களும் சன்மானத்தைக் கொடுக்கின்றனர். இது பெற்றோர்கள் தம் சொந்தப் பிள்ளைகளை பணத்திற்காக விற்பனை செய்வதாக கருதும் நிலையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்தில் அதிகமான பகுதியை தமது மதுபாவனைக்காக பயன்படுத்துவது ஆய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. இவர்கள் சிறிதேனும் பிள்ளையின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் செயற்படுகின்றனர். பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்தி அப்பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகிய அனைத்தையும் அரும்பிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு முழுமையாக பங்கம் விளைவிக்கப்படுவதன் மூலம் அவர்களது சகல உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது பிள்ளைகளை தொழிலில் அமர்த்துவதற்கு வழி செய்கின்ற பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். எனவே, பொறுப்பற்று பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்கும் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

சிறுவர் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல்

இலங்கையில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சிறந்த சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இங்கு 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் கட்டாயக் கல்வி அமுலாக்கம் நடைமுறையில் உள்ளது. இதன்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முழு நேரத் தொழிலில் ஈடுபடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், சட்டத்திற்கு முரணான வகையில் சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவது தொடர்பாக ஏலவே இங்கு நோக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பொதுவாக முறைசாராத துறைகளில் தொழில்களை பெற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகளின் அபிவிருத்தித் தேவை, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை இவை இரண்டிற்குமிடையில் ஒரு சமத்துவத்தன்மை இல்லை என்றே குறிப்பிடலாம். இங்கு குடும்பத்தின் பொருளாதார தேவையை முன்னுரிமைப்படுத்தி அதனடிப்படையில் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறு முறைசாரா துறைகளில் தொழில்புரியும் சிறுவர்களின் ஊழியச் சுரண்டல் மிக உயர்வான நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. சிறுவர்கள் தமது குறைந்தபட்ச கூலியை பெற்றுக்கொள்ள மிகக்கூடிய மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எனவே, தொழில்புரியும் பிள்ளைகள் மிக குறைந்தளவு நேரமே ஓய்வினை அனுபவிக்கின்றனர். தொழில் வழங்குநர்கள் சிறுவர்களிடமிருந்து மிக நீண்ட நேர உழைப்பினை பெற்றுக்கொண்டு மாறாக, அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியையும் விட மிகக்குறைவான கூலியையே வழங்குகின்றனர். இதிலும், 90 வீதமான சிறுவர்களுக்கு வழங்கப்படும் கூலியை பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும், தொழில்புரியும் சிறுவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் ஓர் ஆரோக்கியமான சூழல் இருப்பதில்லை. மாறாக, மிக மோசமான சூழ்நிலைகளின் கீழே இவர்கள் தொழில்புரிய வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது அவர்களது முறையான உடல், உள ரீதியான வளர்ச்சிக்கு பாதகமாகவே உள்ளது. அத்துடன், முழுநேர சிறுவர் தொழிலாளர்களின் தொழிலில் ஈடுபடும் நிலைமையானது அவர்களது உடல் நலத்தினையும் தனியாள் அபிவிருத்தியையும் பாதிக்கின்றது.

சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவதற்கான காரணங்கள் வறுமையும் வேலையின்மையும்
சமூக, பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மையினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூல காரணமாக இருக்கின்றது (சர்வதேச தொழிலாளர் தாபனம், 2002). பேரின மட்டத்தில் நோக்குகையில் ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுகின்ற போது அந்நாட்டின் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்ற நிலை குறைவடைந்து செல்லும்.

சீனாவில் உன்னதமான உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினையடுத்து 1970 களிலிருந்து அந்நாட்டில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலானது மிகத் துரித நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. (Basuand Tzannators, 2003). ஒரு நாட்டின் வறுமை நிலையும் தொழிற்படையில் சேர்ந்தவர்களில் அதிகமானோர் தொழிலற்று இருப்பதும் அந்நாட்டின் சிறுவர்களை தொழிலாளர்களாய் ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துவிடுவதாக பல நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்துறையினரது வருமானம் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலுக்குமிடையே எதிர்க்கணிய தொடர்பு காணப்படுகின்றது எனலாம். பெருந்தோட்டத்துறையில் குடும்பப் பருமன் உயர்வாக இருத்தல், குறைந்த கூலி வீதம் என்பன வறுமையை தோற்றுவிக்க, அது சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலையினை உயர்த்தியுள்ளது.

கல்வி

இலங்கையின் தேசிய ரீதியிலான கல்வி மட்டத்துடன் ஒப்பிடுகின்ற போது பெருந்தோட்டத் துறையின் கல்வி மட்டமானது மிகக் குறைவாக இருப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வகையில் தோட்டத்துறையிலேயே பாடசாலை இடைவிலகல் வீதம் உயர்வாக காணப்படுகிறது. குறைவான கல்வி மட்டமும் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செலுத்தும் காரணியாகவுள்ளது. அத்துடன் பெண்களின் கல்வியில் ஏற்படும் அதிகரிப்பானது அவர்களின் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு நிலை, கல்வி என்பவற்றுடன் நேரான தொடர்பினை கொண்டுள்ளது.

சிறந்த கல்வியை பெற்ற தாய்மார்கள் சிறந்த வகையில் பிள்ளைகளை வழிநடத்துவார்கள் (Wolpin, 1994 ) இலங்கையில் பெண்களின் எழுத்தறிவு வீதமும் பாடசாலை சேரும் வீதமும் ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை விட மிக உயர்வான நிலையல் காணப்படுவதாக 2005 ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கு தோட்டத் துறையில் பெண் கல்வி வீதம் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த நிலையில் காணப்படுகின்றது (சுயதநனெசயn, 2007). எனவே பெண் கல்வியறிவும் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதில் பாரிய பங்களிப்பினை செலுத்தும் காரணியாகவுள்ளது.

குடும்பப் பிளவும் தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள குடும்பங்களும்

பெருந்தோட்டத்துறையில் சிறுவர்களைத் தொழிலுக்கு தூண்டும், தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக குடும்பப் பிளவு என்ற அம்சம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆய்வுத் தகவல்களின்படி 14 வயதிற்குக் கீழ் சிறுவர் தொழிலாளராக உள்ள பிள்ளைகளில் 20 வீதமான பிள்ளைகளின் தகப்பன்மார்களும் 05 வீதமான பிள்ளைகளின் தாய்மார்களும் குடும்ப பிரச்சினைகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். மேலும் 07 வீதமான பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரும் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு பெற்றோரை மட்டும் கொண்டுள்ள பிள்ளைகள் தொழிற் சந்தையில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் எந்த விதத்திலும் அனுபவிக்க முடியாத இப்பிள்ளைகளின் நிலை பற்றி அக்கறை கொள்ளாது தொழிலுக்கு தள்ளப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.
இதனை விடவும் பெற்றோரின் மத்தியில் காணப்படும் மதுபாவனைப் பழக்கமும் பெரிதும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கான காரணமாக உள்ளதை ஆய்வின் போது காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான பெற்றோர் தமது வருமானத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான பகுதியினை மதுபாவனைக்கு செலவழித்து விட்டு தம் சிறார்களை எஜமான்களின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?

சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள்

சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் சிறுவர்களினது தொழில் நிலைமைகள் மிக மோசமாக காணப்படுகின்றது. இதன் விளைவாக அச்சிறுவர்கள் இளம் பராயத்தை அடையும் போது அவர்கள் தரம் குறைந்த சுகாதாரத்தினைக் கொண்டவர்களாகவும், குறைந்த கல்வித் தரத்தினைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய போக்கு அடுத்த தலைமுறையிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு வழி வகுக்கிறது.

பெருந்தோட்டத்துறையைப் பொறுத்த வரை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால் அவர்களது வாழ்க்கையில் பல சிறந்த சந்தர்ப்பங்களை இழக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவையாவன்

  • இளம் பருவத்தில் தொழில்வாய்ப்பு குறைவாக காணப்படும்.
  • அவர்களது குறைந்த முதலீட்டால் தொழிற் சந்தையில் குறைந்த வருமானத்தையே உழைக்க முடியும்.
  • குறைந்த கல்வித் தரம் அவர்களது தொழில் சார் திறனை வளர்க்கும் இயலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.
  • அவர்களது தலைமைத்துவம் குறைந்த தரத்திலேயே காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட மனநிலை உள்ளவர்களாகவும் சமூகத்தின் மீது வெறுப்புணர்வுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.
  • பல சிறுவர் தொழிலாளர்கள் சமூக விரோதிகளாவும், குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்றனர்.

(தொடரும்...)

Monday, September 22, 2008

1931ம் ஆண்டு இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

இலங்கையை தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து, மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச் சட்டத்தால் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளரில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.

1931இல் இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் தோட்டப்பகுதிகளில் கணிசமான அளவு அரசியல் பிரச்சாரம் நடைபெற்றது. எஸ்.பி. வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), பெரிசுந்தரம் (ஹட்டன்), ஆகிய இரு இந்திய வம்சாவழியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரி சுந்தரம் புதிய அரச கவுன்சிலில் (ஸ்டேட் கவுன்சில்) தொழில், கைத்தொழில் வர்த்தக மந்திரியானார். 1936 இல் இந்திய வாக்காளர்களின் தொகை 1,45,000 ஆக உயர்ந்தபோது தோட்டப்பகுதியில் அரசியல் குழப்பம் புதுப்பிக்கப்பட்டது. 1936ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு இந்தியர்களான எஸ்.பி வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), கே. நடேச ஐயர் (ஹட்டன்) ஆகிய இரு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐந்து வருடத்துக்கொரு முறை பொதுத் தேர்தல் நடப்பதால் 1941ஆம் ஆண்டு தேர்தலுக்காக மிகுந்த தயாரிப்புகள் இடம் பெற்றன. (ஆனால் இரண்டாம் உலகப் போரினால் இது பின் போடப்பட்டது) இவ்வாண்டில் இந்திய வாக்காளர் தொகை 2,25,000 ஆக உயர்ந்தது. தோட்டத்துறையில் தேர்தல் உற்சாகம் பரவியதும், 1939க்குப் பின்னர் பரவிய தொழிற்சங்க ஆதரவும் அரசியல் விழிப்புக்கு வழிகோலியது.

-இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்- குமாரி ஜெயவர்த்தனா-

தோட்டப்புற வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு


மலையக தோட்டப்புற வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. பயிற்சி பெற்ற வைத்தியர்களோ, அல்லது தாதியர்களோ இங்கு இருப்பதில்லை. ஒரு சில வைத்தியசாலைகள் தங்குமிட வசதியுடன் காணப்படுகின்ற போதிலும் ஏனையவை உரிய சுகாதார வசதிகளுமற்ற, படுக்கையறை வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன இல்லா நிரையே காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மருந்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏல்லா நோய்களுக்கும் ஒரே விதமான மருந்துகளே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் தனியார் மருந்துசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க உள்ளதாக கடந்த தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை

மாத்தளை ரத்வத்தை- பன்சல தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவதால் தொழிலாளர்கள் வெலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இ.தொ.கா பிரதிநிதி தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் தற்போது மீண்டும் வாரத்தில் மூன்று நாட்களே வேலை வழங்குவதால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்க போவதாக தெரிவிக்கின்றனர்.

Sunday, September 21, 2008

மலையக மக்களின் நாட்டுரிமையை பறித்த சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றம்

1830 களில் தோட்டத் தொழிலாளர்களின் வருகைக்கும், 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த இரண்டு பிரதான சட்டங்கள் இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடு அல்லாமல் இம் மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின், அரசியல் அநாதைகளாக்கி விட்டன. அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டங்கள்தான் 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டமும், 1949ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்களின் பாரதூரம் அன்று அவ்வளவாக தெரியவில்லை. மலையகத் தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல், அரசியல் அநாதைகளாக்கப்பட்டு சமகால அரசியலில் அவர்கள் அனுபவித்த மிக மோசமான இன அடக்குமுறை இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளது.

இந்த மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறம் தள்ளப்பட்டு, இந் நாட்டின் ஓரம் காட்டப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச் சட்டங்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இந்தச் சட்டங்களிலே காணப்பட்ட மிக மோசமான, ஆனால் நுணுக்கமான ஒடுக்கு முறையை பிரித்தானியர்கள் கண்டு கொள்ளது, சிங்கள பெருந்தேசிய வெறியர்களை திருப்திப்படுத்துவதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே இச்சட்டம் மீறுவதாக அமைந்தது.

சமகால அரசியல்- லோறன்ஸ்

Saturday, September 20, 2008

தொடர்ச்சி

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

- ஷோபனாதேவி இராஜேந்திரன் -

முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பற்றி குறிப்பு சிறுவர்களின் தொழில் நிலை. இங்கு தொழில் நிலை என்கின்ற போது அது சிறுவர்களின் சமூக அந்தஸ்தினையும் சிறுவர் பராய நடவடிக்கைகளையும் குறிப்பிடுகின்றது. பிள்ளைகளின் சிறந்த உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான பங்குபற்றலும் எந்தவொரு சமூகத்தினையும் உத்தம அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும். சிறுவர்களின் தொழில் நிலை பற்றிய தகவல்களை அட்டவணை 02 இல் காணலாம்.

பெருந்தோட்டத்துறையில் 06 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்பிள்ளைகளும் 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல்களின் படி பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். மேலும், 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித்திரிகின்றனர்.

முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் தொழில் வகைகள்

வேலையின் வகைக்கேற்ப தொழிலானது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரத் தொழில் புரியும் சிறுவர்களின் தொழில் வகையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுள் 50.5 வீதமான சிறுவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகத் தொழில் புரிகின்றனர். அதிலும் 85.5 வீதமான சிறுவர்கள் பெண்களாவர். இத்தொழிலானது தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புற வீடுகளிலேயே காணப்படுகின்றது. இச்சிறுவர்கள் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் ஏலவே வீடுகளில் தொழில்புரிந்து பல இன்னல்களை அனுபவித்து தற்போது வீடு திரும்பி மீளவும் தொழிலை நாடி நிற்கும் சிறுவர்களிடமிருந்தே பெறப்பட்டது.
இச்சிறுவர்கள் காலை 5.00 மணி - இரவு 9.00 மணி வரை தொடர்ந்தும் வேலைசெய்ய வேண்டும். இவர்களுக்கு மதிய உணவிற்காக குறைந்த நேரமே (30 40 நிமிடங்கள்) வீட்டு எஜமான்களால் அனுமதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி, வீட்டு பணியாட்களாக தொழிலுக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இங்கு தொழில்புரியும் சிறுவர்களின் உரிமைகள் முழுமையாகவே மீறப்படுகின்றன. அவர்களது சுயமான சிந்தனை, செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படுவதில்லை.
பெற்றோரின் அன்பினையும் பாதுகாப்பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களது எஜமானின் துன்புறுத்தல்களும் ஆதிக்கங்களும் பாரபட்சங்களுமே கிடைக்கின்றன. மேலும், இச்சிறார்கள் பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


வீட்டுப் பணியாட்களாக தொழில்புரிந்த சிறுவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்களது கசப்பான உண்மை சம்பவங்கள் கண்ணீர்த் துளிகளாலும் விரக்தி வார்த்தைகளாலும் பொங்கி எழுந்தன. உதாரணமாக 14 வயதுடைய ஒரு பெண் சிறுமியின் ஆதங்கம் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டது;

“நான் கொழும்பில் மிகப் பெரிய பணக்கார வீட்டில் மூன்று வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த எஜமானின் பிள்ளைகள் விளையாடும்போது எட்டிப்பார்த்து உதைவாங்குவேன். பசியில் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு பல தடவைகள் அடி வாங்கினேன். எஜமான் மட்டுமல்ல, அவர்களது இரு பிள்ளைகளும் என்னை அடிப்பார்கள், உதைப்பார்கள் எனக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கு வீடு போக வேண்டும் என அழுதபோது என்னை மிரட்டி சூடு வைத்தார்கள். (இதோ அந்த அடையாளம் என்று காட்டினாள்). அந்த வீட்டு நாயின் சொகுசு கூட எனக்குக் கிடைக்கல. அநியாயம் நாயா பிறந்தா நல்லா இருக்கலாம் என நினைத்துள்ளேன். எனக்கு காய்ச்சல் வருத்தம் வந்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைச்சாங்க. ஆனால், அப்பா என்னை வேற வீட்டுக்கு அனுப்பப் போறாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
இத்தனை துயரங்களை தாங்கி வந்த சிறுமிக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மீண்டும் அவளின் பெற்றோர் புதிய இடத்தில் வேலை தேடுகின்றனர். இதேபோல், பல சிறுவர்கள் சிறுமியர்களிடம் கலந்துரையாடிய போது பல உடல், உள ரீதியான இம்சைகளிலிருந்து தம்மை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.


மேலும், வீட்டுப் பணியாட்களாகப் பணிபுரியும் சிறார்கள் உடல்சார் துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களது பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அல்லது அவர்களது பெற்றோர், உறவினர்கள் இது தொடர்பாக நியாயம் கேட்க முடியாத ஒரு துர்ப்பாக்கியசாலிகளாக காணப்படுகின்றனர். மாறாக, அப்பிள்ளைகள் வீட்டுப் பணியாட்களாக பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி அறிந்த பின்பும் கூட மீண்டும் மீண்டும் அச்சிறார்கள் அந்த நச்சு வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிப்பதை இவ்வாய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. வேலைப்பளுவினை மட்டும் இச்சிறார்கள் சுமக்கவில்லை. கூடவே துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்தே சுமக்கின்றார்கள். இதனை விடவும் 24.8 வீதமான சிறுவர்கள் சிறிய கடைகள், உணவு விடுதிகள், வீதியோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய தொழில்களில் பெரும்பாலும் ஆண் சிறுவர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். (அட்டவணை 3) இவர்களும் வீட்டுப் பணியாட்களாக பணிபுரியும் சிறுவர்களைப் போலவே பல்வேறு இம்சைகளுக்கும் ஆளாகின்றனர். அச்சிறுவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் பழுதடைந்த உணவு கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் செய்தனர். இதனை விடவும் எவ்வித பொழுதுபோக்கோ, ஓய்வோ அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் மிக நீண்டநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் அச்சிறுவர்கள் குறிப்பிட்டார்கள்.

சிறுவர்கள் 14 வயது வரை கட்டாயக் கல்வி கற்க வேண்டும் என இலங்கைச் சட்டம் காணப்பட்ட போதும் அந்த கட்டாயக் கல்வியைக் கூட பெறமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக இந்த சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு மனிதனின் அபிவிருத்தி செய்முறையில் பங்குபற்றவும் அவனது திறனை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அடிப்படைக் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும்.

தொடரும்…..

Friday, September 19, 2008

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம்

- ஷோபனாதேவி இராஜேந்திரன்-

பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சராசரியாக 8,000 ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக கொண்டுவரப்பட்டனர். (சுயுஊர்நுடு, 1989) பெருந்தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களையும், சிறுவர்களையும் மலிவான கூலியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையினால் இவர்களை தோட்டத் தொழிலில் அமர்த்துவதில் தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவந்தனர். அதிலும் குறிப்பாக பெண்தொழிலாளர்களைக் காட்டிலும் சிறுவர் தொழிலாளர்களை மலிவான கூலியில் பெறமுடியும் என்பதை அறிந்து தோட்ட உரிமையாளர்கள் தோட்டத்துறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு சேர்க்கின்ற போது குடும்ப இடப்பெயர்வினை பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்,பெண் குறைந்தபட்ச கூலி வீதத்தினை விட சிறுவர்களின் குறைந்தபட்ச கூலியானது குறைவாகவே காணப்பட்டது ( அட்டவணை 01) எனினும், 1939 ஆம் ஆண்டில் இலங்கை கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தியமையும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதையடுத்துத் தோட்டத்துறைச் சிறுவர்களைத் தொழிலில் சேர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இச்சிறுவர்கள் தோட்டத்துக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அட்டவணை- 01குறைந்தபட்ச கூலி வீதம்

நாட்சம்பளம்
ஆண் 38
ண் 28
சிறுவர் 19
மூலம் - மத்திய வங்கி - 1960

இக்காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் கல்வி தொடர்பான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1970 ஆம் ஆண்டு வரை தேசிய ரீதியிலான கல்விக் கொள்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளைச் சென்றடைந்தன (வுர்யுNயுசுயுதுஇ 2004) ஆனால், இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1945 ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை கொண்டுவரப்பட்டது. எனினும், பெருந்தோட்டத்துறை கல்விமுறை தேசியக் கல்வி முறையோடு ஒன்றிணைக்கப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத்துறை கல்வியானது மிகவும் தரம் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இவ்வகையில் நோக்கும் போது குறைந்த கல்வி நிலையும் அவர்களின் குடும்ப வறுமையுமே சிறுவர் உழைப்பிற்கான பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளரவிடாது தடுப்பதுடன் மாறாக, ஓர் ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி பின்னடைவு அச்சமூக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றது.
எனவே, இவ் ஆய்வுக் கட்டுரையானது பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களின் உழைப்பினைப் பகுப்பாய்வு செய்வதுடன் அவற்றினைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள ஐந்து வீதமான தோட்டங்கள் (பத்து தோட்டங்கள்) எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 0614 வயதிற்குட்பட்ட 225 பிள்ளைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இவர்களில் 100 பேர் ஆண்பிள்ளைகள். ஏனைய 125 பேரும் பெண் பிள்ளைகளாவர்.தோட்டங்களில் தொழில் புரியும் சிறுவர்களைப் பகுதிநேர தொழில் புரியும் சிறுவர்கள், முழுநேர தொழில் புரியும் சிறுவர்கள் என இருவகையில் உள்ளடக்கலாம். ஆனால், இக்கட்டுரை முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிலேயே கவனம் செலுத்துகின்றது.
(தொடரும்..)
தினக்குரல்

அரச, தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் இல்லை

இரத்தினபுரி மாவட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது சிங்களம், ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாட வேண்டியுள்ளது. இதன்போது குறிப்பிட்ட நபர் தரகுப்பணம் எதிர்பார்ப்பதாகவும் இதனால் தமது வைப்பில் குறிப்பிட்ட பணம் தரகுப் பணத்திற்காக இழக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில தோட்டத் தொழிலாளர்கள் தமது சேவைக்கால பணம் ஊ.சே.நி., ஊ.ந.நி. போன்ற இன்னோரன்ன கொடுப்பனவுகளை காசோலையினூடாக பெறும் பட்சத்தில் அதனை மாற்றுவதற்கு தரகர்களை நாட வேண்டியுள்ளது. இதன் போது தரகர்களால் பணம் தரகர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதனையறியாத தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஓய்வூதியம் பெற்றும் தமது கடைசிக் காலத்தில் தமது உழைப்பில் பெற்ற பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இம் மாவட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பான் ஆசியா வங்கி, செலான் வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, பிராக்தன வங்கி, சனச வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் தலைமைக் காரியாலயங்களும் பிராந்திய காரியாலயங்களும் இருந்தபோதும் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை. எனவே தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்குமாறு அப்பிரதேச மக்கள் கோருகின்றனர்

தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 5,000 - இ.தொ.கா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 5,000 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் தினசரியாக வாழ்க்கைச் செலவுக்கு போராடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்தொகை போதுமானதல்ல. எவ்வாறாயினும் சகல மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும். இதுவரை 3,000 மாத்திரம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 18, 2008

அகதிகளாக தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க சட்டமூலம்

இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 90,000 பேர் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் இதில் 28,500 பேர் இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ பிரஜாவுரிமை இன்றி அங்கு வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமூலத்தில் இடம் இல்லாத நிலையில் அதை திருத்துவதற்காகவே இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, 1988 ஆம் ஆண்டு 39 ஆவது இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான திருத்தம். மற்றது, 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலமாகும்.

இனமுறுகல் தீர்வுகாண ஜனாதிபதிக்கு முறைப்பாடு

கேகாலை ருவன்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் காரணமாக ஏற்படவுள்ள இனமோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அவ்வாறு கட்டுப்படாத பட்சத்தில் இனவாதிகளும் சந்தர்ப்பவாதிகளுமே இதில் பயனடைவார்கள் என்றும் ஒன்றுமறியாத அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனரீதியிலான மோதலாக வடிவமைக்கப்படுமளவிற்கு இனவாத சக்திகள் விழிப்போடு இருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய முன்னணி யின் உப தலைவர் கணபதி கணகராஜ் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளில் தனி நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இன மத பேதமின்றி கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு சில விஷமிகள் இனவாத தாக்குதலுக்கு தூபமிட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான பெண்கள், குழந்தைகள் உட்பட 250 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல டெஸ்டர்போட் தோட்டத்தில் தோன்றியுள்ள இன முறுகல் நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும்


பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை

பிறப்புச்சான்றிதழ் இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், நிதியத்தின் இணைப்பாளருமான துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச்சான்றிதழ் இன்றி பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையை கருத்திற் கொண்டு இம்மக்களுக்கு துரித கதியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமான உத்தரவு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலகு முறையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பல விதிமுறைகள் குறைக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய இளைஞர் வலுவூட்டல் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட இருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் இளைஞர் வலுவூட்டல் அமைச்சினது அனுசரணையுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதனையொட்டி கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இச் செயற்றிட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் படி புதன்கிழமை நாவலப்பிட்டி,மற்றும் புசல்லாவ நகரத்திலும் இன்று வியாழக்கிழமை கண்டி மற்றும் மாத்தளை நகரத்திலும் நடைபெறுகின்றது.