Sunday, September 21, 2008

மலையக மக்களின் நாட்டுரிமையை பறித்த சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றம்

1830 களில் தோட்டத் தொழிலாளர்களின் வருகைக்கும், 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த இரண்டு பிரதான சட்டங்கள் இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடு அல்லாமல் இம் மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின், அரசியல் அநாதைகளாக்கி விட்டன. அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டங்கள்தான் 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டமும், 1949ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்களின் பாரதூரம் அன்று அவ்வளவாக தெரியவில்லை. மலையகத் தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல், அரசியல் அநாதைகளாக்கப்பட்டு சமகால அரசியலில் அவர்கள் அனுபவித்த மிக மோசமான இன அடக்குமுறை இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளது.

இந்த மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறம் தள்ளப்பட்டு, இந் நாட்டின் ஓரம் காட்டப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச் சட்டங்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இந்தச் சட்டங்களிலே காணப்பட்ட மிக மோசமான, ஆனால் நுணுக்கமான ஒடுக்கு முறையை பிரித்தானியர்கள் கண்டு கொள்ளது, சிங்கள பெருந்தேசிய வெறியர்களை திருப்திப்படுத்துவதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே இச்சட்டம் மீறுவதாக அமைந்தது.

சமகால அரசியல்- லோறன்ஸ்

No comments: