அகதிகளாக தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க சட்டமூலம்
இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 90,000 பேர் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் இதில் 28,500 பேர் இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ பிரஜாவுரிமை இன்றி அங்கு வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமூலத்தில் இடம் இல்லாத நிலையில் அதை திருத்துவதற்காகவே இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, 1988 ஆம் ஆண்டு 39 ஆவது இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான திருத்தம். மற்றது, 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலமாகும்.
இனமுறுகல் தீர்வுகாண ஜனாதிபதிக்கு முறைப்பாடு
கேகாலை ருவன்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் காரணமாக ஏற்படவுள்ள இனமோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அவ்வாறு கட்டுப்படாத பட்சத்தில் இனவாதிகளும் சந்தர்ப்பவாதிகளுமே இதில் பயனடைவார்கள் என்றும் ஒன்றுமறியாத அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனரீதியிலான மோதலாக வடிவமைக்கப்படுமளவிற்கு இனவாத சக்திகள் விழிப்போடு இருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய முன்னணி யின் உப தலைவர் கணபதி கணகராஜ் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளில் தனி நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இன மத பேதமின்றி கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு சில விஷமிகள் இனவாத தாக்குதலுக்கு தூபமிட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான பெண்கள், குழந்தைகள் உட்பட 250 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல டெஸ்டர்போட் தோட்டத்தில் தோன்றியுள்ள இன முறுகல் நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும்
பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை
பிறப்புச்சான்றிதழ் இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், நிதியத்தின் இணைப்பாளருமான துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச்சான்றிதழ் இன்றி பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையை கருத்திற் கொண்டு இம்மக்களுக்கு துரித கதியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமான உத்தரவு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலகு முறையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பல விதிமுறைகள் குறைக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய இளைஞர் வலுவூட்டல் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட இருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் இளைஞர் வலுவூட்டல் அமைச்சினது அனுசரணையுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதனையொட்டி கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இச் செயற்றிட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் படி புதன்கிழமை நாவலப்பிட்டி,மற்றும் புசல்லாவ நகரத்திலும் இன்று வியாழக்கிழமை கண்டி மற்றும் மாத்தளை நகரத்திலும் நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment