அண்மையில் நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை கிளினிக்கில் 55 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசியினால் நோயாளர்கள் 23 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நோயாளர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்வைக் குறைபாட்டுக்கு, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் மிக முக்கிய காரணம் என்பதால், பார்வைக் குறைபாடுகளுக்காக வரும் நோயாளிகளுக்கு, பார்வைக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கே முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கமைவாகவே, நோயாளர்களுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி ஏற்றப்பட்டு பின்னர், மேற்படி 23 பேரும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளுக்குத் அனுப்பப்பட்ட நோயாளர்கள், பார்வையை முற்றாக இழந்துள்ளதுடன், அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் உறவினர்கள் உதவியுடன் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் கடந்த ஒருவார காலமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு ஓரளவு கண்பார்வை திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நல குறைபாடு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நியூயோர்க்கிலிருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சுகாதார பணிப்பாளர்நாயகம் தெரிவிக்கையில் இதுபோன்ற ஊசி வேறு வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டபோதும் நோயாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment