கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக, பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு தாங்கள் வதியும் தோட்டங்களிலேயே தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் நோக்குடன், தோட்டங்களை நிர்வகிக்கும் பணிகளில் அவர்களை இணைத்து, அவர்களது தகைமைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க, தோட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டக்கூடாது. தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு, முன்வர வேண்டுமென்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
“இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்கூட, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றார்கள். தோட்டங்களின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் இவர்கள், தமது பிள்ளைகள் தம்மைப்போல அல்லாமல் தாம் வாழ்கின்ற தோட்டங்களிலேயே தமது பிள்ளைகளுக்கு அந்தஸ்துள்ள தொழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளார்கள்.
“தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள், கட்டாயம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தோட்ட நிர்வாகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
“படித்த இளைஞர்,யுவதிகளுக்கு பெருந்தோட்டங்களிலேயே, அவர்களது தகைமைக்கு ஏற்பட்ட தொழில்வாய்ப்புகள் வழங்கப்படாமையால், இளைஞர்,யுவதிகள் நகர்புறங்களை நோக்கி செல்கின்றனர். நகர்புறங்களில் தொழில்புரிவோர், அன்றாட வீட்டுத் தேவைகளை கவனிக்க முடியாமலும், குறிப்பாக தமது வாழ்க்கையோடு ஒப்பிட்டும் அடையாள அட்டை பெறுவதிலும் வாக்காளர் பதிவு போன்ற விடயங்களில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடுகின்றார்கள். இது எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிலைக்கு தோட்ட நிர்வாகங்களே பொறுப்புக்கூற வேண்டும். முகவரி இழந்த நிலைக்கு நம்மவர்கள் தள்ளப்படக் கூடாது. 22 தோட்டக் கம்பனிகளோடு கட்டம் கட்டமாக, பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்ற நிலையில் தோட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தோட்டக் காரியாலயங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலைகளில் மேற்பார்வையாளர்களாக, வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே முன்வைத்திருந்தோம். இதன்படி தோட்ட நிர்வாகங்கள் கரிசனைக் கொண்டு தோட்டங்களிலே தொழில் பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் நிர்வாகங்களிலே தங்கியுள்ளது. இவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தகுதி அடிப்படையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment