Wednesday, October 19, 2016

ரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா

தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களே, 110 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கேனும் காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ள விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, “தொழிற்சங்கங்கள், தமது கடமைகளை உணர்ந்து செயற்படத் தவறியுள்ளன” என்றும் சாடியுள்ளார்.  
“இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கு, 500 ரூபாய் என்பது எவ்வகையிலும் போதாது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு, எவ்வித சம்பள அதிகரிப்புகளுமின்றி வாழும் தொழிலாளர்கள், வெறும் 500 ரூபாயில் எவ்வாறு வாழ்க்கையை ஓட்டப்போகின்றனர் என்பது கேள்விக்குறியே” எனவும் அவர் கூறியுள்ளார்.   
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   
“கூட்டொப்பந்த விவகாரத்தில், 730 ரூபாய்க்கு இணக்கப்பாடு எட்டப்பட்டு கூட்டொப்பந்தமும் கைச்சாதிடப்பட்டுவிட்டது. 2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.   
தொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, அரசாங்கமோ இதனை கவனத்தில்கொள்ளத் தவறியதன் காரணமாகவே, தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.  
இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு, கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது.   அத்துடன், வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதனால், அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கும் பல இலட்சம் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் முதலாளிமார் சம்ளேமனமும் தொழிற்சங்கங்களுமே காரணம்.  
2015ஆம் ஆண்டுக்கான கூட்டொப்பந்தம் நிறைவடைந்தவுடனேயே, புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் இடபெறாது தவிர்த்திருக்கலாம். தொழிற்சங்கங்களும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவில்லை. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நல்லாட்சி அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.   
ஆரம்பத்தில் 1 சதத்தைக்கூட சம்பள உயர்வாக வழங்க முடியாது என்று கூறிய முதலாளிமார் சம்மேளனம், 110 ரூபாயையேனும் சம்பள உயர்வாக வழங்குவதற்கு முன்வந்தமைக்கு தொழிலாளர்கள் கொடுத்த அழுத்தமே காரணமாகும்” என்றார்.   
“1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையையே தொழிலாளர்கள் தற்போது சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்மதமின்றியே கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தமானது, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கிடையில், எவ்விதமான சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வெறும் 500 ரூபாயில், இன்றுள்ள வாழக்கைச் செலவைகூட கொண்டு நடத்தமுடியாத தொழிலாளர்கள், இன்னும் 24 மாதங்களுக்கு இந்தத் தொகையுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்தபோகின்றார்கள் என்பது கேள்விக்குறியே” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments: