மண்சரிவு ஏற்பட்டு 16 உயிர்களை காவு கொண்ட புளத்கொஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்களுக்கு வேறு எங்காவது வீடுகளை அமைத்து தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்றாட்டமாக கோருகின்றோம் என்று புளத்கோஹுபிட்டிய மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். தயவு செய்து களுபான தோட்டத்திற்கு செல்லுமாறு எங்களை வற்புறுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்பட்ட இடமாகவே பார்க்கின்றோம். எங்களால் இனிமேல் புளத்கோஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிம்மதியாக வாழவே முடியாது என்றும் அந்த மக்கள் குமுறுகின்றனர்.
புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து, அங்கிருந்து இடம்பெயர்ந்து யக்கல மகாவித்தியாலயத்தில் 57 குடும்பங்கள் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அந்த மக்கள் இந்த உருக்கமான கோரிக்கையை முன்வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் துயரத்தை வெளியிடுகையில்,
உங்களிடம் ஒருவிடயத்தை மன்றாடிக் கோருகின்றோம். நாங்கள் கோருகின்ற இந்த விடயத்தை தயவு செய்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்தில் நாம் இதுவரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்பட்ட மண்சரிவினால் எமது உறவுகள் 16 பேரை இழந்துவிட்டோம். அந்த 16 பேரும் மண்னோடு மண்ணாக புதைந்து போகினர்.
அந்த வகையில் பார்க்கும்போது புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டம் வாழ்வதற்கு ஆபத்தான இடமென்பது நிருபனமாகிவிட்டது. எனவே எக்காரணம் கொண்டும் இதன்பின்னர் புளத்கோஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு நாங்கள் செல்லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒருபோதும் நிம்மியாக வாழ முடியாது.இதனை புரிந்து கொள்ளுங்கள். எமது நிலைமையை உணருங்கள். எமது 16 உறவுகளை பரித்தேடுத்த அந்த தோட்டத்தில் எம்மால் இனி வாழ முடியாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்கிருந்து கொண்டு வேண்டுமானால் களுபான தோட்டத்திற்கு தொழிலுக்காக சென்று வரமுடியும். ஆனால் களுபான தோட்டத்தில் வாழ மாட்டோம்.
மண்சரிவு ஏற்பட்டதன் பின்னர் எமது பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்பரம் புதிய வீடுகளை அமைத்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் களுபான தோட்டத்தில் எமக்கு வீடுகளை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடுகளை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.
No comments:
Post a Comment