நல்லாட்சி அரசாங்கத்தின் மலையக பிரதிநிதிகள், தரகர்களுக்கூடாக வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி மலையக இளைஞர், யுவதிகளை முட்டாள்களாக்க திட்டமிட்டுள்ளனர். தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு தரகர்கள் தேவையில்லை என்று அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் கூறினார்.
'மலையக இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி, அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக அமைச்சர்கள் சிலர், ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் இளைஞர், யுவதிகளை வரவழைத்து நேர்முக பரீட்சை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், 'ஒரு காலத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். அக்காலத்தில் ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்ளும் தகுதியை கொண்டவர்களாக மலையகத்தில் மிக, மிக சொற்ப தொகையினரே இருந்தனர். ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான ஆசிரியர் தேவையை நிவர்த்திக்க தேவையான பட்டதாரிகள் மலையகத்திலேயே இருக்கின்றனர். 1982, 1983ஆம் ஆண்டுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமான் 500 ஆசிரியர் நியமனங்களை மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளது' என்றார்.
'அன்று தோட்டங்களில் மாட்டு பட்டிகள்போல் காணப்பட்ட பாடசாலைகள் மாடி கட்டடங்களாக மாறியுள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானவர்கள் அரசதுறைகளில் தொழில்களை பெற்றுள்ளனர். இவ்வாறு எண்ணிலடங்காத சேவைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக சமூகத்துக்காக முன்னெடுத்துள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார். 'அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் குவிந்த வண்ணமுள்ளன. அதனை எமது இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்காமல் அவர்களை முட்டாள்களாக எண்ணி தனியார் துறைகளிடம் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வருகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள எமது இளைஞர், யுவதிகள் ஏமாளிகள் அல்ல. எனவே, நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment