இனவாதத்தை வேரறுத்து அமைதிச் சூழலை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. தூரநோக்குடன் செயற்படும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்கள் பெரிதும் நன்மையடைவர். மேலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்று ம.ம.மு செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்தகால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அரசாங்கமாக இருந்தது. நாட்டு மக்கள் இனவாத சிந்தனைக்குள் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை கூட அனுமதிக்காத நிலையில் சில இனவாதிகள் உள்ளனர். எனினும் புதிய அரசாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்தஸ்தினை வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
19 ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையில் தற்போது பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகால இலக்கினைக் கொண்டனவாக விளங்குகின்றன. தூரநோக்குடன் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்மையடைவர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரு தாயின் மக்களாக கைகோர்க்கும் நிலை உருவாகும். மேலும் மலையக மக்கள் உள்ளிட்ட சகல இன மக்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எமக்கு நிறையவே உள்ளது. விலைவாசி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் உடனடியாக பலனைத் தரும். எனினும் தூரநோக்குடன் செயற்படும் போது அதன் பலன்கள் உடனடியாக வெளித்தெரிவதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். நீண்ட காலப்போக்கில் நன்மைகள் வெளித்தெரியும். நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அரசின் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்துதல் வேண்டும். எழுந்தமானமாக கருத்துகளை தெரிவிப்பது பிழையானதாகும். நாட்டில் இப்போது இனவாத சூழல் மெதுமெதுவாக குறைந்து கொண்டு வருகின்றது.
இனவாதம் பேசும் ஒரு குழுவினர் இன்னும் அரசியலில் இருந்து வருகின்றனர். இவர்கள் மக்களின் நலன்களை கிஞ்சித்தும் சிந்திக்காத சுயநலவாதிகளாவர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதன் ஊடாக தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்தோரையும் வாழவைப்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. இத்தகையோரின் வழியில் செல்வதற்கு நாட்டு மக்கள் இனியும் தயாராக இல்லை. வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அடிப்படையாக கொண்டு இனவாதிகள் தம்மை திருத்திக் கொள்வது மிக மிக அவசியமாகும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இனவாதிகள் குந்தகமாக செயற்படுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment