அரசாங்கம், பெருந்தோட்டங்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் கூறியுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, தேயிலைத் தோட்டங்களை தொழில்சார் கடமைகளுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சில தோட்டக் கம்பனிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலாங்கொடை பிளான்டேசன் கம்பனியின் பொறுப்பிலுள்ள பதுளை மாவட்டத்தின் பல தோட்டங்களில், தேயிலை உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை, தொழிலாளர்;களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான முன்னெடுப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை தளிர்களை கொய்யவும் இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் எடுத்தல் மட்டுமே தொழிலாக இருந்து வருகின்றன.
இதனால், தோட்ட உத்தியோகத்தர்கள் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான உத்தியோகத்தர்களை கடமைகளிலிருந்து நீக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு சேமநலன் திட்டங்கள் எதுவும் தோட்ட நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை அமுல்படுத்தப்படுமேயானால், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் உத்தரவாதமோ அல்லது தொழில் பாதுகாப்போ இல்லாததோடு, ஆரோக்கியமற்ற சூழல் உருவாகும்.
அத்துடன், தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், பிரசவ சகாயநிதி, சேவைகாலப் பணம் போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இப்படிப்பட்ட உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளில் தொழில் செய்யும் வேளையில் விபத்துகள் ஏற்பட்டால், விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வாகன வசதிகளும் வழங்கப்படமாட்டாது. அத்துடன், நட்ட ஈடுகளும் கிடைக்காது. இந்நிலை நடைமுறைப்படுத்தப்படின், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வருவதுடன் வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்புகளை அடைய வேண்டி ஏற்படும்.
பெரும்பாலான தோட்டங்களில், ஆண் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி வெளியிடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். தொழிலின் நிமித்தம் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத பெண்கள், தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் இவ்விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன
No comments:
Post a Comment