நிலைமாற்று கால நீதி தொடர்பில்
பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும்
உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று
மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கீழே காணலாம்.
நிலைமாற்று கால நீதி தொடர்பில்
பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கும் செயன்முறையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும்
என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட
மக்கள் சார்பில் இன, மத, மொழி, பால்நிலை, பிரதேசம் கடந்து ஆலோசனைகளையும்
பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டோர்
கலந்தாலோசனை செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவின் செயல் வடிவம்
வெவ்வேறானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மலையக மக்கள் சார்பில்
மலையக சமூக ஆய்வு மையத்தின் பரிந்துரைகள் இதுவாகும்.
இலங்கையில் நிலைமாற்று கால நீதியை
வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை
செயன்முறையின்போது (Victim Consultation Process) இந்நாட்டின் குடிமக்கள்
என்ற வகையில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் விடயங்களையும்
கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
- பிரதிநிதித்துவம்
I பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயல்முறையினை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவில் மலையக சிவில் சமூக பிரதிநிதி ஒருவரும் உள்வாங்கப்படல் வேண்டும்.
II இக்குழுவில் 50% பிரதிநிதித்துவம் பெண்களைக் கொண்டதாக உறுதி செய்யப்படல் வேண்டும்.
- சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
- இணைப்புக் குழுவின் விடய பரப்புக்குள் மலையகத் தமிழர்களின் பின்வரும் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
I 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு.
II 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிப்பு.
III 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி
ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும்
இம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்கு நாடு
கடத்தப்பட்ட விவகாரம்.
IV 1958ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு
வரை மலையகப் பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் ஏற்பட்ட
பாதிப்புகள் (உயிர் மற்றும் சொத்துடமை) மற்றும் அதன் விளைவாக வட கிழக்குப்
பிரதேசங்களில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களினுடைய உரிமைகள்.
V வடக்கு கிழக்கில் உள்நாட்டுப் போர்
இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் போரின் விளைவாக மலையகத் தமிழ் மக்களுக்கு
ஏற்பட்ட பாதிப்புகள். குறிப்பாக சந்தேகத்தின் பேரில் மலையகத் தமிழர்கள்
கைதுசெய்யப்படல், தடுத்து வைத்தல், மனோ நீதியாக அவர்களுக்கு
ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள்/ வடுக்கள் போன்றவை.
VI 200 வருடகால வரலாற்றை இந்த நாட்டில் கொண்டுள்ள மலையகத் தமிழரின் காணியுரிமை அற்ற நிலையும், அவர்களின் வீட்டுரிமைப் பிரச்சினையும்.
VII அரசியல் யாப்பில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழி மலையகப் பிரதேசங்களில் முறையாக அமுல்படுத்தப்படாமை.
VIII அன்று முதல் இன்று வரை மலையகத்
தமிழர்கள் ஐதாக வாழும் மாவட்டங்களில்/ பிரதேசங்களில் மலையகத் தமிழரின்
இனத்துவ அடையாளங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் அல்லது
இனத்துவ அடையாளங்களை அழித்தல் என்ற விவகாரம்.
IX மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய கருத்தடைகள்.
X திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும்
பொருளாதார வளங்களை சூறையாடுதல் போன்ற வழிமுறை ஊடாக மலையகத் தமிழ் மக்களின்
இருப்பை கேள்விக்குறியாக்கியமை.
- இடம்
சாட்சியங்களை பதிவுசெய்வதற்கும், உண்மைகளை
வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பு இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு
வழங்கப்படுவது போன்று சமவாய்ப்பு மலையகத் தமிழருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக இந்த இணைப்புக் குழுவின் (Coordinating Committee) விசாரணைகள்
மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, தெனியாய
போன்ற நகரங்களிலும் மீரியாபெத்தை பிரதேசத்திலும் இடம்பெறல் வேண்டும்.
- காலமும் அவதானிப்பும்
மக்களுக்கு உண்மைகளையும்,
சாட்சியங்களையும் வழங்குவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செயற்பாடுகளை நிறைவுசெய்ய முடியாத பட்சத்தில்
கால எல்லை நீடிக்கப்பட வேண்டும். குறுகிய கால எல்லைக்குள் நிறைவுசெய்ய
வேண்டுமாயின் இணைப்புக் குழுவின் ஆளணி வலுவை அதற்கேற்ப அதிகரிக்கப்படல்
வேண்டும்.
மக்களின் உண்மைகளையும், சாட்சியங்களையும்
பதிவுசெய்யும் இடங்களுக்கு சர்வதேச அவதானிப்பாளர்களுக்கும், உள்நாட்டு
அவதானிப்பாளர்களுக்கும் எவ்வித தடையுமின்றி அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு
வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
- மொழி
உண்மைகளை கண்டறியும் போதும்,
சாட்சியங்களைப் பதிவு செய்யும்போதும் எந்தவொரு தனிநபரும் இன ரீதியாகவோ,
மொழி ரீதியாகவோ, பால்நிலை அடிப்படையிலோ, மத ரீதியாகவோ வேறுபாடுகளுக்கு
உட்படுத்தப்படக்கூடாது. பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தமது தாய் மொழியினை
பயன்படுத்தி கருமங்களை ஆற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
மலையக சமூக ஆய்வு மையம்
நன்றி- மாற்றம் இணையம்
No comments:
Post a Comment