இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித
உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம்
உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச
மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின்
பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட மக்களினங்களில் ஒன்றாக மலையகத் தமிழர்கள்
காணப்பட்டார்கள்.
இலங்கையின் சுதந்திரம் நோக்கிய பயணத்தில்
ஆங்கில கல்விகற்ற மத்தியதர வர்க்கங்களும், தமிழ் சிங்கள பிரபுத்துவ
வர்க்கங்களும் தமது அமைக்குடிகளாக மலையகத் தமிழர்களை கருதினார்களேயன்றி
அம்மக்களினத்தின் அடிப்படை உரிமைகள், மனிதஉரிமைகள், ஜனநாயக உரிமைகள் பற்றி
எண்ணிப்பார்க்கவும் தயங்கினர்.
1833களில் ஆரம்பமான காலனித்துவ கால
அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் படிப்படியாக முன்னோக்கிச் சென்று,
1947ஆம் ஆண்டில் சேர் வில்லியம் சோல்பரி யாப்பாக பரிணமித்ததுடன் தொடர்ந்த
மலையகத் தமிழருக்கெதிரான நிகழ்வுப்போக்குகள், இன்றைவரை வெவ்வேறுபட்டு
பரிமாணங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகளை
மீறுவதில் சகல ஆளும் குழுமங்களும், வர்க்கங்களும், இனப்பிரிவுகளும்,
பிரபுத்துவ, முதலாளி சக்திகளும், வலதுசாரிகள், இடதுசாரிகள்,
சந்தர்ப்பவாதிகள், தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒரே நேர்கோட்டில்
பயணிக்கின்ற விசித்திரத்தை இலங்கை தீவில் மட்டும் காணமுடிகின்றது.
1931ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித்
தேர்தல்களில் மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
இன்றுவரையும் உள்ளூராட்சி மன்றங்கள், மலையகத் தமிழருக்கு தோட்டத்
தொழிலாளருக்கு எத்தகைய சேவையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை
மீறி சேவை செய்த மத்திய மாகாணத்தின், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள
உடப்பளாத்தை பிரதேசசபை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவால்
கலைக்கப்பட்டது.
இலங்கைத்தீவின் 275,000 மக்கள் தொகை கொண்ட
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகமே இலங்கையில்
ஆகப்பெரியதாகும். இது மஹரகம பிரதேச செயலகத்தோடு ஒப்பிடுகையில் 30 பிரதேச
செயலகங்களை கொண்டிருக்க வேண்டிய பிரதேசமாகும். அதேபோல இலங்கையில் 425
பேருக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவு காணப்படும் போது நுவரெலியா
மாவட்டத்தில் 9500 பேர் வசிக்கும் கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் ஒரு கிராம
சேவகர் பிரிவே காணப்படுகின்றது. இது பாரதூரமான அரசியல், உரிமை மீறலாகும்.
மேலும், 1948ஆம் ஆண்டு பிராஜா உரிமை
பறிப்பு, 1949ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டம், 1958ஆம் ஆண்டின்
சிங்கள மொழிச் சட்டம், 1952ஆம் ஆண்டின் நேரு – கொத்தலாவலை உடன்படிக்கை,
1964ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974ஆம் ஆண்டு சிறிமா –
இந்திரா ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டின் ஜே.ஆர் – ரஜீவ் உடன்படிக்கை என்பனவும்
பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் அரசியல், குடியியல் உரிமைகளை மீறிய
செயற்பாடுகளாகும்.
மலையகத் தமிழர்களின் காணியுரிமை,
வீட்டுரிமை என்பன இன்றுவரை அங்கீகரிக்கப்படாமை, தொழில் உரிமைகள், பெண்
தொழிலாளர் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, தொழில்சார் நலன்களின்
பாதுகாப்பு என்பன மீறப்படுவதன் மூலம் அவர்களின் குடியியில் உரிமைகள்
மீறப்படுகின்றன. ஏழு தலைமுறையாக நிரந்தர சம்பளம் ஒன்றைத்
தீர்மானிக்கப்படாமை பாரதூரமான பொருளாதார உரிமை மீறலாகும்.
1958ஆம் ஆண் இனவெறி தாக்குதல், 1972
காணிச்சீர்திருத்தச் சட்டம், மலையக மக்களின் வாழ்வாதரம் அழிக்கப்பட்டமை,
1977, 1981, 1983, 1984, 1988ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழருக்கெதிராக
நிகழ்த்தப்பட்ட அரச ஆதரவுடன் கூடிய இனவெறி தாக்குதல்கள் கொலைகள், பாலியல்
வல்லுறவுகள், சொத்து அபகரிப்புகள் மூலமாகவும் பாரிய மனித உரிமை மீறல்கள்
மேற்கொள்ளப்பட்டன.
கல்வி வாய்ப்புகளில் காட்டப்படும்
பாரபட்சம், உயர்கல்வி மறுப்பு, சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர்
பாதுகாப்பின்மை, போசாக்கின்மை, வறுமை, என்பன மலையகத் தமிழருக்கெதிராக இன்று
நிகழ்காலத்தில் நிலவும் மனித உரிமை மீறல்களாகும்.
சுகாதார, மருத்துவ நலன்களை வழங்குவதில்
காட்டப்படும் பாரபட்சம், தாய் சேய் பாதுகாப்பு, பாராமரிப்பு, பாலியல்
சுரண்டல்கள், குடும்ப சமூக அமைப்புசார் ஒடுக்கு முறைகள் என்பன 21ஆம்
நூற்றாண்டின் அடிமைக்குழுமம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன எனலாம். இலங்கை
மலையகத் தமிழரை பொறுத்தவரை அவர்களின் அரசியல் உரிமைகள், குடியியல்
உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பொருளியல் உரிமைகள் என
எந்நிலை நின்று நோக்கினாலும் அவையனைத்தும் வரலாறு பூராவும் மீறப்பட்டு
வந்திருப்பதனையும், மீறப்பட்டு வருவதையும் காண முடிகின்றது.
இந்நிலைமை மேம்படுத்தும் எத்தகைய ஆக்கபூர்வமான பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வெட்கக்கேடான உண்மையாகும்.
பொன். பிரபாகரன்
நன்றி- மாற்றம் இணையம்
No comments:
Post a Comment