பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பள உயர்வினை பெற்றுக்
கொடுப்பதற்கு அரசியல் பலம் அவசியமில்லை. தொழிற்சங்க பலமும் பேரம்
பேசும் சக்தியுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் இதனையே
கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.
அந்தோனிமுத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கூட்டு ஒப்பந்த நவடிக்கைகள் தற்போது இழுபறியான தன்மையினை
அடைந்திருக்கின்றன. தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம்
கொடுத்து வருகின்ற நிலையில் உடனடியாக சம்பள உயர்வினை பெற்றுக்
கொடுக்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. எனினும் இது
சாத்தியப்படாமல் போயிருக்கிறது. 1970 முதல் 77 வரையான
காலகட்டத்தில் அமரர் தொண்டமான் எவ்விதமான அரசியல் பலமோ அந்தஸ்தோ
இல்லாது பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களையும் நடத்தி மலையக
மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். துன்ப துயரங்களை
தனதாக்கிக் கொண்டு துணிவுடன் செயற்பட்டார். அக்காலப்பகுதியில்
பெருந்தோட்ட மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த
நிலையில் முழு மலையகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை
நிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
சாத்வீக போராட்டங்களை நடத்திய அவருக்கு 1977இல்
பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. அமரர் தொண்டமான்
அரசியலில் கிங் மேற்கராக திகழ்ந்தார். அவர் நடத்திய பிரார்த்தனை
ரீதியிலான தொழிற்சங்க போராட்டமே பெருந்தோட்ட மக்களது பிரஜா
உரிமைக்கும் சம்பள உயர்வு மற்றும் சமசம்பளத்திற்கும் வித்திட்டது
எனலாம்.
உரிமை இல்லாதிருந்த மலையக சமூகத்திற்கு
உரிமைகளையும், முகவரியையும் தொண்டமானே பெற்றுக் கொடுத்தார் என்றால்
மிகையாகாது. மலையக மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அவரே உந்து
சக்தியாக இருந்தார் என்பதே உண்மையாகும்.
அரசியல் பலம் இல்லாத போதும் தொழிற்சங்க பலம், பேரம்
பேசும் சக்தி என்பன மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்
கொள்ள வழிவகுத்தது. இத்தகைய செயற்பாடுகள் ஒரு
முன்னுதாரணமாகவும் அமைந்தது. தொழிலாளர் சம்பள உயர்வு
விடயத்திலும் அமரர் தொண்டமானின் காய் நகர்த்தல்களை முன்னிறுத்தி
செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம்
கைச்சாத்திடப்படுகின்றது. இந்நிலையில் கம்பனிகள் நட்டம்
ஏற்பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில்
கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை
கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது
ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.
No comments:
Post a Comment