முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந் தோட்ட
தொழிற்சங்களுக்கும் இடையேயான இழுபறி நிலை காரணமாகவே தோட்டத்
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம்
கையெழுத்திடுவது கால தாமதமாவதாக தெரிவித்த அமைச்சர் ஜோன்
செனவிரத்ன ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம்
கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் உரையாற்றும் போதே தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள்
தொடர்பான அமைச்சர் ஜோன் செனவிரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இரண்டு
வருடங்களுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட
தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திடும் கூட்டு ஒப்பந்தத்தின்
மூலமே நடைமுறைப்படுத்தப்படும்.
டந்த மார்ச் 31 ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்பந்தம்
காலாவதியாகிவிட்டது. இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம்,
தோட்டத்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தேசிய ஊழியர் ஆலோசனை சபையுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
நானும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டேன்.
இதன்போது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட
வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
ஆனால் முதலாளிமார் சம்மேளனமும் இக் கோரிக்கைக்கு தமது
கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. 620 ரூபா வழங்குவதற்கு
முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது.
இதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்போது 770 ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான யோசனையை நான் முன் வைத்தேன்.
ஆனால் இதுவரையில் இத்தொகை தொடர்பில் முதலாளிமார்
சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் இணக்கப்பாட்டுக்கு வராது இழுபறி
நிலையிலேயே உள்ளது. எனவே தான் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு
தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடுவது காலதாமதமாகியுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் இரு தரப்பினரிடமும்
இணக்கப்பாட்டுக்கு வருமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது
ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இணக்கப்பாடு காணப்படாததனாலேயே
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment