வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் தாக்குதல் காரணமாக அதே தோட்டத்தை சேர்ந்த திலகேஷ்வரி (வயது 40), செலக்ஷன் (வயது 16) ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி ஓய்வூதிய கடிதங்களைப் வழங்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
மத்துரட்ட பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தில் மொத்தமாக 385 தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். ஒரு தொழிலாளிக்கு தலா 1,000 தேயிலை மரங்கள் வீதம் பிரித்து தருவதாகக் கூறி, அதற்கு தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 272 தொழிலாளர்களிடமிருந்து தோட்ட நிர்வாகம் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்;ளது. இதில் 150 தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்கான காசோலைகளும் வந்து விட்டன. இவர்களில் சிலர் இதற்கு உடன்படாததால் தோட்ட நிர்வாகம் அவர்களை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
இவ்வாறிருக்க தனி வீடொன்றில் வசித்து வரும் திலகேஷ்வரி என்ற பெண்ணின் வீட்டுக்கு நேற்று சென்ற தோட்ட அதிகாரி, கணக்கப்பிள்ளை மற்றும் தோட்ட குமாஸ்தாக்கள் தேயிலைச் செடிகளை பிடிங்கியதாக கூறி இப்பெண்ணிடம் முரண்பட்டுள்ளனர். இதன்போது தோட்ட அதிகாரி அப்பெண்ணை தாக்கியுள்ளார். தனது தாயை தோட்ட அதிகாரி தாக்குவதை கண்ட அப்பெண்ணின் மகன் அதனை தடுக்க முற்பட்டபோது அச்சிறுவனையும் தோட்ட அதிகாரி மற்றும் கணக்கப்பிள்ளை ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இவர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணக்கபிள்ளையை பொலிஸார் கைதுசெய்த போதும் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேலிடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, தோட்ட அதிகாரியை தாக்கியதாக கூறி தொழிலாளி ஒருவரை வலப்பனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.மாவுவா தோட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும் தொழிலாளர்களின் சந்தாவை பெறும் எந்த தொழிற்சங்கங்களும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தை கைவிட்டதை போன்று தொழிற்சங்கங்களும் நடந்துகொள்வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment