இலங்கையின் பெருந்தோட்டங்களை பொறுத்தமட்டில் தொழிலாளர்களை ஊக்குவித்து தொடர்ந்தும் பெருந்தோட்டங் களில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டிய ஒரு கட்டாய தேவையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஏனெனில் நீண்ட காலப் போக்கில், பெருந்தோட்டங்களில் முக்கிய பங்காளர்களாக திகழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் முற்றாக இல்லாமல் போகக்கூடிய ஒரு நிலை காணப்படுகிறது. இதற்கமைவாக, பெருந் தோட்ட கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளன.
இதில் ஓர் அங்கமாக மழைக்காடுகள் சான்றிதழ்களை குறிப்பிட முடியும். சூழல் பாதுகாப்புடன் நேரடி தொடர்புடைய இந்த மழைக்காடுகள் சான்றிதழின் மூலம் சூழல், பெருந்தோட்ட கம்பனிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் நன்மையடையக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் கம்பனியின் மூலம் பராமரிக்கப்படும் பெயார்வெல் எஸ்டேட் பகுதியில் இவ்வாறான மழைக்காடுகள் சான்றிதழ் செயன்முறை பின்பற்றப்படும் விதம் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது.
இதற்கமைவாக, பெயார்வெல் பெருந்தோட்டத்தின் பொது முகாமையாளர் சேனக அலவத்தேகம தமது பெருந்தோட்டத்தில் பின்பற்றப்படும் மழைக்காடுகள் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையில்,
'உண்மையில் மழைக்காடுகள் செயற்பாடுகள் என்பது கம்பனிக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் நன்மை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சான்றிதழை பொறுத்தமட்டில் நாம் கட்டாயமாக 10 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வருடமொன்றுக்கு ஒரு தடவை வழங்கப்படும் இந்த சான்றிதழானது, கடுமையான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து விதிமுறைகளும் ஒழுங்காக பின்பற்றப்படும்பட்சத்தில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாம் இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ள அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறுங்கால நோக்கில் கம்பனிகளுக்கு இந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது செலவீனங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்த போதிலும், நீண்ட காலப் போக்கில் அனைத்து தரப்பினர்களுக்கும் அனுகூலங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
மழைக்காடுகள் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பத்து தத்துவங்கள் பிரதானமாக பின்பற்ற வேண்டியுள்ளது. இவற்றில் சமூக மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ முறைமை, சூழல் தொகுதி பராமரிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பாரபட்சமற்ற நடைமுறையும் சிறந்த தொழில் சூழலையும் பணியாளர்களுக்கு வழங்கல், தொழில் சம்பந்தமான சுகாதாரமும் பாதுகாப்பும், சமூகத் தொடர்புகள், ஒன்றிணைக்கப்பட்ட பயிர் முகாமைத்துவம், மண் முகாமைத்துவமும் பராமரிப்பும் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவம் போன்றன உள்ளடங்குகின்றன.
இந்த தத்துவங்கள் தொடர்பில் சேனக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது என்பது ஆரம்பத்தில் மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. நாம் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தத்துவங்களை பின்பற்றி வருகிறோம். தொழிலாளர்கள் மத்தியிலும், தோட்;டத்தில் வசிப்பவர்கள் மத்தியிலும் இந்த தத்துவங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாம் சிறியளவிலான கருத்தரங்குகளை மாதாந்தம் முன்னெடுத்து வருகிறோம். இதற்கு மேலதிகமாக தோட்டத்தில் பணியாற்றும் தலைவர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட தொழிலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் ஊடாக இந்த மழைக்காடுகள் தத்துவங்கள் தொடர்பான முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும் இந்த விளக்கங்களை கொண்ட புத்தகங்கள் காணப்படுகின்றன.
மழைக்காடுகள் தத்துவங்களுக்கு அமைவாக ஊழியர்கள் மத்தியில் தற்பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக கிருமி நாசினி தெளித்தல் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பான ஆடைகளை வழங்கல், பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
நான் இங்கு 1975ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். எனது குடும்பத்தில் ஆறு பேர் காணப்படுகின்றனர். அதிகளவு கொழுந்து காணப்படும் பருவ காலத்தில், மாதமொன்றில் 15000 ரூபாவை நான் பெற்றுக் கொள்வதுண்டு. அந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தற்போது பெருந்தோட்டங்களில் பணியாற்றுவது என்பது இலகுவாக அமைந்துள்ளது. எமக்கு பிளாஸ்ரிக் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. பறித்த கொழுந்தை நிரப்பிக் கொள்ள பைகள் காணப்படுகின்றன. கொழுந்தை நிறுப்பதற்கு அதிகளவு தூரம் நடந்து செல்லத் தேவையில்லை. இந்த புதிய வசதிகள் எம்மை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன.
நான் இங்கு 1972ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். எமக்கு இங்கு பணியாற்ற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மழைக்காடுகள் தத்துவங்கள் தொடர்பில் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு விளக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்க நான் அதிகளவு ஈடுபாடுகளை செலுத்தி வருகிறேன். இவற்றின் அனுகூலங்கள் மற்றும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் போன்ற பல விடயங்களை நான் தெளிவுபடுத்தி வருகிறேன். ஓவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாம் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்வதுண்டு, வைத்திய அதிகாரி, என் போன்ற தோட்டத்தில் பணியாற்றும் ஏனையவர்கள், மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் இந்த கூட்டங்களில் உரையாற்றுவதுண்டு. இந்த கூட்டங்களில் நாம் மழைக்காடுகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய விடயங்களை நாம் தெளிவுபடுத்துகிறோம் என்றார்.
இவ்வாறு சகல பிரிவினருக்கும் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ள இந்த மழைக்காடுகள் செயற்திட்டம் ஏனைய பெருந்தோட்டங்களிலும் பின்பற்றப்படுமாயின், கம்பனிகளுக்கு, தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் சூழலுக்கும் அனுகூலம் வழங்குவதாக அமையும்.
நன்றி- தமிழ் மிரர்
No comments:
Post a Comment