Wednesday, January 8, 2014

தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு

தமிழ் மொழி பேசும் அமைச்சர் ஒருவரின் அமைச்சில் இடம் பெற்ற விருது விழாவில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவமொன்று கண்டியில் இடம் பெற்றது.

மத்திய மாகாண சபையின் விவசாய, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, சுற்றாடல் அமைச்சின் கால் நடை உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு விருது விழா செவ்வாய்க் கிழமை  கண்டி அவன்ஹல மண்டபத்தில் இடம் பெற்றது.

அதன் போது கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பாக மத்திய மாகாண மட்டத்தில்  பங்களிப்புச் செய்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு துறைகளாகப் பிரித்து கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்த விவசாயிகள், மிருக வைத்தியர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், மிருக வைத்திய காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் மிருக வளர்ப்பு மகாண அமைச்சின் பல்வேறு அலுவலர்கள் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, மிருக வைத்திய அதிகாரி பிரிவு மட்டம் போன்ற பல்வேறு மட்டங்களில் கௌரவிக்கப்பட்டனர். முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிலும் விசேடமாக மேற்படி துறையில் பங்களிப்புச் செய்தர்கள் என்று சொல்லக் கூடிய ஊடக வியலாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஆனால் அப்பட்டியலில் தமிழ் மொழி பேசும் ஊடக வியலாளர்கள் எவருமே இருக்கவில்லை. இது திட்டமிட்ட சதியா? தவறா எனத் தெரியவில்லை. அதில் மற்றொரு வியப்பு என்ன வென்றால் மேற்படி அமைச்சரின் தொகுதியான நுவரெலியாவில் இருந்து கூட ஒரு தமிழ் பத்திரிகையாளரின் பெயர் வாசிக்கப்படவில்லை. அப்படியென்றால் தமிழ் மொழி பேசும் அமைச்சரையும் பணிப்பாளரையும் பிரதானமாகக் கொண்ட மேற்படி அமைச்சின் செய்திகளை இதுகாலம் வரை தமிழ் மொழி பேசும் சகல மத்திய மாகாண ஊடகவியலாளர்களும் எழுத வில்லை என்ற கருத்து நிலவுகிறது.

எனவே குறிப்பிட்ட அமைச்சு அதிகாரிகள் தமிழ் ஊடக வியலாளர்களை புறக்கணித்தனரா? அல்லது மத்திய மாகாண தமிழ் ஊடக வியலாளர்கள் அமைச்சின் செய்திகளைப் புறக்கணித்தனரா என்ற வினாவிற்கு இரு சாராரும் விடைகாண்பது நல்லதென அங்கு சமூகமளித்திருந்த ஒரு சில தமிழ் மொழி பேசும் பொது மக்களும் மாகாண சபை தமிழ் அங்கத்தவர்கள் சிலரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

No comments: