Monday, August 30, 2010

நுவரெலியா மாவட்டமும் தமிழ்மொழியின் நிர்வாக உரிமையும்

இலங்கையின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மொழியாக தமிழ்மொழியை நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தி இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் தமிழ்மொழியின் நிர்வாக மொழி அந்தஸ்துபற்றி எவரும் கவனத்தில் கொள்ளாத நிலையில் தமிழ்மொழியின் உரிமை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிந்திக்க வேண்டியவர்கள் எவரும் அது தொடர்பாகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான அரசாங்க மொழிகளாகச் சிங்களமும் தமிழும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும் ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் செயற்பட அரசியலமைப்பின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாகாணங்களில் வாழும் சிறுபான்மை மொழி பேசுவோரை மையமாகக் கொண்டு அவர்களது எண்ணிக்கையையும் கவனத்தில் கொண்டு அரசியலமைப்பின் 22 (டூ) பந்தியின் கீழ் குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் தமிழ் அல்லது சிங்களத்தை நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதியின் வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுபான்மையாகவுள்ள மக்களது மொழியும் நிர்வாக மொழியாகச் செயற்பட வழி செய்யப்படும். அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் சிங்கள மக்கள் அரச அலுவலகங்களுடனான தொடர்புகளைச் சிங்கள மொழியில் மேற்கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உள்ள அதே உரிமையைத் தமிழ்மக்களும் அனுபவிக்க முடியும். இது சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமை.

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் தமிழ் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அந்த அதிவிசேட வர்த்தமானியின் இலக்கம் 1105ஃ25 ஆகும்.

நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளின் உறுப்பினர்களுக்கு மேற்படி வர்த்தமானியின் விபரம் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு நுவரெலியா மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான நிர்வாக மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அலட்சியப்படுத்தக்கூடாது,புறந்தள்ளக்கூடாது.

நுவரெலியா , அம்பகமுவ பிரதேசசபைகளுக்குட்பட்ட மக்களில் சுமார் எண்பது வீதமானவர்கள் தமிழர்கள்.பிரதேசசபைகளின் தலைவர்கள் உட்படப் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்கள். அவ்வாறே அட்டன் டிக்கோயா நகரசபையினதும் தலவாக்கலை நகரசபையினதும் தலைவர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் தமிழர்களே. நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், தமிழ் உறுப்பினர்களும் அதிகமாகவுள்ளனர். வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகிச் செயற்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமிழ்மக்களின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குச் சிங்கள மொழியில் சரளமாகப் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்வாறான நிலையில், நூற்றுக்கு அறுபது வீதம் தமிழ்மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தின் அரச அலுவலகங்கள், வங்கிகள், சபைகளில் போதிய தமிழ் தெரிந்த, தமிழில் பணியாற்றத் தகைமை பெற்ற அலுவலர்கள் இல்லையென்பது பகிரங்கமானது. தமிழ்ப் பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகள் கூடத் தமது கருத்தை வெளிப்படுத்த தேவைகளைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பணியாற்ற முடியாத மொழிப் பிரச்சினையுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அரச துறைசார் அலுவலகங்கள், வங்கிகள் , கூட்டுத்தாபனங்கள், சபைகளில் இந்த நிலையென்றால் தமிழ்த் தொழிலாளர்களே பெருமளவிலுள்ள பெருந்தோட்ட அலுவலகங்களிலும் இந்த நிலையே பெருமளவில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஏழு உறுப்பினர்களில் ஐவர் தமிழர்கள். இருவர் சிங்கள இனத்தவர்கள். அவர்களில் தமிழர் ஒருவரும் சிங்களவரொருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள். நுவரெலியா மாவட்ட மக்கள் சார்பாக தேசியப்பட்டியல் மூலம் நியமனம் பெற்றவர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருமாக இருவருள்ளனர்.

இந்நிலையிலே, ஆளும் கட்சியின் சார்பாக நால்வரும் எதிர்க்கட்சி சார்பாக மூவரும் பாராளுமன்றம் கூடியபோது இருந்தனர். இன்று ஆளும் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாலிலிருந்து ஐந்தாக உயர்ந்துவிட்டது. ஆளும் தரப்பிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக அணிதிரளும் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

எந்த அணியிலிருந்தாலும் தமிழ்ப் பிரதிநிதிகளின் கடமை தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேண நடவடிக்கையெடுக்க வேண்டியதாகும். மொழி உரிமையைப் பயன்படுத்த முடியாத சமூகம் தரம் தாழ்ந்ததாக இரண்டாம் தரப்பிரஜைகளாகவே கணிக்கப்படும். சமூக அந்தஸ்தை இழந்ததாகவே கொள்ளப்படும். மொழியென்பது ஒரு சமூகத்தின் உயிர்மூச்சு,ஆன்மா என்பார்கள். அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.

நுவரெலியா மாவட்டத்தின் மக்கள் தொகையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பான்மையாகவுள்ளனர். இரண்டு பிரதேசசபைகளின் தலைவர்களாகவும் இரண்டு நகரசபைகளின் தலைவர்களாகவும் நம்மவர்கள் தமிழர்கள் உள்ளனர் என்று பெருமை பேசுவதால் பெருமைப்படுவதால் சாதாரண தமிழ்மக்கள் ஒரு நன்மையும் பெறப்போவதில்லை.

சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள, அனுபவிக்கத் தடையுள்ளது. தடைகளைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களின் பிரதிநிதிகளென்று கூறப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கேயுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் தமிழர்கள். மக்கள் சேவை என்பது என்ன என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழிகாணப்பட வேண்டும். மக்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் குறிப்பாகப் பெருந்தோட்டத்துறையில் வாழும் தமிழ்மக்கள் உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் உட்படப் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியிருப்பது மறைக்கக்கூடியதல்ல, மறுக்கக்கூடியதல்ல.

பாரதியார் கூறியதுபோல், கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றுவதன்றி நாட்டத்தில் கொள்ளமாட்டார்கள் நம் பிரதிநிதிகள் என்று நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகளைக் கணித்துவிடக்கூடாது , மதிப்பிட்டுவிடக்கூடாது. அதனால், சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள , அனுபவிக்க வழி செய்யப்பட வேண்டும்.

மொழி உரிமையை நிலைநாட்டி தமிழ்மக்கள் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ வழிகாண வேண்டும். மொழிப் பயன்பாட்டுக்கு நிர்வாகச் செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள ஏதுகளை இனங்கண்டு தகர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். அது காலத்தின் கட்டாய தேவை. தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து உரிமையுடன் வாழ அதுவே அடித்தளமாக அமையும்.

தினக்குரல்

No comments: