மலையக சமூக முன்னேற்றத்துக்காக போதை அரக்கனை ஒழிப்போம்!
மனிதனது இயல்பான நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய போதைவஸ்துக்களாக மதுபானம், கசிப்பு, கள், புகையிலை, பீடா, பாபுல், மயக்கமூட்டும் பாக்கு வகை, தூள் வகைகள், மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வில்லை வகைகள், திரவங்கள், நாட்டு வைத்திய முறைகளில் தயாரிக்கப்படுகின்ற மாத்திரை வகைகள் என்பன உள்ளன. அதனைவிட தீவிரம் கூடிய போதைவஸ்து வகைகளான ‘கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜுவானா போன்றன உள்ளன.
இவ்வாறான போதையூட்டும் பொருட்கள், தீவிரத்தன்மையான போதைவஸ்துக்கள் என்பன இலங்கையிலும் பாவனையில் உள்ளன. இவற்றைப் பாவிப்போர் நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். இவ்வாறு போதைக்கு அடிமையான நபர்களால் அவருக்கும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி, சமூக முரண்பாடுகள், வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றுக்கும் போதைப் பொருட்கள் காரணமாக அமைகின்றன.
இவற்றின் பாரதூர விளைவுகளை அறிந்தே ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற செயற்றிட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் வளர்ந்தோர்களை விட இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனைப் பழக்கம் அதிகம் உள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைவஸ்துப் பழக்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும், பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் இந்நிலை காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இதனை விரைவாகத் தடுக்காதுவிடின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தீங்குகளை யாராலும் தடுக்கமுடியாது
எனவே இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.
மதுப் பாவனையினால் மலையகத் தோட்டங்களில் சமூகப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. அங்கு மது அரக்கன் ஒழிக்கப்படுவது அவசியம். மலையகத்தை மதுவை ஒழிக்கும் முயற்சிகளாக பொலிஸ்நிலைய அதிகாரங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே மாணவர்களும் இவற்றின் பாதக விளைவுகளை அறிந்து கல்வியில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு பிரயோசனமற்ற பிரஜையாக வாழ்வதில் எவ்வித பயனும் தனக்கோ பிறருக்கோ ஏற்படப் போவதில்லை.
த. குவேனி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி
No comments:
Post a Comment