இலங்கையின் பெருந்தோட்ட பயிராக்கவியல் செயற்பாடுகளுக்கென பிரித்தானியரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றைய மலையகத் தமிழர்கள். 18ம் நூற்றாண்டின் குருதி கசிந்த சோக வரலாற்றின் உலகறியாத மக்கள் கூட்டமாக இன்று இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதகுல நாகரிகம் வெட்கி நிற்குமளவிற்கு இம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த போதும் தம் அயராத உழைப்பின் மூலம் இந் நாட்டின் மத்திய மலை நாட்டில் இந் நாட்டுக்கு பெரும் புகழையும் பொருளாதார ஊற்றையும் உருவாக்கி இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும் காத்திரமான பங்களிப்பினை வகித்து வருகின்றார்கள்.
மனித நேயம் வென்றெடுத்த நாகரிகத்தின் எந்தவொரு வினைப்பயனையும் இம் அனுபவிக்கக்கூடாது என்பதிலும் அம் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலம் காலம் காலமாக பதவிக்கு வந்த அதிகார வர்கத்தினர் மிகவும் சிரத்தையுடன் இருந்தனர். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இம் மக்களை நவீன அடிமைகளாக வைத்து மலிவு ஊழியர்களாக (Cheep Labour) பயன்படுத்தி தொடர்ச்சியாக சுரண்டினார்கள் என்றே கூற வேண்டும்.
நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை பலப்படுத்த அயராது பாடுபட்ட இம் மக்களின் உழைப்பு நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதில் பெரிதும் பங்காற்றியது என்பதனை மறந்துவிட முடியாது. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் நாடு சுதந்திரம் பெற்றபோது இம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமையாகம். வாழ்வுரிமை மறுக்கப்பட்டமையானது இம் மக்களை அரசியல் அநாதைகள் என்ற அசாதாரணமான நிலைக்கு தள்ளியதுடன் அனைத்து அரசியல் சமூக பொருளதார உரிமைகளையும் அனுபவிக்க முடியாதவாறு ஒடுக்கப்பட்டார்கள்.
இதன் விளைவாக ஏனைய சமூகத்தவர்கள் அனுபவித்த அடிப்படை மனித உரிமைகளை மலையக மக்கள் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியது. சர்வதேச ரீதியாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மனித உரிமை நியமங்களையும் (International Human Rights Standards) அனுபவிக்க முடியாத நிலைக்குள்ளானார்கள். சுமார் மூன்று நூற்றாண்டு காலமாக சகல அடிப்படை மனித உரிமைகளையும் அனுபவிக்க முடியாத, மனித கௌரவத்துடன் (Human Dignity) வாழ முடியாத ஒரு மக்கள் கூட்டமாக இந் நாட்டில் இருந்தார்கள் குறிப்பாக 1970ம் ஆண்டு ஆகும் வரையில் தாம் இழந்த அரசியல் மற்றும் ஏனைய சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுக்; கொள்வதற்காக காத்திருந்தனர்.
1970 களுக்கு பின்னரும் சகல மனித உரிமைகளுடனும் ஒரு நாகரிகமான மக்கள் கூட்டமாக வாழும் சூழல் உருவாகவில்லை. படிப்படியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நியாயப் பிரச்சாரங்களினூடாகவே (Advocacy) ஓரளவேனும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்க முடிந்தது என்பது மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.
முலையகத்தில் 18 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பெருமளவான இளைஞர்கள் சகல தோட்டப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையினை சரியாக வரையறுப்பது கடினமாகவே உள்ளது. அது குறித்த சரியானத் தரவுகள் திரட்டப்பட்டதாகத் இது வரையில் தெரியவில்லை. ஆயினும் மொத்த இளைஞர்களில் சுமார் 48 சதவீதமானோர் தொழில் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
போதிய கல்வி தேர்ச்சியின்மை குறைந்த மட்ட விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு குறைந்த மட்ட தொழில் திறன், குறைந்த உலக அனுபவம், குறைந்த மட்ட துறைசார் பயிற்சி ஆகிய பல பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அதனையும் தாண்டி ஒரு சில படித்த இளைஞர்களும் அரச தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம், தோட்ட முகாமைத்துவ தொழில்களில் பாரபட்சம், அரச சேவைகளில் பாரபட்சம், புறக்கணிப்புக்கள் அந்நியப்படுத்தல் ஆகிய பல பாகுபாடுகளுக்கு உட்பட்டு வருகிறார்கள்.
அதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் தான் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொண்ட அறிவினை மூலதனமாகக் கொண்டு சில ஏற்றங்களை அடைந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் நீண்ட பிரயத்தனங்களின் மூலம் பல்கலைகழக மற்றும் கல்வியியல் கல்லூhயிpல் அனுமதிப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமது எதிர்காலத்தை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையக இளைஞர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்பு என்பது ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானது வருந்ததக்க விடயமாகும் ஏனைய துறைகளில் இவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் மிக குறைவாகும். ஏவ்வாறாயினும் போதிய கல்வித் தேர்ச்சி இன்மையால் நீண்டகால்;;;ம் நிரந்தர தொழிலின்றி பெற்றோர்களின் உழைப்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றார்கள்.
இவ்வாறு நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஏற்படும் வறுமை மற்றும் அதிகரித்த குடும்ப சுமை காரணமாக தோட்டப்பகுதிகளை விட்டு நகர்புறங்களுக்கு தொழில் வாய்ப்பு தேடிச் செல்கிறார்கள். இவ்வாறு தொழிலுக்கு செல்லும் இந்த இளைஞர் யுவதிகள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் மனித உரிமை பிரச்சினைகள் அதிர்ச்சியூட்டுவனவாக காணப்படுகின்றன.
- இரா. ரமேஸ்-
No comments:
Post a Comment