Monday, July 6, 2009

பெருந்தோட்டப் பாடசாலைகளில் பெறுபேறுகள் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என்ன?

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென போதியளவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, யாரும் அறிந்த விடயமாகும். இருப்பினும் மத்திய சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களில் உள்ள தோட்டப் பாடசாலைகள் ஏன், நகர பாடசாலைகளில் கூட போதியளவு பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்களை பலரும் கூறினாலும், இத்துறையில் பணி செய்யும். ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்வி அமைச்சர் இவர்கள் அனைவரும் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்கின்றார்களா? இதை எந்த பெற்றோர்களாவது தட்டிக் கேட்க முன்வருகின்றார்களா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
எமது சமூகத்தில் உள்ள அனைவரும் அரசியல், கல்வி, சுயதொழில் வாய்ப்பு, போசணை என்பவற்றில் குறைந்தளவான அறிவையே கொண்டிருக்கின்றனர். இவர்கள் அநேக விடயங்களில் வாய் மூடிய மௌனிகளாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தரம் 5, 11, 13 வகுப்பு தேசியப் பரீட்சைப் பெறுபேறுகளை இன்னும் தேசிய மட்டத்துடன் உயர்த்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்தவுடன், அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், யிஷிதி அமைச்சர்கள் ஆவேசமாக அறிக்கை விடுவது பேசுவது மட்டுமே வருடம் தோறும் நடைபெறுவதைக் காணலாம்.
கல்வித்துறையோடும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளோடும் தொடர்பு பட்டவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை, பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் செயற்படுத்த வேண்டும்.
பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கு உள்ளக மேற்பார்வை வெளியக மேற்பார்வை வகுப்பறை மேற்பார்வை அவசியம். இவை அனைத்தும் அதிபராலும், கல்வி அதிகாரிகளாலும் முறையாகச் செய்யப்படுகின்றதா? இந்த மேற்பார்வை முறையின் குறைபாடுகளே வருட இறுதியில் மாணவர்களின் அடைவு மட்டம் குவைதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்வார்களா? பரீட்சைப் பெறுபேறுகள் சில பாடசாலைகளில் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மொழி பாடங்களில் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது. தொடர்ந்து இந்நிலை நீடித்தால், உயர்தர வகுப்பிற்கும், பல்கலைக்கழகத்திற்கும் செல்லும் வாய்ப்பு மேலும் குறைவதற்கே வாய்ப்புள்ளது. வெறுமனே கல்வித்துறையில் மலையகம் வீழ்ச்சியடைந்து வருகின்றது என குறை கூறுவதில் பயனில்லை. பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
ஒரு கோட்டத்தில் 800 மாணவர்கள் க.பொ.த. (உஃத) பரீட்சைக்குத் தோற்றினால் அதில் 152 மாணவர்கள் மட்டுமே கணிதம் உட்பட ஏனைய பாடங்களில் சித்தி பெற்றுள்ளார்கள். பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர்கள் யார்? இம் மாணவர்கள் மீண்டும் எமது சமூகத்திற்கு உள்ளேயே வரப் போகின்றார்கள். இவ்வாறு வருடம் தோறும் நடைபெற்றால் இதன் முடிவு என்ன? இதை நிறுத்துவதற்கு முன்வர வேண்டியவர்கள் வருவார்களா?
எனவே ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவத்தில், மதிப்பீடு என்பது முக்கியம். எமது பெறுபேறு தொடர்ந்து நிலையானதாக இருக்க வேண்டும். எனவே பாடசாலை மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதற்கு பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள், நாடுகள், உதவி செய்கின்றன. இவற்றையெல்லாம் முறையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சென்றடைய வைப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பெறுபேறு குறைவதில் மலையகப் பெற்றோர்களின் பங்கும் அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். இவர்கள் பாடசாலை, நிர்வாகம், பாட ஆசிரியர்கள் ஆகியோர் மத்தியில் கலந்தாலோசிப்பது இல்லை. எனவே பாடசாலை மேற்பார்வை என்பது அடிக்கடி வகுப்பு ரீதியாக அதிபரினால் சகல பாடங்களுக்கும் நடத்தப்பட வேண்டும். அத்துடன் சகல ஆசிரியர்களையும் சமமாக அவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டும். சில பாடசாலைகளில் அதிபருக்கு சார்பானவர்களை எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை. இதனால் இவர்களை நம்பி இருக்கின்ற மாணவர்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றார்கள் என்பதை அதிபர்கள் உணர வேண்டும்.
சில அதிகாரிகள் ISA, AD,principals-Subject cordinations) அனைவரும் சில வேளைகளில் அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும், அதிகாரிகளின் செல்வாக்கினாலும் பதவி உயர்வுகளை பெற்றுக் கொள்வதால் அதற்கான கல்வித் தகமை, தொழிற் தகைமை இல்லாத போது அவர்களால் சில ஆசிரியர்களைக் கூட மேற்பார்வை செய்ய முடியாதளவிற்கு அப்பாவிகளாக உள்ளார்கள்.
எனவே கல்வி அதிகாரிகளை நியமனம் செய்யும் போது, சிபாரிசுகள், அரசியல் தலையீடுகளை தவிர்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் தன்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும். பாடசாலை என்பது மாணவர்களை சத்தமில்லாமல் வைத்திருப்பதும், ஆசிரியர் மாணவர்களின் பொழுது போக்குவதற்குமான இடம் இல்லை என்பதை உணர வேண்டும். மற்றும் பாடசாலையை 8.00 மணிக்கு திறப்பதும், 2.00 மணிக்கு மூடுவதும் ஒரு பெரிய வேலையில்லை. அங்கு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முறையாகவும், நேர்த்தியாகவும் நடைபெற வேண்டும்.
பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதா? தவணைக்குரிய பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளதா? மாணவர்களின் அடைவு மட்டம் எவ்வாறு உள்ளது? பின் தங்கிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதா? லீவில் இருக்கும் பாட ஆசிரியர்களுக்கான மாற்யடு செய்யப்பட்டுள்ளதா? பாடசாலை இணைப்பாட விதானச் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மாணவர் மன்றங்கள், வாசிகசாலை, கணனி நிலையம் போன்றன எந்தளவு மட்டத்தில் செய்யப்பட்டுள்ளது? குறிப்பாக மணவர் வரவு போன்றவற்றில் மிக மிக அதிகமான கண்காணிப்புக்களை அதிபர் தொடக்கம், கல்வி அதிகாரி, கல்வி அமைச்சர் வரை ஒழுங்காக செய்தால் மட்டுமே மலையகத்தின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.
சிவமணம்

No comments: