உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும் - பிரிடோ நிறுவனம்
உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் அறியத்தர வேண்டுமென பிரிடோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்
உலகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் உலகக் கல்விச் செயற்பாட்டு வாரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், அதற்காக உலகத் தலைவர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், தத்தமது நாடுகளில் அனைவருக்கும் இலவசமானதும் தரமானதுமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக “உலகக்கல்வி பிரசார இயக்கம்” என்ற அமைப்பு வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை கொண்டாடுவதுடன் பல மில்லியன் மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு கல்வி பெறமுடியாதிருக்கும் அனைவருக்கும் அதனை பெற்றுத்தர வேண்டும் என்ற பிரசாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
உலகில் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்க முடியாதவர்கள். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத வாசிக்கத் தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதுடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.
இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கான கூட்டமைப்பு இந்த செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதுடன் பிரிடோ நிறுவனம் பெருந்தோட்டப் பகுதிகளில் வருடாவருடம் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டி வருகிறது. இம்முறை உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்திற்கான தொனிப்பொருள் “வளர்ந்தோர் இளைஞருக்கான எழுத்தறிவும் வாழ்நாள் கல்வியும்” என்பதாகும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் தொகை குறிப்பிட்ட அளவில் உள்ளது. மாணவரிடையே இடைவிலகல் அதிகரித்து செல்கிறது. இந்த பின்னணியில் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை பிரிடோ நிறுவனம் வலியுறுத்துகிறது.
இதேவேளையில், பிரிடோ நிறுவனம் ஏப்ரல் 27 ஆம் திகதியை மலையக ஆசிரியர் அர்ப்பணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்தத் தினத்தில் ஆசிரியர்கள் மலையக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பேணுவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுடன் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் இந்நிறுவனம் கோருகிறது.
No comments:
Post a Comment