பொது வசதிகளுக்காக காத்திருக்கும் பெருந்தோட்ட மக்கள்
நீறுபூத்த நெருப்பில் ஊதி ஊதித்தான் பயன்பெற வேண்டும் என்றால் அது மலையகத்தை பொறுத்தவரையில் ஊதியம் பயனற்ற செயல்.
அபிவிருத்தி என்ற ஒன்றோடு ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். கல்வியிலே ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது. பொது வசதிகள் என்கிற போது எதனை என்று கேள்வி எழுப்பலாம்.
தோட்டத்துக்கு தோட்டம் தேயிலை செடி உண்டு. மரத்துக்கு மரம் ஆலயங்கள் உண்டு ஆனால் தோட்டப் பகுதிகளில் பின்வரும் பொது வசதிகள் இல்லையே.
• தரமான வைத்தியசாலை.
• நூலக வசதி
• தபால் நிலையம்
• கலாச்சார மண்டபம்.
• கணினி நிலையங்கள்
• விளையாட்டு மைதானம்
இவை அனைத்தையும் அமைத்துத் தருவதாக தேர்தல் காலங்களில் பல்லவி பாடுபவர்கள் தேர்தலின் பின்னர் தோட்டப் பகுதி வீதிகளை மட்டும் புனரமைத்து கொடுத்து விட்டு மக்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.
அடிப்படை வசதிகளற்று காணப்படும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எதிர்கால மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. காரணம் நூலக வசதிகளை பொறுத்த வரையில் நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் நூலகம் காணப்பட்டாலும் அவ்வளவு தரமான நூல்கள் கிடைப்பதில்லை. அதைவிட ‘வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்தும்’ மலையக மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தோட்ட வாரியாக நூலக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்காவில் பகல் என்றால் இலங்கையில் இருட்டு என்பர். அது போல கொழும்பிலே விடிவு மலையகத்தில் இருட்டு காரணம் கொழும்பு போன்ற நகரங்களில் காணப்படும் கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பாரிய இடைவெளி உண்டு. தேர்ச்சிப் பெற்ற கணனி ஆசிரியர்கள் மலையகத்தைப் பொறுத்தவரையில் கிடைப்பது அரிது. அதைவிட பாடசாலைகளில் கணனி பாடங்கள் இடம் பெற்றாலும் அது அடிப்படை கணனி அறிவோடு நிறுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு போதுமான வினக்கம் இன்னும் வழங்கப்படவில்லை. முதலில் குறிப்பாக பெருந்தோட்ட ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலத்தையும் கணனியையும் கற்பிக்க வேண்டும். பிறகுதான் மாணவர்களை பற்றி யோசிக்க முடியும்.
கணனி நிலையங்களை அமைத்து தரமான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் மலையக மாணவர்களும் கணனித் துறையில் பிரவேசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
விளையாட்டு மைதானம்
தோட்டப்பகுதிகளிலும், தோட்டப்பகுதி பாடசாலைகளிலும் சரி தரமான விளையாட்டு மைதானங்களை காண்பது அரிது. காரணம் இடப்பற்றாக்குறை என்பர். தரிசு நிலங்கள் தரிசாகவே காணப்பட வேளாண்மை நிலையங்களுக்கு அருகாமையில் மைதானம் அமைக்க எம்மவர்கள் கேட்க இறுதியில் விளையாட்டு மைதானமும் இல்லை. தரிசு நிலத்தின் பயன்பாடும் இல்லாமல் போய் விடும்.
மலையக சமுதாயத்தில் அதிகரித்த திறமை உடையோர் இருக்க எட்டடி காம்பிரவுக்குள் எதனை அவர்கள் ஒத்திகை பார்ப்பர். பாடுபவரா? ஆடுபவரா, நடிக்கத் தெரிந்தவரா? அனைத்து திறமையுமே மழுங்கடிக்கப்படுகின்றன. திறமைகளை வெளிக்கொண்டு வர நினைக்கும் கலைஞனுக்கு பாடசாலையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதற்கு கலாச்சார மண்டபம் இன்மையும் ஒரு காரணமே.
தோட்ட வைத்தியசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்படும் என்ற வாசகம். தோட்ட வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவ்வாறு பல பொது வசதிகள் தோட்டப் பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படாமைக்கு காரணம் என்ன? அமைச்சுக்கள் உண்டு, அரச சார்பற்ற நிறுவனஙகள் உண்டு. மலையகத்திற்கு என்றால் பணம் பதுங்கி விடுமோ?
குமுறப் போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச் செல்லப்படுகின்றது- வீரகேசரியிலிருந்து
No comments:
Post a Comment