Wednesday, October 28, 2015

மலையக தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற வேண்டும்!

மலையக தமிழ் மக்கள் தொடர்ந்தும் மலையகப் பகுதிகளில் வாழ வேண்டுமாயின் சிங்களவர்களாக மாற வேண்டுமென சிங்ஹலே மாஜன பெரமுன என்ற அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆட்சியாளர்களினால் விரட்டியடிக்கப்பட்ட மலையக சிங்கள மக்களின் கிராமங்கள் இந்த புதிய அமைச்சின் ஊடாக சிங்கள மக்களுக்கு இல்லாமல் போய்விடும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் அரச மற்றும் தனியார் தோட்டங்களுக்காக சிங்கள மக்களின் பாராம்பரிய காணிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாரம்பரியமாக கிராமங்களில் வாழ்ந்து வந்த சிங்கள மக்களை கூட்டாக கொலை செய்தும், விரட்டியடித்துமே, பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சிங்கள கிராமங்களில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் செய்த அழிவுகள் குறித்து 1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்திற்கு, அப்போதைய ஆளுனர் ரொபர்ட் பிரவுன்ரீக் அனுப்பி வைத்த இரகசிய ஆணவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 1848ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி டொரிங்டன் ஆளுனரினால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் சிங்களவர்கள் மற்றும் சிங்கள கிராமங்களுக்கு செய்த அழிவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். சிங்களவர்களின் மலையகப் பாரம்பரிய கிராமங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சிங்கள இனத்தை ஒடுக்க ஆங்கிலேயரினால் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் வாழ விரும்பினால், அவர்கள் சிங்களவர்களாக மாற வேண்டும் என சிங்ஹரே மாஜன பெரமுன அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மாநாயக்கர்களிடம் இந்த கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலன்த விதானகே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பல பௌத்த பிக்குகளும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

தோட்­டத்­ தொ­ழி­லா­ளரின் சம்­பள உயர்வு கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது

இ.தொ.கா. விடம் அதி­காரம் இருந்­தி­ருந்தால் தீர்வு கிடைத்­தி­ருக்கும் 

ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் அன்­றைய வாழ்க்கைச் செலவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே முன்­வைத்­தது. இன்­றைய நிலையில் 1500 ரூபா பெற்­றுக்­கொ­டுத்­தாலும் போது­மா­ன­தாக இருக்­காது. இ.தொ.கா. விடம் போதிய அர­சியல் அதி­கா­ர­பலம் இருந்­தி­ருக்­கு­மே­யானால் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்கும். சம்­பள உயர்­வு­களும் சாத்­தி­ய­மா­கி­யி­ருக்கும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வதும் தாம­த­மா­கி­யி­ருக்­காது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார்.
 
ஊவா மாகாண அமைச்சர் பொறுப்­புக்­களை ஏற்­ற­பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தாமதம் குறித்து விளக்­கு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
தொடர்ந்து அவர் பேசு­கையில்,  தற்­போது மலை­ய­கத்தின் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் இலங்கைத் தொழி­லா ளர் காங்­கி­ரஸை விமர்­சிப்­ப­தி­லேயே கால த்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ் அமைச்­சர்­க­ளினால் ஏன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க முடி­ய­வில்லை என்று நாம் மட்­டு­மல்ல இன்று மக்­களும் கேள்வி கேட்கத் தொடங்­கி­விட்­டனர். அப்­ப­டி­யானால் விமர்­ச­னங்­களை மட்­டுமே முன்­வைத்­து­வரும் அவர்­களின் செயற்­பா­டுகள் கையா­லாகாத் தன்­மை­யையே காட்­டு­கின்­றன.
 
இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள அதி­க­ரிப்புத் தொகை­யை­விட அதி­க­ரித்த தொகை­ யையே ஏனைய தொழிற்­சங்­கங்கள் முன்­வைப்­பது வழக்­க­மாக இருந்து வந்­தது. எனினும் நாம் முன்­வைத்த 1000 ரூபா கோரிக்­கை­யை­விட அதி­க­ரித்த தொகையை கோராது அதிலும் குறை­வான தொகையே கோரப்­பட்­டது.
 
அன்­றைய வாழ்க்­கைச்­செ­லவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே ஆயிரம் ரூபா உயர்­வினை கோரி­யி­ருந்தோம். இது தொழி­லா­ளர்கள் மட்டில் நியா­ய­மான கோரிக்­கை­யாகும். இதனை அவர்­களும் ஏற்­றுள்­ளனர். இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள உயர்­வுக்கு மேலா­கவே ஏனைய தொழிற்­சங்­கங்கள் கேட்­பது வழ­மை­யாகும். ஆனால், இ.தொ.கா.வின் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கோரிக்­கைக்கு அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இணங்­கி­யது புது­மை­யே­யாகும். சில தொழிற்­சங்­கங்கள் 1000 த்திலும் குறை­வான தொகையையும் முன்­வைத்து வந்­தன.
 
இன்­றைய வாழ்­க­்கைச்­செ­லவு உயர்­வுக் ­கேற்ப இந்தத் தொகையும் போது­மா­ன­தன்று. அனைத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. நாம் அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் இவற்றை முறை­யாக நிர்­வ­கித்­தி­ருப்போம். இன்றைய நிலையில் 1500 ரூபா பெற் றுக்கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது. இதுவிடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்கள் இ.தொ.கா.வை விமர்சிப்பதை விடுத்து தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என்று கூறி னார்.

கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு என்­பது கேள்­விக்­குறியே 
 
கூட்டு ஒப்­பந்­தத்தின் மூல­மாக நியா­ய­மான சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­பது தற்­போது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எனவே இது குறித்து ஆழ­மாக சிந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தோடு மாற்றுத் தொழில்­துறை தொடர்­பிலும் மலை­யக மக்கள் ஆர் வம் செலுத்த வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எ.எஸ்.சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் உள்­ளது. கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களின் போது தொழிற்­சங்­கங்கள் தொழி­லாளர் நலன்­க­ருதி பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைக்­கின்­றன. எனினும் இக்­கோ­ரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. தொழிற்­சங்­கங்கள் கோரு­கின்ற சம்­பள உயர்வும் உரி­ய­வாறு தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. தொழி­லா­ளர்­களின் வரு­மான மட்­டத்தில் பாரி­ய­ளவு மாற்­றத்­தினை கூட்டு ஒப்­பந்­தத்­தினால் கொண்­டு­வர முடி­யாமல் போயுள்­ளது. கூட்டு ஒப்­பந்­தத்தில் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வாறு வரு­டத்தில் 300 நாள் வேலை அல்­லது மாதத்தில் 25 நாள் வேலை வழங்­கு­வ­தற்கு கம்­ப­னிகள் தயா­ராக இல்லை.
 
வேலை நாட்­க­ளுக்­கேற்ப தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­கின்ற நடை­மு­றை­க­ளுக்கும் கம்­ப­னிகள் இன்று ஒத்­து­வ­ரு­வ­தாக இல்லை அர­சாங்­கத்தின் அழுத்­தத்­திற்­கேற்ப கம்­ப­னி­யினர் சிறிய தொகை சம்­பள உயர்­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு இம்­மு­றையும் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்ற போது கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நமக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு கிடைக்கும் என்று தொழி­லா­ளர்கள் இனியும் எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் எதிர்­கா­லத்தில் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த எந்­த­ள­விற்கு கைகொ­டுக்கப் போகின்­றது என்­பது இப்­போது கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது.
 
இந்த நிலையில் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு மாற்று வழி­களை காண வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­துள்­ளது. தோட்டத் தொழில்­து­றையைக் காட்­டிலும் வேறு எத்­த­கைய தொழில் முயற்­சிகள் தம்­மிடம் இருக்­கின்­றன என்­ப­தனை தொழி­லா­ளர்கள் அடை­யாளம் காணுதல் வேண்டும். இளை­ஞர்கள் பலர் தோட்­டத்­துறை வரு­மா­னத்தில் அதி­ருப்தி கொண்டு தோட்­டத்­தினை விட்டும் வெளி­யேறி நகர்ப்­பு­றங்­களில் பணி­பு­ரிய சென்­றுள்­ளனர். சில இளை­ஞர்கள் வெளி­நா­டு­க­ளுக்கும் தொழில் நிமித்தம் சென்­றுள்­ளனர். இவர்­க­ளு­டைய வரு­மா­னத்தை நம்­பியே இன்று இவ்­வி­ளை­ஞர்­களின் பெற்­றோர்கள் தோட்­டத்தில் இருக்­கின்­றனர். தோட்டத் தொழில் தவிர்ந்த ஏனைய வரு­மா­னங்கள் தான் இன்று தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு கைகொ­டுக்­கின்­றன.
 
கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் அதி­ருப்­திகள் மேலோங்கி வருகின்றன. இதன் மீதான நம்பிக்கைத்தன்மை வலுவிழந்து வருகின்றது. இந்நிலையில் மாற்றுத் தொழில்களை இனங்கண்டு அறிமுகம் செய்வதோடு அதற்குரிய திறன்களையும் எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை இனியும் நம்பி இருப்பது சாத்தியமானதில்லை. விவேகமா னதும் இல்லை என்றார்.

பிர­தமர் தலை­மையில் நாளை சம்­பளப் பேச்­சு­
 
தோட்­டத்­தொ­ழி­லா­ளரின் சம்­பள அதி­க­ரிப்பை உறு­திப்­ப­டுத்தும் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி 7 மாதம் கடந்­து­விட்ட நிலையில் நாளை வியா­ழக்­கி­ழமை பிர­தமர் தலை­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஆகி ­யோ­ருக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.
 
இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழி ற்­சங்­கங்­க­ளுடன் கைச்­சாத்­தி­டாத தொழிற்­சங்கத் தலை­வர்­க­ளு­டனும் பிரதிநிதி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதன்போது அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், மனோ ­க­ணேசன் மற்றும் வி.இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இவர்­க­ளுடன் தொழி­லு ­றவு அமைச்சர் ஜோன் சென­வி­ரட்னவும் இணைந்­தி­ருப்பார்.
 
மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் நிறை­வு க்கு வந்­துள்ள கூட்டு ஒப்­பந்­தத்தை புதுப்­பித்­துக்­கொள்ளும் பொருட்டு இடம்­பெற்­று­வந்த 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் தோல்வி கண்­டுள்­ளன. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக நிர்­ண­யிக்க வேண்­டு­மென்­பதே இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யாகும்.
 
இதனை முன்­வைத்த பேச்­சுக்­களே தோல்வி கண்­டுள்­ளன. 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கென பொதுத்­தேர்தல் பிர­சாரக் காலப்­ப­கு­தியில் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் கம்­ப ­னி­களும் 1000 ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்கு முடி­யா­தென திட்­ட­வட்­ட­மாக அறி­வித்து வந்­த­துடன் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்­றன.
 
மேலும் 770 ரூபாவை அதி­க­ரித்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என்­பதே கம்­ப­னி­களின் இறுதி முடி­வாக உள்­ளது. தேயி லை விலை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு வீழ்ச்சி ஆகி­ய­வற்றைக் காரணம் காட்­டியே இவ்­வாறு சம்­பள அதி­க­ரிப்­புக்கு முட்­டுக்­கட்டை இடப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லை­யி­லேயே தேர்தல் காலங்­களில் வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­கா ரம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதி­க­ரித்த சம்­ப­ளத்தைப் பெற்றுத் தரு­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை ஒன்று பிர­தமர் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கம்பனிகளின் பிரதானிகள், முதலாளி மார் சம்மேளத்தின் பிரதானிகள் மற்றும் மலையக அமைச்சர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இடம்பெறும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம் பப்படுகிறது.
 
 

Tuesday, October 27, 2015

பல்கலைகழகங்களுக்கு மலையக மாணவர்களின் எண்ணிக்கை 200 மட்டுமே. 6000 பேராவது இருக்க வேண்டும்

வருடத்திற்கு 20,000 மாணவர்களை உள்வாங்குகின்ற இலங்கை பல்கலைகழகத்தில் மலையக மாணவர்கள் 200 பேரளவிலேயே இணைகின்றனர் எனவும் குறைந்தது 6000 பேராவது இருக்க வேண்டும். இணைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும் என மாலம்பே கல்வி பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி தை. னராஜ் கண்டி திருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில் ஒரு காலத்தில் பாடசாலையென்பது முழு உலகமாகத் தெரிந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி முழு உலகமும் ஒரு சிறிய பாடசாலையாக மாறிவிட்டது. இந்த நிலை அறிவு பிரளயத்தில் இருந்து தப்பி எப்படி மலையக சமூகத்தால் தனித்து வாழ முடியும் என்றார்.
 
ஒரு காலத்தில் 50 வருடங்களுக்கொருமுறை கல்வி இரண்டு மடங்காக வளர்ந்து சென்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியான காலத்தில் 50 வருடத்திற்கொருமுறை கல்வித்திட்டத்தை மாற்றி அமைத்தால் அது நவீன கல்வியாகக் கொள்ள முடிந்தது. ஆனால் 50 வருடங்களுக்கு முன் அதாவது 1950 களில் 20 வருடத்திற்கு ஒரு முறை கல்வி வளர்ச்சியானது இரட்டிப்பானதாக ஆய்வுகள் கூறின. 1970 களில் ஒவ்வொரு 10 வருடத்திலும் கல்வி வளர்ச்சி இரட்டிப்பாவதாக கூறப்பட்டது. அதன் பின் 2000ம் ஆண்டளவில் ஐந்து வருடத்தில் கல்வி இரண்டு மடங்காகியது. எனவே ஆகக் குறைந்தது ஐந்து வருடத்திற்கொருமுறையாவது கல்வி மீளாய்வுக்குட்படுத்தும் காலகட்டமாக தற்போதுள்ளது.
 
ஆனல் புதிய ஆய்வொன்றின்படி இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு 72 மணித்தியாலங்களிலும் அறிவு மட்டம் இரட்டிப்பாக மாறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே 2020 பின் வரும் சகாப்தம் மிக வேகமானது. மூன்று நாளைக்கு ஒரு தரம் கல்வி இரட்டிப்பாவதென்றால் அந்த மாற்றத்திற்கு கணனி யுகம் முக்கிய காரணமாகிநது. எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே மாணவர்கள் தானாக தேடிப்பிடித்து தமது அறிவை பன் மடங்காக்கும் ஒரு காலமே இதுவாகும். எனவே அறிவுப் பிரவாகம் தலைக்குமேல் ஏறிக்கொண்டு போகும்போது நாம் அதற்கு ஈடுகொடுக்க என்ன செய்துள்ளோம்.

மனித வாழ்வு முற்றாக மாற்றமடைந்துள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்நோம். ஒரு நாளைக்கு முழு உலகிலும் 7 பில்லியன் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) பரிமாற்றப்படுகின்றன. அதாவது அறிவுப்பரிமாற்றப்படுகிறது. கூகுல் போன்ற தளங்களில் ஒரு நாளைக்கு 7.2 பில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன. அதாவது அறிவு பசிக்காக இவ்வளவு முயற்சி நடக்கிறது. 18 மாதத்திற்கொருதரம் கணனி வகைகள் ஒதுக்கப்பட்டு புதி ரகங்கள் அறிமுகமாகின்றன.
 
ஒரு நாளைக்கு முழு உலகத்திலும் இருந்து புதிய 3000 வகையான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பல்லூடகப் பாவனை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இன்றைய மனிதர்கள் நெட் தலைமுறையூடாக அதாவது இணையப் பரம்பரையாக வாழ்கின்றனர். ஒரு மாணவன் சாதாரணமாக ஒரு நாளைக்கு சராசரி 8 மணித்தியாலங்கள் கணனிகளில் அறிவைத் தேடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இப்படியாக இன்று முழு உலகமுமே பாடசாலையாக மாறிக் கொண்டிருக்கும போது எம்மவர்கள் நிலை எப்படி உள்ளது என்று பார்ப்போம். 1965 இல் ஆசிரியர் போட்டிப்பரீட்சை ஒன்று நடந்தது. அதில் 15 ஆசிரியர்களே மலையகத்தில் இருந்து இணைந்து கொண்டனர். அதன் வளர்ச்சி இன்று மலையகத்தில் 10,000 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் மலையக ஆசிரியர்களின் பணி வரவேற்கத்தக்கது. இதற்கு 1960ம் ஆண்டில் வித்திட்டவர்கள் மலையக நல்வாழ்வு மன்றம் போன்றவையாகும். குறிப்பாக சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்களை மலையக சமூக நினைவுகூர வேண்டும். அத்துடன் இன்று முப்பதுக்கும் மேற்பட்ட மலையக கல்வி பணிப்பாளர்கள் உள்ளனர். இது ஓரளவு சாதகமானாலும் மறுபக்கத்தில் மலையக உயர் கல்வியில் பின்னடைவு காணப்படுகிறது.
 
பல்கலை கழகங்களில் சுமார் 200 மலையக மாணவர்கள் இன்று உள்ளனர். இது ஒரு வருடத்திற்கு 20,000 மாணவர்களை கொண்ட இலங்கை பல்கலைகழகத்தில் வெறும் ஒரு சத வீதத்திலும் குறைவானதாகும். அதாவது குறைந்தது மூன்று வருடங்கள் மாணவர்கள் பல்கலையில் இருப்பதாகக் கொண்டால் மூன்று வருடத்திற்கும் 60,000 பேர் இருப்பர் ஆனால் மலையக மாணவர்கள் வெறும் 200 பேர்தான். குறைந்தது 6000 பேராவருது இருக்க வேண்டும் என்றார்.
முலையகத்தைப் பொறுத்தவரை இரண்டு கைவிரல்களால் எண்ணும் அளவுகூட மலையக பேராசிரியர்கள் இல்லை. முதலாவதாக பேராசிரியர் சின்னத்தம்பி, தொடர்ந்து பேராசிரியர்களான சந்திரசேகரன், மூக்கையாக, சிவகணேசன், தனராஜ் என்று விரல் விட்டு எண்ணக்கூட முடியாத தொகையில் உள்ளோம். இவர்கள் அனைவரும் தற்போது ஓய்வு நிலையில் உள்ளனர்.
 
பேராதனை பல்கலைகழகத்தில் 12 மலையக விரிவுரையாளர்களும் ஏனைய பல்கலைகழகங்களில் ஆறு பேருமாக மொத்தம் 18 பேர் மட்டுமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குறிப்பிட்ட சில அரச முகாமைத்துவத்துறை பதவிகளில் 5000 பேராவது இருக்க வேண்டிய நிலையில் 20 பேர் மட்டுமே உள்ளனர். இலங்கை நிர்வாக சேவையில் இதுவரை காலம் மாரிமுத்து மற்று முருகேசு ஆகிய இருவர் மாத்திரமே தெரிவாகினர்.
 
கல்வி இராஜாங்க அமைச்சரே நீங்கள் எத்தனையோ தேசிய மட்ட மற்றும் சர்வதேச மட்ட மகா நாடுகளை நடத்­துகிறீர்கள். ஆனால் ஒருதரம் மலையக தேசிய கல்வி மகாநாடு ஒன்றை நடத்தி எம் பிரச்சினைகளைப் பட்டியல் போட்டால் நல்லதல்லவா?
 
இன்று எமக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதனை கூட்டுவலு கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த முடியும். அதாவது கூட்டு வலு என்பது உதாரணத்திற்கு இரு நபர்களால் தனித்த­னியே 100 கிலோ சுமையை தூக்க முடியும் என்றால் அவர்கள் இருவரும் இணையும் போது 200 கிலோவல்ல அதனிலும் கூடிய அளவை சுமக்க முடியும். இதே விதம் பலர் இணையும்போது அதன் விளையுள் வினைத்திறன் கூட்டு வினைத்திறனை விட அதிகமாகிறது. எனவே சகல பேதங்களையும் மறந்து நாம் எமது பலத்தைப் பிரயோகித்து கூட்டுவலுக் கோட்பாட்டின் அடிப்படையில் மலையக சமூக மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டும்.
 
பொதுவாக உலக வாழ்வில் இரண்டு விடயங்களைக் காணமுடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு விஷன் இருக்கும். அதாவது ஒரு தரிசன நோக்கு இருக்கும். அதேநேரம் அதற்கான எக்ஷன் என்ற செயற்பாடும் இருக்க வேண்டும். செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இல்லா விட்டால் அதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. ஆனால் செயற்பாட்டுடன் கூடிய தரிசன நோக்கு இருக்குமாயின் உலகையே வெல்லாம் என்றார்.
 
நன்றி- வீரகேசரி

Monday, October 26, 2015

பெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டம்

சர்வதேச முன்னெடுப்புகள்  புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (MGD)
சர்வதேச மட்டத்தில் நாடுகளின் அபிவிருத்தி குறித்து 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் அல்லது மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இதன்படி 2015இல் எய்தப்பட வேண்டிய 8 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டன. அவை:

1. தீவிர பசிப்பிணியையும், வறுமையை யும் இல்லாது ஒழித்தல்
2. சகலரும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளல்
3. பால் சமத்துவத்தை மேம்படுத்துதலும், பெண்களை வலுவூட்டுதலும்
4. சிறுவர் மரண வீதத்தை குறைத்தல்
5. பால் சுகாதாரத்தை மேம்படுத்துதல்
6. எச்.ஐ.வி எய்ட்ஸ், மலேரியா மற்றும் ஏனைய நோய்களை குறைத்தல்
7. சூழல் நிலைப்பேற்று தன்மையை உறு திப்படுத்துதல்
8. அபிவிருத்திக்கான சர்வதேச பங்குடைமையை அபிவிருத்தி செய்தல்

நிலைபேண்தகு குறிக்கோள்கள் – (Sustainable Development Goals–(SDG)
2015ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்களுக்கான கால எல்லை நிறைவடைந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை புதிய அபிவிருத்தி இலக்குகள் குறித்து 2015இல் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற முடிவொன்றை மேற்கொண்டது. இதன்படி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலைப்பேண்தகு அபிவிருத்திக்கான (Sustainable Development Goals)–SDG நிகழ்ச்சி நிரல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தீர்மானத்தின்படி 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிலைப்பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களாக 17ஐ அடையாளம் கண்டு 15ஆம் ஆண்டுகளின் எய்தப்படவேண்டும் என தீர்மானித்தது.

இப்பதினேழு குறிக்கோள்களாவன:

1. வறுமையை எல்லா வடிவங்களிலும் இல்லாதொழித்தல்

2. பசியை இல்லாதொழித்து உணவு பாதுகாப்பை எய்தி போசாக்கை மேம்படுத்துதலும் நிலைப்பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துதலும்

3. சுகாதாரமான வாழ்க்கையை உறுதிப்படுத்தி எல்லாருக்கும் எல்லா வயதினருக்கும் நல்வாழ்வினை மேம்படுத்தல்

4. அனைத்தையும் உள்ளடங்கியதும் சமூக நீதியானதுமான தரம்மிக்க கல்வியை உறுதி செய்தலும் வாழ்நாள் முழுவதற்கும் கற்றலுக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துதல்.

5. பால்நிலை சமத்துவத்தை எய்துதலும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுப்படுத்துதல்

6. நீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் என்பவற்றை எல்லோருக்கும் கிடைப்பதையும் அவற்றின் நிலைப்பேண் முகாமைத்துவத்தையும் உறுதிசெய்தல்

7. பெற்றுக்கொள்ள கூடியதும் நம்பத்தகுந்ததும் நிலைப்பேறானதும் நவீனத்துவமான சக்தியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்

8. நிலைபேறானதும் அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியையும் முழுமையானதும் உற்பத்தி சார்ந்த சூழலையும் மதிக்கத்தக்க தொழிலையும் மேம்படுத்துதல்

9. உறுதியான உட்கட்டமைப்பை நிர்மாணித்து அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைத்து நிற்கக்கூடிய கைத்தொழில்மயத்தை பேணுதலும் புத்தாக்கத்தை வளர்த்தலும்

10. நாட்டுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும் சமத்துவமின்மையை குறைத்தல்

11. நகரங்களையும் மனித குடியமைப்புகளை உள்ளடங்கியதாகவும் பாதுகாப்பானதும் உறுதியானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாகுதல்.

12. நிலைத்து நிற்கக்கூடிய நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகளை உறுதிசெய்தல்

13. காலநிலை மாறுதல்களையும் அதன் பாதிப்புக்களை குறைப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்  காலநிலை மாறுதலுக்கான ஐக்கிய நாட்டு சட்டகத்தில் மகா நாட்டினை காலநிலை மாறுதல்களுக்கு பூகோள ரீதியாக முகம் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைக்காக அடிப்படை சர்வதேச நாடுகளுக்கிடையேயான மன்றமாக ஏற்றுக்கொள்ளல்

14. சமுத்திரம், கடல், கரையோர வளங்கள் என்பவற்றை நிலைப்பேறான அபிவிருத்திக்காக பாதுகாத்தலும் நிலைப்பேறாக உபயோகித்தல்

15. சூழல் அமைப்புகளை நிலைத்து நிற்கக்கூடிய உபயோகத்திற்காக பாதுகாத்தலும் மீளமைத்தலும், மேம்படுத்தலும். நிலைத்து நிற்கக்கூடிய வகையில் காடுகளை மேற்பார்வை செய்தல். பாலைவனமாக்குதல் மற்றும் நிலச்சீரழிவினை பின்நோக்கி செய்தலும், அதனை தடுத்து பாலைவனமாக்குதலை நிறுத்துதல்

16. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்காக சமாதானமானதும் எல்லாவற்றையும் உள்ளடங்கிய சமுதாயங்களை பேணுதலும், எல்லோருக்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தலும், எல்லா மட்டங்களிலும் பயனுறு முறையிலானதும் பொறுப்பானதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிறுவனங்களை ஸ்தாபித்தல்

17. நிலைப்பேறான அபிவிருத்திக்காக பூகோள பங்குடைமையை உயிர்ப்பித்தலும், நடைமுறைப்படுத்தலுக்கான சாதனங்களை வலுப்படுத்தலும்

இங்கு 17 குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் 8 இலிருந்து 12 இலக்குகளைக் கொண்டதாக 169 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இக்குறிக்கோள்களை அடைந்து கொள்ள (2020–2030) இடைப்பட்ட கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களான எட்டும், புதிய குறிக்கோள்களாக 17ஆக உயர்ந்து விரிவுபடுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. முன்னைய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த பசியும், வறுமையும் இப்பொழுது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. சில விடயங்களில் (கல்வி, சுகாதாரம்) புதியவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து 17 குறிக்கோள்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய அம்சம் வலியுறுத்தப்படுகின்றன. எனவேதான் புதிய அபிவிருத்தி குறிக்கோள்கள் நிலைப்பேற்று அபிவிருத்தி குறிக்கோள்களாக அடையாளம் காணப்படுகின்றன. நிலைப்பேற்று தன்மை என்பது பொருளாதாரம் மற்றும் சூழல் அம்சங்களையும் இணைந்த ஒன்றாக இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தேசிய மட்ட முன்னெடுப்புகள்
தேசிய மட்டத்தில் தற்போது இது குறித்த நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. தேசிய மட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது நிலைமைகளுக்கேற்ப இக்குறிக்கோள்களுக்கு அழுத்தம் கொடுத்து கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை சில ஆய்வாளர்கள் பலவற்றிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார்கள். டுலிப் ஜயவர்தன என்பவர் தனது கட்டுரையொன்றில் (Daily Mirror 16/10) 3,7,10 மற்றும் 11 தவிர்ந்த ஏனைய 13 குறிக்கோள்களில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் நாட்டிற்கு சுகாதாரமான வாழ்வு (3) நவீனத்துவமான சக்தி (7) சமத்துவமின்மை (10) நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளின் பாதுகாப்பு (11) என்பவற்றிற்கு குறைந்த அளவிலான முக்கியத்துவமே அளிக்கின்றார். இந்த நாட்டிலே பிரதேசம் மற்றும் இனங்களுக்கிடையே பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நலன் குறித்து பல்வேறு சமத்துவமின்மைகள் காணப்படுகின்றன. எனவே, குறிக்கோள் இலக்கம் 10ம் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியவொன்று என நாம் வாதிடலாம். ஜனாதிபதியின் கீழ் வருகின்ற சூழல் விடயங்கள் இப்பொழுது அழுத்தம் பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த பகைப்புலத்தில் மலையகம் குறித்த அபிவிருத்தி எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெருந்தோட்டத் துறைக்கான பத்தாண்டு திட்ட உருவாக்கம்
முன்னைய புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களை (1990.20.15) ஒட்டியதாக (2006.20.15) ஆண்டு தோட்ட சமுதாயத்தின் தேசிய நடவடிக்கை திட்டம் ஒன்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டது. இதுவே பத்தாண்டு திட்டம் என அடையாளம் காணப்பட்டது. இந்த திட்டம் அதிகமான அளவில் புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்த ஒன்றாக இருந்தது. இத்திட்டத்திற்காக அமைச்சரவை 2006ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தாலும் அரசியல் மற்றும் அமைச்சுகள் அரசாங்க கொள்கைகள் மாற்றம் காரணமாக இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், இத்திட்டத்தின் நடைமுறை ஆக்கம் குறித்து ஊடகங்களும் மற்றும் சிவில் அமைப்புகளும் தொடர்ந்தே வலியுறுத்தி வந்தன.

2015இல் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. அந்த அமைச்சின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஒன்றாக இந்த பத்தாண்டு திட்டத்தின் மீள் உருவாக்கம் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை மீண்டும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்ட உருவாக்கலில் சம்பந்தப்பட்ட சகல உரித்தாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக தேசிய மட்டத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அன்றைய நிதி அமைச்சரும், கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சரும் பெருமளவிலான நன்கொடை நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2ஆவது நிகழ்வாக பிராந்திய மட்டத்தில் மாகாண, மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்போடு கலந்தாலோசனை நடைபெற்றது. அதன் பின்னர் பிரதேச செயலக மட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட அரசாங்க துறைசார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் என்பவற்றோடு கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு ஒரு செயல் தூண்டல் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அங்கத்தவர்களிடையே இத்திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்களை உள்ளடக்கியதான திட்டவரைவு அனைத்து தரப்பினரின் ஆலோசனையுடன் தேசிய மட்டத்திலான ஒரு கலந்துரையாடல் மூலம் இறுதியாக்கப்பட்டது.

சமீபத்தில் பொதுத்தேர்தலை (ஆகஸ்ட் 17) தொடர்ந்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி என அமைக்கப்பட்டுள்ளது. இதுவே பத்தாண்டு திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு பொறுப்பான அமைச்சாகும். இந்த இறுதி வடிவம் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்ததற்கு பின்னால் இத்திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு தேவையான நிதி வளங்களை திரட்டுவதற்காக நன்கொடையாளர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும். அங்கு இத்திட்டம் அச்சு வடிவில் வெளியிடப்பட்டு, சகலருக்கும் விநியோகிக்கப்படும்.

பத்தாண்டு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
இத்திட்டம் பெருமளவில் வீடமைப்பினருக்கே அதிக அழுத்தம் கொடுத்துள்ளது. 160,000 வீடுகள், நீர்வசதி, மலசலக்கூடம், பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்மாணித்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்தோடு கல்வி, சுகாதாரம், தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சமுதாயத்தில் வலுப்படுத்தலுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் சமத்துவம், சிறுவர் மற்றும் இளைஞர் உரிமைகள், விளையாட்டு மற்றும் கலாசார தேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நல்லாட்சி பிரதேச மட்டங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் மற்றும் இந்த மக்களின் உரிமைநிலை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆக, அபிவிருத்தியின் பல்வகை பரிமாணங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் கலாசாரம்  உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

செயலாக்கம்
இத்திட்டத்தின் செயற்படுத்துகைக்கு பல்வேறு உரித்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

*வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதி
*அரசாங்க வரவு–செலவு திட்டத்தின் மூலமான நிதி
*ஏனைய துறைசார் அமைச்சுகளின் ஈடுபாடு
*சிவில் சமூகத்தின் பங்களிப்பு
*நிறைவேற்றும் அமைச்சினது நிறுவன ரீதியான பலம்

இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இவற்றுள் நிறைவேற்று அமைச்சினது நிறுவனங்களினது நிறுவன ரீதியான பலம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்த அமைச்சின் கீழுள்ள ஆளணி எண்ணிக்கை அளவில் அதிகமாக காணப்பட்டாலும் உயர் மட்டத்தில் செயல்திறன் மற்றும் இயல்திறன் (ஊயியடிடைவைல யனெ ஊயியஉவைல) உள்ளவர்கள் குறைவானவர்களே உள்ளனர். எண்ணிக்கை அளவில் 250க்கு மேற்பட்ட பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியாளர் (Pடயவெயவழைn ஊழஅஅரnவைல ஊழஅஅரniஉயவழைn குயஉடைவையவழசள) பெருந்தோட்ட மாகாணஇ மாவட்ட அரசாங்க நிறுவனங்களில்இ தொழில்நுட்ப மல்லாதஇ முகாமைத்துவ உதவியாளர்களுக்கு குறைவானதும் சிற்றூழியர்களுக்கு சற்று உயர்வான நிலையில் கணிக்கப்படுகின்றனர். அத்தோடு இவர்கள் தோட்டத்துறையோடு அடையாளம் காணப்படாது மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் அமைந்துள்ளன. அரச நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்தோடு தற்போது இவர்களில் கணிசமானோர் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தேர்வு பெற்றுஇ பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர். இவர்களை விடஇ ஏனைய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் செயற்றிறனும் மட்டுப்படுத்தப்பட்டவொன்றாகவே உள்ளது.

இந்த அமைச்சின் கீழ் இரண்டு நிறுவனங்கள் நிரல்படுத்தப்பட்டிருக்கின்றன.

1. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT)
2. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம் (STMF)

முதலாவதுஇ டிரஸ்ட் என பொதுவாக அறியப்படுகின்றது. இதுவே தற்போது அமைச்சின் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இது தோட்ட முகாமைத்துவம், அரசாங்கம் தொழிற்சங்கம் என்ற முத்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முகாமைத்துவத்தை கொண்டிருந்தாலும் இது பெருமளவில் தோட்ட முகாமைத்துவம் சார்ந்த ஒன்றாகும். இந்நிறுவனத்தின் மீள்வரும் செலவுகள் (Recurrent Expenditure) தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்க நிதி, அந்நிறுவனம் செயற்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இதனது விடயப்பரப்பு, வீடமைப்பு, சுகாதாரம் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக தோட்டத்தொழிலாளரின் நலன் (Welfare) சார்ந்ததாக அமைந்துள்ளதே தவிர அவர்களது அபிவிருத்தி சார்ந்ததாக இல்லை.

இரண்டாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம். இது பாராளுமன்ற சட்டத்தினால் 2005இல் மறைந்த தொண்டமானின் நினைவை நிலைத்திருக்க வைக்கும் நோக்கம் கொண்டதாக நிறுவப்பட்டது! இதனது முகாமைத்துவம் அரசியல் சார்பு தன்மையானது. தொழிற்கல்வி(ஹட்டன்);, கலாசாரம் (றம்பொடை), விளையாட்டு (நோர்வூட்) போன்றவற்றிற்கான 272 மில்லியன் ரூபா அரசாங்க நிதியினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று அமைப்புகள் இந்த நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்றன. இதைவிடஇ பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் 400க்கு மேற்பட்ட செயற்றிட்டங்கள் தோட்ட மட்டத்தில் இந்நிறுவனத்தினூடாக செயற்படுத்தப்படுகின்றது. இதற்கான மீள்வரும் மற்றும் மூலதன செலவுகள் (சநஉரசசநவெ யனெ உயிவையட) அமைச்சினது செயற்றிட்டம் ஒன்றின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. சொந்த நிதியிலிருந்து (ளநடக கயைnஉé) இதனது செயற்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை. நிதி அமைச்சின் அங்கீகாரத்துடன் 150பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எனினும் இந்நிறுவனத்தின் அரசியல் சார்புத்தன்மை காரணமாக புதிய அமைச்சின் கீழ் இதனது செயற்பாடு தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
புதிய அதிகாரசபையின் தேவை

இத்தகைய பகைப்புலத்தில் பத்தாண்டு திட்டத்தினை செயற்படுத்துவதற்கான உரிய தெரிவு (Choice) என்ன? 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அப்போதைய அமைச்சு தயாரித்த மூன்றாண்டு அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த “ஒரு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அதிகார சபை” உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அன்றைய அமைச்சு இந்த அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தபோது அது அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஊடகங்களிலும் சிவில் சமூகத்தினாலும்; வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தோடு 2015இல் பொதுத் தேர்தலுக்கு முன் “தமிழ் முற்போக்கு முன்னணி” தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த 23 கோரிக்கைகளில் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்பதையும் முன்வைத்துள்ளது.

எனவே தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் அது விடயப்பரப்புக்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில்இ மலைநாட்டு புதிய கிராமங்களை அபிவிருத்திக்கான அதிகாரசபை (Hill Country, New Village Development Authority என்ற கோரிக்கை உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே தற்போது இறுதியாக்கப்பட்டுள்ள பத்தாண்டு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இத்தகைய அதிகாரசபை போதிய நிறுவன ரீதியான கட்டமைப்பை தருவதோடு தேவையான உந்து சக்தியையும் அளிக்கக் கூடியதாக அமையும்.

-எம்.வாமதேவன்-

நன்றி - வீரகேசரி

ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சீரற்ற காலநிலை-மண்சரிவுகள்,வெள்ளப்பெருக்கு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன. ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் தென்பகுதியில் குறிப்பாக காலி மாட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஊவா மாகாணத்தின் பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து அங்கிருந்த பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

கொஸ்லந்தை மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்வதாலேயே மண்சரிவுகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக மாலை நேரங்களில் கடுமையான மழைபெய்கின்றமை மண்சரிவு ஏற்படக் காரணமாகின்றது.

இந்த நிலையில் நாட்டின் 9 மாவட்டங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் தேசிய கட்டட ஆய்வு நிலையம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட், ரொக்வூட் தோட்டம், ஹட்டன் சமனலகம ஆகிய இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பகுதியிலும் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவை எவரும் மறந்திருக்கு முடியாது.

அது எப்போதும் மறக்கக்கூடியதல்ல.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 25 ஆம் திகதி கொத்மலை பிரதேசத்தின் ரம்பொடை வெதமுல்ல தோட்டத்தின் கயிறுகட்டி பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்தமை மற்றுமொரு பாரிய அனர்த்தமாகும் இதனையும் எவராலும் மறக்கமுடியாது.

இந்த நிலையில் கடந்த இரு வாரகாலமாக தொடரும் சீரற்ற காலநிலையும் அடைமழையும் இவ்வருடத்திலும் இவ்வாறான அனர்த்தத்தை ஏற்படுத்தி விடுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.

சில இடங்களில் சிறிய அளவில் மண்சரிவுகள் நிலம் தாழிறங்குதல் மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

பதுளை மாவட்டத்தின் பசறை தொகுதியிலுள்ள பசறை வீதி 8ஆம் கட்டையில் அமைந்துள்ள யூரி தோட்டத்தில் கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக இப்பகுதி வீடொன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் தாயொருவரும் இரு பிள்ளைகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பசறை வீதி 10 ஆம் கட்டை பகுதியிலுள்ள கோணக்கலை தோட்டத்தின் மேற்பிரிவில் மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த 48 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி அகதிகளாக கோணக்கலை தோட்ட வைத்தியசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறிய இவர்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை தோன்றியிருந்தது. இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரின் கவனத்திற்கு தோட்ட பொதுமக்கள் கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த மக்களுக்குரிய நிவாரணங்களை பசறை பிரதேச செயலாளரின் மூலமாக பெற்றுக் கொடுப்பதற்குரிய கலந்துரையாடல்களை இவர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, பசறை – நமுனுகுல வீதியின் 16 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிக்குரிய வாகனப் போக்குவரத்து கடந்த வாரத்தின் இறுதி இரு நாட்களிலும் தடைப்பட்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சீரற்ற காலநிலை அதற்கு இடமளிக்கவில்லை.

மாலை வேளையில் தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. சிறு அருவிகளும் ஓடைகளும் பெருக்கெடுத்துள்ளன. ஆறுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலைமை காரணமாக பசறை பகுதிலுள்ள மீதும்பிட்டிய, சோலண்டஸ், பட்டாவத்தை, யூரி, கணவரல்ல, கோணாக்கலை ஆகிய பகுதிகளிலும் பதுளை தொகுதியில் செல்வகந்தை, ஸ்பிரிங்வெளி உட்பட பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று பண்டாரவளை, அப்புத்தளை பகுதிகளிலுள்ள அதிகமான தோட்டங்களில் மீண்டும் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. பிட்டரத்மலை, தம்பேதன்ன பகுதிகளிலும் ஹல்துமுல்லை பகுதியிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டுள்ள தோட்டக் கம்பனி நிர்வாகங்கள் மண்சரிவு அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தொழிலாளர் குடும்பங்களை அழைத்து அனர்த்தம் ஏற்படும்போது பொது இடங்களில் சென்று பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மூளைச் சலவை செய்கின்றனர். கடந்த வருடம் அகதிகளான மக்களின் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்னடித்ததை யாரும் மறந்து விடமுடியாது. தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கொள்ளவே தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறு தந்திரமாக செயற்பட முனைந்துள்ளன. மண்சரிவு அனர்த்த அபாயம் நிலவும் பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து அனர்த்தத்தின் போது பாதுகாப்பு பெறுவது தொடர்பான பயிற்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறான பயிற்சிகள் பதுளை, தெளிவத்தை தோட்டம், பசறை, மீதும்பிட்டிய தோட்டபகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

மழையுடன் கூடிய காலநிலையின் போது தொடர் லயன் குடியிருப்புகளை சுற்றியுள்ள வடிகான்களில் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய வழிவகைகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே பொதுமக்களும் தமக்குரிய பாதுகாப்பை முறையாகப் பேண நடவடிக்கை எடுத்தால் ஏற்படும் பாரிய ஆபத்துகளை ஓரளவுக்கேனும் குறைத்துக் கொள்ள முடியும்.

நன்றி - வீரகேசரி

சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய, 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும் என கோரி  தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வார்ப்பாட்டம் மெராயா தங்ககலை தோட்ட சந்தியில் இன்று காலை 08 மணிக்கு நடைபெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 07 தடவை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் உண்மையான வெளிப்பாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோ கணேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம்.
ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிட வேண்டுமென வலியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்.
தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்கப் போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள் விழித்து கொண்டே இருக்கின்றோம்.
ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வாக்கு பலத்தினை கொண்ட எமக்கு எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் என்ன செய்வது என்று தெரியும். தற்போது கிடைக்கும் சம்பளத் தொகையில் வாழ்க்கையை சமாளிக்க முடியவில்லை.
பிள்ளைகளின் கல்வி பாழாகி போகின்றது என்பதினை உணர்ந்தவர்கள். தான் எமது தலைவர்கள் தீபாவளி திரு நாளை கொண்டாட காத்திருக்கின்றோம்.
இந் நிலையில் பொருட்களின் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது.
எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
ஆகவே இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தினை நிறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, October 24, 2015

உழைப்­புக்கு ஏற்ற ஊதி­யத்தை மாத்­தி­ரமே உரி­மை­யாக நினைக்கும் தொழி­லா­ளர்கள்

 

நாட்டு மக்­களின் நலன்­புரி, அர­சியல் அபி­லா­ஷைகள், தேவைப்­பா­டுகள், விருப்பு வெறுப்­பு­களில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த அர­சி­ய­லி­லி­ருந்தும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்ற நிலையில் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து வெளி­ப்ப­டை­யா­கவே அவர்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர்.
 
குறிப்­பாக தேயிலை உற்­பத்தித் துறையைச் சேர்ந்த அப்­பாவித் தொழி­லா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில் இன்­னு­மின்னும் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.
 
தமிழ் அர­சியல் வாதி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் மேடை­களில் தோன்றும் போது கும்­பி­டு­போ­டு­வ­தற்கும், வீர வச­னங்கள், பசப்பு வார்த்­தை­களைக் கூறும் போது கைதட்டி மகிழ்­விப்­ப­தற்கும் மாத்­தி­ரமே இது வரையில் தமிழ் சமூ­கத்தைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அதிலும் மலை­யக அர­சியல் பற்றி சொல்லித் தெரிய வேண்­டி­யது கிடை­யாது. பந்தா காட்­டு­வ­தற்கே சிலர் வலம் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.
 
சிங்­கள அர­சியல் வாதிகள் மற்றும் முஸ்லிம் அர­சியல் வாதி­களைப் பொறுத்­த­வ­ரையில் போட்டி போட்டுக் கொண்டு தமது சமூ­கங்­க­ளுக்கு சேவை செய்து வரு­கின்­றனர்.
 
பாரா­ளு­மன்­றத்­திலும் இது தொடர்­பான கருத்து வாதங்­களை முன் வைத்து வரு­கின்­றனர். அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வரு­கின்­றனர்.
 
எனினும் மலை­யக மக்கள் தொடர்­பிலும் அவர்­க­ளது சம்­பள விட­யத்­துக்கு நிலை­யான தீர்­வொன்றை முன்­வைப்­ப­தற்கும் பாரா­ளு­மன்­றத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் மலை­யகத் தலை­மைகள் தொடர்ச்­சி­யா­கவே தவறி வரு­கின்­றன.
 
புதிய அர­சாங்கம் அமைத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்­டன. செப்­டெம்பர் முதலாம் திகதி பாரா­ளு­மன்றம் கூடி­யதன் பின்னர் பல அமர்­வுகள் இடம்­பெற்று விட்­டன. ஆனாலும் நீண்டு வரும் மலை­யக தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களின் சம்­பள விவ­காரம் 7 மாதங்கள் கடந்தும் தீர்­வின்றி காணப்­ப­டு­வது தொடர்பில் மலை­ய­கத்தைப் பிர­தி­நி­தித்துவப்படுத்தும் தலை­வர்கள் சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ளத் தவ­றி­யுள்­ளனர்.
 
பாராட்­டுக்­க­ளையும் பொன்­னா­டை­க­ளையும் மாலை­க­ளையும் கைதட்­டல்­க­ளையும் வாங்கிக் கொள்ள முண்­டி­ய­டிக்கும் மலை­யகத் தலை­மைகள் தமது மக்­களின் விட­யங்­க­ளிலும் அவர்­க­ளது வாழ்­வா­தார விட­யங்­க­ளிலும் கூட குரு­டர்­க­ளாக இருந்து வரு­கின்­றனர்.
 
ஐக்­கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி என்ற பெயர்­களில் பாரா­ளு­மன்றம் சென்றோர் தமது கட­மை­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் உணர்ந்து செயற்­பட்­டுள்­ள­னரா? என்­பதை மன­சாட்­சியைத் தொட்டு கேட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மாத காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற விவா­தங்கள் மலை­ய­கத்தைச் சார்ந்த உறுப்­பி­னர்கள் எவ்­வ­ளவு பாரா­ளு­மன்­றத்தில் செல­விட்­டுள்­ளனர் என்­பதும் விவா­தங்­களில் நேரத்தை ஒதுக்கி தமது மக்­களின் பிரச்­சி­னை­களை முன்­வைப்­ப­தற்கு எந்­த­ளவில் பிர­யத்­த­னப்­பட்­டுள்­ளனர் என்­பதும் கேள்விக் குறிதான்.
 
தேர்தல் காலங்­களில் இவர்கள் காட்­டிய ஆர்வம் இப்­போது கிடை­யாது. இன்னும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு இவர்கள் தான் சீமான்கள் என்­பதால் வாக்­க­ளித்த மக்கள் கைகட்­டியே நிற்க வேண்­டி­யது தான் இறு­தி­யாக இருக்­கி­றது.
 
கேட்­ப­தற்கு வேம்­பா­கவே இருந்­தாலும் மலை­யக மக்கள் அவர்­க­ளது தலை­மை­களால் அப்­பட்­ட­மாக ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர். பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மைக்கும் சுக­போ­கத்­துக்கும் மக்­களின் முன்னால் தாங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் என்­பதைக் காட்­டிக்­கொள்­வதே இவர்­களின் சிறப்­பம்­ச­மாக இருக்­கி­றது.
 
“ஐயா பெரி­ய­வர்­களே உங்­க­ளுக்கு மன­சாட்­சியே கிடை­யாதா? எங்­களை ஏன் இப்­படி ஏமாற்­று­கி­றீர்கள்? இன்னும் எத்­தனை காலத்­திற்­குத்தான் எங்­களை ஏமாற்றி எங்­க­ளது முதுகில் ஏறி சவாரி செய்­வ­தற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றீர்கள்?. ஏ.சி.காம்­பி­ராக்­க­ளிலும் ஏசி வாக­னங்­க­ளிலும் காலத்தைக் கழித்து வரும் நீங்கள் ஏழு­மாத கால­மாக எமக்­கான ஆக்­க­பூர்வ செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளா­தி­ருக்­கி­றீர்­களே! ஆறு முறை­களும் சம்­பளப் பேச்­சு­வார்த்தை தோல்­வி­கண்­டுள்ள நிலை­யிலும் அர­சாங்­கத்­துக்கும் எமது வேதனை புரி­ய­வில்­லையே! உங்­க­ளுக்­கெல்லாம் மன­ச்சாட்சி என்று ஒன்று இருக்­கி­றதா” என்ற நிலை­யில்தான் இன்று மலை­ய­கத்தில் பெருந்­தோட்டத் தொழிலில் ஈடு­பட்டு வரும் தொழி­லா­ளர்கள் அங்­க­லாய்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
பெருந்­தோட்­டங்­களை நிர்­வ­கித்து வரும் கம்­ப­னிக்­கா­ரர்­களும் மலை­யக அர­சியல் வாதி­களும் இணைந்து தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஊதி­யத்தை மறுத்து வரு­கின்ற ஏமாற்றுத் தன்­மையை, அர­சாங்­கமும் வாய்­மூடி மெள­ன­மாக பார்த்துக் கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.
 
மலை­ய­கத்தில் தேயிலை உற்­பத்தி என்­பது இன்று நாட்டின் தேசிய வரு­மா­னத்தின் மூன்­றா­வது பங்­கா­ளித்­து­வத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆடைத் தொழில், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்­றுக்கு அடுத்­த­தாக தேயிலை உற்­பத்­தியே காணப்­ப­டு­கி­றது.
 
குண்­டூசி கூட சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­கின்ற இலங்கைத் திரு­நாடு, தேயிலை என்ற பொருளை இறக்­கு­மதி செய்­கின்­றதா? என்­பதை சிந்­தித்துப் பார்க்க வேண்டும். மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் குள­வி­க­ளிடம் கொட்­டுக்கள் வாங்­கியும் இன்னும் இன்­னோ­ரன்ன துன்ப துய­ரங்­களை சுமந்­த­வர்­க­ளா­கவும் இருக்­கின்ற தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களால் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்ற தேயி­லையை ஏற்­று­மதி செய்­வ­தற்கும் ருசித்து ரசித்து தேநீர் அருந்­து­வ­தற்கும், ஒரு சமூகம் நிதமும் தன்னை வருத்திக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை ஏன் சிந்­திக்­கத் ­தவறு­கின்­ற­னர் என்பது தெரி­யா­துள்­ளது.
 
எதிர்­பார்ப்­புகள் எது­வு­மே­யின்றி உழைப்­புக்கு ஏற்ற ஊதி­யத்தை மாத்­தி­ரமே உரி­மை­யாக்கிக் கொள்ள நினைக்கும் மேற்­படி தொழி­லா­ளர்கள் மட்டில் மன­சாட்சி இல்­லா­த­வர்­களைப் போன்ற செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
 
தேயிலை உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் என்ற வர்க்­கத்­தி­னரைப் பொறுத்த வரையில் அவர்­க­ளுக்­கான சம்­பளம் நலன் புரி­வி­ட­யங்கள் என்­பன இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை நிர்­ண­யிப்­ப­தா­கவே சுமார் 23 வரு­டங்­க­ளாக நீடித்து வரு­கின்­றது. உண்­மை­யா­கவே கூறப்­போனால் இதுவும் ஒரு வகை­யி­லான அடிமைச் சாசனம் போன்­ற­தா­கவே அமைந்து­ விட்­டது.
 
நாட்டின் பொரு­ளா­தார நிலையில் எத்­த­கைய ஏற்றத் தாழ்­வுகள் இடம்­பெற்­றாலும் கூட தேயிலை உற்­பத்தித் தொழிலில் ஈடு­படும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­ப­ள­மா­னது இரண்டு வரு­டங்­க­ளுக்கு மாறா­நி­லை­யி­லேயே காத்­தி­ருக்கும் நிலை உண்டு.
 
அரச ஊழி­யர்கள் மட்டில் பொது­மக்­க­ளுக்கு இன்­றைய நிலை வரை­யிலும் திருப்­தி­யான நிலைப்­பாடு காணப்­ப­ட­வில்லை. அதிலும் பெருந்­தோட்ட மக்­களைப் பொறுத்த வரையில் அரச நிறு­வ­னங்­களில் தமது கட­மை­களை செய்து கொள்­வ­தற்கு நாயா­கவும் பேயா­கவும் அலை­ய­வேண்­டிய நிலையை உரு­வாக்கித் தரு­ப­வர்கள் தான் இந்த அரச ஊழி­யர்கள் எனும் அந்­தஸ்­துக்­கு­ரி­ய­வர்கள்.
 
நாளைக் கடத்தி ஊதியம் பெற்று வரும் இவர்­க­ளுக்கு வருடா வருடம் சம்­ப­ளத்­தையும் ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளையும் அதி­க­ரித்துக் கொடுப்­ப­தற்கும் ஒவ்­வொரு தேர்­தல்­களின் போதும் சம்­பள அதி­க­ரிப்பு வாக்­கு­றுதி வழங்கி அதனை நிறை­வேற்­று­வ­தற்கும் முற்­ப­டு­கின்ற அர­சாங்கம் நாட்­டுக்கு வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுப்­ப­தற்கும் அவர்­க­ளுக்­கான நிலை­யான சம்­பளத் தொகை ஒன்றை நிர்­ண­யித்துக் கொடுப்­ப­தற்கும் தயக்கம் காட்­டு­வது ஏமாற்­றுத்­த­ன­மாகும்.
 
மேற்­கூ­றப்­பட்­ட­வாறு கூட்டு ஒப்­பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­கி­யுள்­ளது. ஒக்­டோபர் மாதம் இன்­றைய திகதி வரை­யான காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் சுமார் ஏழு மாதங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. ஏழு மாதங்கள் பூர்த்­தி­யான நிலை­யிலும் ஒரு தரப்­பி­ன­ரது சம்­பளக் கோரிக்­கையை அல்­லது அதன் உரி­மையை தட்டி கழித்து வரு­வது திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டா­க­வுள்­ளது.
 
அல்­லா­விட்டால் தோட்டத் தொழி­லா­ளர்கள் கேட்பார், பார்ப்பார் எவ­ரு­மில்­லா­த­வர்கள் தானே என்ற நினைப்­பையும் உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது. ஏழு மாதங்­க­ளாக இவ்­வாறு ஒரு சமூகம் ஏமாற்­றப்­பட்டு அல்­லது யாரோ ஒரு தரப்­பி­னரின் தேவைக்­காக பழி­வாங்­கப்­பட்டு வரு­வது ஏற்­கத்­த­காத செயற்­பா­டுகள். மார்ச் மாதம் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­னதன் பின்னர் அடுத்த பேச்­சு­வார்த்தை தொடர்பில் ஆலோ­சிக்­கப்­ப­டு­கையில் 1000 ரூபா சம்­பளம் பெற்றுக் கொடுக்கப் போவ­தாக இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கூறி­யது. கோரிக்கை 1000 ஆக இருக்க அந்த தொகையில் திருத்­தங்­களை ஏனைய தொழிற்­சங்­கங்கள் மேற்­கொண்­டன.
 
பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­றன. கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்­களின் பிர­தி­நி­தி­களும் கம்­ப­னி­களின் பிர­தா­னி­களும் இவ்­வாறு பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட போதிலும் அதில் எந்­த­வொரு முடி­வுக்கும் வர­வில்லை. அனைத்து பேச்­சுக்­களும் தோல்­வி­யி­லேயே முடிந்­துள்ள நிலையில் ஆறா­வது பேச்­சு­வார்த்­தையும் தோல்வி கண்­டுள்­ளது.
 
தேயிலை உற்­பத்­தி­யி­னூ­டான நாட்­டுக்­கான வரு­மான நிலை மூன்­றா­வது இடத்தில் இருக்­கின்ற போதிலும் பெருந்­தோட்ட உற்­பத்­தியில் தனியார் தேயிலை உற்­பத்­தியே அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதில் பெருந்­தோட்­டத்­துறை தொடர்பில் அக்­கறை செலுத்­தப்­ப­டாத நிலை காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
 
பெருந்­தோட்­டங்­களைப் பொறுப்­பேற்ற கம்­ப­னி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவை தேயிலைத் தோட்­டங்­களைப் பரா­ம­ரிப்­ப­திலோ உற்­பத்­தி­களை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­மு­றை­களைக் கையாள்­வ­திலோ அக்­கறை செலுத்­து­வ­தில்லை. மாறாக செல­வே­யில்­லாது தேயி­லையை உற்­பத்தி செய்ய வேண்டும் என்று கம்­ப­னிகள் நினைத்துச் செயற்­பட்­ட­தா­லேயே பெருந்­தோட்­டத்­துறை தேயிலை உற்­பத்­தியில் வீழ்ச்­சி காணப்­பட்டு வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
 
தேயிலை உற்­பத்தி அத­னூ­டான வரு­மானம் இலாபம் என அனைத்து விட­யங்­க­ளையும் கம்­ப­னிக்­கா­ரர்கள் மட்­டு­மல்­லாது அர­சியல் தலை­மை­களும் அறிந்தே வைத்­துள்­ளனர். ஆனாலும் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களை வைத்து அர­சியல் செய்து கொண்­டி­ருக்கும் ஜாம்­ப­வான்கள் மக்­களைப் பற்றி சிந்­திக்கத் தவ­று­கின்­றனர் என்­ப­தை­விட அவர்கள் மக்­களை ஏமாற்றிப் பிழைக்­கின்­றனர் என்­பதே உண்மை.
 
பொதுத் தேர்­தலின் பிர­சார காலங்­க­ளின்­போது மலை­ய­கத்தின் அனைத்து அர­சியல் தலை­மை­களும் தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்பில் தமக்கே அதிக கரி­சனை இருப்­ப­தாகத் தெரி­வித்து பீத்திக் கொண்­டனர்.
 
தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி கண்­டதன் பின்னர் சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான உயர்ந்த தொனி பனி­யாக கறைந்து போய்­விட்­டது. மலை­யகத் தலை­மைகள் மட்­டு­மல்­லாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரும் அழ­கான கதை கூறினர். அவை காதுக்கு இனி­மை­யாகிப் போ­யி­ருந்­தன. எனினும் தேயிலைத் தொழி­லா­ளர்­க­ளு­ட­னான பெருந்­தோட்ட சமூகம் கிள்­ளுக்­கீரை என்றும் கறி­வேப்­பிலை என்றும் ஏமா­று­வ­தற்கே கட­வுளால் படைக்­கப்­பட்­ட­வர்கள் என்றும் அவர்­களும் சொல்­லாமல் சொல்லி விட்­டனர்.
தேர்தல் மேடை­களில் முழக்­க­மிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்­துள்ள நிலை­யி­லேனும் வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி எத­னையும் மேற்­கொள்­ளாது, தமது வெற்­றிக்குப் பங்­க­ளித்த மக்கள் தொடர்பில் மௌனி­க­ளாக இருந்து வரு­கின்­றனர்.
 
ஏழு மாத கால­மாக சம்­பளப் பிரச்­சினை ஒன்று தீர்­வில்­லாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வது ஜனா­தி­ப­திக்கோ பிர­த­ம­ருக்கோ தெரி­யாத அறிந்­தி­ராத விட­ய­மாக இருக்­கப்­போ­வ­தில்லை. அப்­படி அவர்கள் அறி­யா­தி­ருப்­ப­தற்கு சிறு­பிள்­ளை­களும் அல்லர். எல்­லாமே அறிந்­தி­ருந்து இது வரையில் ஒரு வார்த்­தை­யேனும் கூறா­தி­ருப்­ப­தா­னது மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளுடன் இணைந்து கொண்ட அவர்­களும் ஏமாற்­றுக்­கா­ரர்கள் என்­ப­தையே நிரூ­பிக்­கின்­றனர்.
 
இப்­படி எல்லா தரப்­பி­ன­ருமே ஏமாற்றிக் கொண்டும் கிள்ளுக் கீரை­யா­கவும் பயன்­ப­டுத்தி வரு­வ­தா­லேயே உங்­க­ளுக்­குக்­கெல்லாம் மன­ச்சாட்­சியே இல்­லையா என்று மக்கள் அங்­க­லாய்க்­கின்­றனர். மலை­யகத் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­களே இந்­நாட்டில் மிகக் குறை­வான வரு­வாயைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளா­கவும் மிகக் குறை­வான வரு­வாயில் தமது வாழ்­வா­தா­ரத்தைக் கொண்டு நடத்­து­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். இது ஜனா­தி­ப­திக்கும் புரியும் பிர­த­ம­ருக்கும் புரியும். மலை­யக அமைச்­சர்­க­ளுக்கும் புரியும். எம்.பி.க்களுக்கும் புரியும். ஆனாலும் வெறு­மனே பத்­தி­ரி­கை­களில் அறிக்­கை­களை விடுத்து சம்­பள அதி­க­ரிப்­புக்கு நட­வ­டிக்கை எடுப்போம் என்று கூறி­வ­ரு­வது மன­ச்சாட்­சியே இல்­லாத துரோ­கத்­த­ன­மான கூற்­றாகும்.
இங்கு ஒரு உண்­மையை உள்­ள­படி கூறு­வ­தனால் மலை­யக அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருமே மலை­யக மக்­களை வைத்து அநா­க­ரிக அர­சியல் செய்து வரு­கின்­றனர். இவர்­க­ளிடம் மக்கள் தொடர்­பி­லான அக்­கறை கிடை­யாது.
 
பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­விட வேண்டும். பதவி நிலை­களை அடைந்து விட­வேண்டும் என்­பது மட்­டுமே இவர்­க­ளது நோக்கம். வாய்­கி­ழிய வாக்­கு­று­திகள் கொடுக்கும் அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருமே ஏமாற்­றுக்­கா­ரர்கள் என்­பதை இன்று மக்கள் புரிந்து கொண்­டுள்­ளனர்.
 
பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­விட்ட அனை­வ­ருமே இன்னும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு அனைத்து சிறப்­பு­ரி­மை­க­ளையும் அனு­ப­வித்தே தீருவர். இதற்­கா­கவே கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாடு­பட்­டனர்.
 
மலையக மக்களைப் பொறுத்த வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவார்களேயானால் அது மலையக அரசியலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்பதை புரிந்து கொண்டு செயற்பட்டால் அது நலமாக அமையும்.
 
எனவே மலையகத் தலைமைகளை நம்பியிருக்கும் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையிலான செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். தேயிலை உற்பத்தியாளர்களின் உரிமையான சம்பளத்தையும் அதன் அதிகரிப்பினையும் பெற்றுக் கொடுப்பதற்கு மலையகத் தலைமைகள் கட்சி பேதங்களை மறத்தல் வேண்டும் என்பது பிரதானமானதாகும்.
 
அதுமாத்திரமின்றி அனைத்து தரப்பினருமே உண்மையாகவே தமது மக்களின் மீது இரக்கம் கொண்டவர்களாக இருந்தால், மனச்சாட்சியே இல்லாத கம்பனிக்காரர்களிடம் இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் தலையீட்டை வலியுறுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் சாக்குப்போக்குக் கதைகளைக் கூறுமானால், அத்தகைய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தங்களை மலையகத் தலைமைகள் பிரயோகிப்பது சிறப்பாக அமையலாம்.
 
இல்லையேல் கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்கியேனும் தேயிலை உற்பத்தியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கும் அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கும் உதவிபுரிய வேண்டும்.மலையகத் தலைமைகளும் சரி மத்திய அரசின் பிரதானிகளான ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி அதேபோன்று தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் கம்பனிக்காரர்களானாலும் சரி எல்லாதரப்பினருமே மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களது சாபத்துக்கு ஆளாவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 ஜே.ஜீ.ஸ்டீபன்