Friday, November 7, 2008


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புக்கள் சொந்தமா?

அரசியல் தொழிற்சங்கத் தலைவர்களால் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் வார்த்தைகளை நம்பி தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச்சர்ஸ் நிலத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்ட வீடுகளை விருப்பப்படி விற்கவோ, வேறு பாணியில் கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ நினைத்து அப்படிச் செய்யும் போது நிர்வாகத்தினால் அதைக் கட்டுப்படுத்துவதோடு தவறும் பட்சத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அநேக தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும் இதை சென்று பார்வையிடலாம்.
வீட்டை இன்னொருவருக்கு விற்றதாகவோ மாற்றியதாகவோ நிர்வாகம் கருதி அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தால் விபரமறியாத தொழிலாளர்கள் தொழில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருடக் கணக்கில் வழக்காடப்பட்டு இறுதியில் காணியும் வீடும் தனக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கத்தவறி, வழக்கில் தோல்வி அடைந்து தொழிலை இழப்பதோடு வீட்டையும் நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற கட்டளையை மீறும் பட்சத்தில் எதுவித அறிவித்தலுமின்றி இரக்கமற்ற முறையில் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவதுடன் உடைமைகளுடன் வீசப்பட்டு நிர்வாகத்திடம் வீடு கையளிக்கப்படுகிறது. வீடும் அதைச் சுற்றியிருக்கும் நிலமும் தொழிலாளருக்கு சொந்தம் என்பவர்கள் அதற்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

பொகவந்தலாவை, டிக்கோயா, வட்டகொட, மடக்கொம்பரை போன்ற தோட்டப் பகுதிகளில் வேலை செய்யாதவர்கள் வீடுகளில் இருக்க முடியாது என்று நிர்வாகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை யாவரும் அறிவோம். மடக்கொம்பரையில் முன்னாள் (பா.உ) சி.வீ வேலுப்பிள்ளையின் வீடு கூட பிஸ்கால் மூலம் கைப்பற்றப்பட்டது. டிக்கோயா பகுதியில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதிக்கும் இதுவே நடந்தது. மடக்கொம்பரை மேல் பிரிவுக்கு சொந்தமான சிறு நிலத்தை வாங்கி வீடு கட்டிய தொழிலாளிக்கு எதிராக பொலிஸ் மூலம் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பல தோட்டங்களில் நிர்வாகங்கள் லயன்களையும், சேவையாளர்களின் வீடுகளையும் வங்களில் அடைவு வைத்து பணம் பெற்றுள்ளதை வருடாந்த அறிக்கைகளில் கம்பனிகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தொழிலாளர்களால் லட்சக்கணக்கில் சேகரித்துக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் கூட நிர்வாகத்துக்கே சொந்தமானதாகும். இந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் உழைத்து இறுதி காலத்தில் பெறப்படும் ஊழியர் சேமலாப நிதியை கொண்டு தாங்கள் இருக்கும் வீடுகளை நல்ல முறையில் திருத்தியமைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தொழிலாளியும் இந்த வீடுகளை சொந்தம் கொண்டாடவோ சட்டப்படி அடைவு வைக்கவோ முடியாது. காரணம் காணி, வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் தேவை.

இதேபோல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தொழிலாளர்கள் கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கும் 15 ஆண்டுகளுக்குமான பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி பெற்ற கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிக் கிடைக்காது என்றும் உறுதிப் பத்திரத்தை வாங்கிக் கொடுக்க அமைச்சராக அப்போதிருந்த பெ. சந்திரசேகரன் அவர்களிடம் சவால் விடுத்திருந்தார் ஓ.ஏ. இராமையா என்பது நினைவு கூரத்தக்கது. 1996ம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த இவ்வாறான முறை பணத்தை கடனுடன் திருப்பிய செலுத்திய தொழிலாளர்கள் எவருக்கும் உறுதிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் வீட்டுக்கு வாடகையைப் போல் ஒக்ஸ்போர்ட் போன்ற தோட்டங்களில் மாதாந்தம் 390 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறவிடப்படும் என்பது தெரியவில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் விஸ்தரித்துக் கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும். அப்படி அனுமதி பெறாவிடில் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் வரப் போகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்காக எவ்வளவு பணம் நிர்வாகங்களால் அறவிடப்பட்டு அதிகார சபைக்கு செலுத்தப்பட்டன. என்ற விபரங்களை கூட பல தோட்டங்களில் அறிவிப்பதில்லை. எனவே இந்த முக்கிய விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் செய்யப் போவதை தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

சிதம்பரம் ஜோதி-
நிர்வாகச் செயலாளர்

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்

தொடரும்…..
விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Monday, November 3, 2008

தொழிலாளிக்கு கொலை அச்சுறுத்தல்

இரத்தினபுரி காவத்தை ஹவுப்பே, யாயின்ன தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதனால் அவர்கள் அத்தோட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 23-10-2008 ம் திகதி, இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை பெரும்பான்மையினர் சிலர் தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த தொழிலாளி அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்துள்ளார். அன்று மாலை இவரைத் தேடி வந்த பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் இவருடன் கைகலப்பிலீடுபட்ட போது தொழிலாளி அவர்களைத் தாக்கியதில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதால் தமிழ்த் தொழிலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான இத்தொழிலாளியையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பெரும்பான்மையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் தோட்டத் தொழிலாளியின் இரு பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டில் தனியாக உள்ள அவர்களது தாயைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

Sunday, November 2, 2008

உலக நிதி நெருக்கடி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை

உலக நிதி நெருக்கடியினால் தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உற்பத்தி தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிறுதோட்டத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே பாதிப்புக்குள்ளாவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தத் தகவல் பேரிடியைத் தந்துள்ளதோடு தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் சம்பள உயர்வு கோரிக்கை எதிர்நோக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. இலங்கையில் கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரிய கம்பனித் தோட்டங்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சலுகைகளை இவர்கள் அனுபவிப்பதில்லை. தற்போதுள்ள நிலைமையில் கொழுந்து பறிப்பதை குறைத்து எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலையை மட்டுமே செய்யும் வகையில் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும் போது புதிய கன்றுகளை நாட்டுதல், உரமிடுதல், போன்ற வேலைகள் ஒரு சில நாட்களில் மாத்திரமே செய்ய வேண்டியுள்ளது. வேலையில்லாது கஷ்டப்படும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச தரப்பினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Friday, October 31, 2008

தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்காமை குறித்து அச்சம்

புசல்லாவ நகரத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும், வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் நகரத்திற்கு வரும் அப்பாவி தொழிலாளர்கள் மீது நகரில் உள்ள இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 29-10-2008 புசல்லாவையிலிருந்து பெரட்டாசி தோட்டத்துக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் கொழும்பு போன்ற பகுதிகளில் வேலை செய்து வரும் பெரட்டாசி, மேமலை, காச்சாமலை போன்ற இளைஞர்கள் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு திரும்புகையில் நகரில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நகர்புற இந்திய வம்சாவளியினரையும் உள்வாங்கவும்- பெற்றோர்கள், மாணவர்கள்

இந்திய வம்சாவளியினருக்காக நுவரெலியா மாவட்டம் பத்தனையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் மலையக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இம் மாணவர்களின் நன்மை கருதி பத்து சத வீத மாணவர்களையாவது உள்வாங்க வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ் உதவி பணிப்பாளர் நியமிக்க வேண்டுகோள்

ஊவா மாகாண தோட்டப்பாடசாலைகள், நகர்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி பணிமனைகளில் நிலவும் தமிழ் மொழிப் பணிப்பாளர்களின் குறை மற்றும் இதர அபிவிருத்தி தொடர்பாக ஊவா மாகாண ஆளுனரிடம் கலந்துரையாடிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வியமைச்சருமான எம். சச்சிதானந்தன் தமிழ் மொழி கல்வி காரியாலயங்களில் கடமையாற்றி வந்த பல உதவி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளதால் அந்த வெற்றிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். சிங்கள மொழி அதிகாரிகள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு செல்லும் போது சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புள்ளது. எனவே உவா மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி பணிமனைகளில் கடமையாற்றவென தமிழ் மொழி உதவி பணி;ப்பாளர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்

தொண்டர் ஆசிரியை சடலமாக மீட்பு

அக்குரஸ்ஸ வில்பிட்ட தோட்டத்தில் வசித்து வந்த பழனி விஸ்வநாதன் மகேஸ்வரி(28) தோட்டத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை திறம்பட கற்பித்து வந்தவர். இவ்வாறு கல்வி கற்பிக்க கடந்த 25-10-2008 சென்றவர் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தமையை இவரது தந்தை பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். நேற்று முன்தினம் (29-10-2008) அதே தோட்டப் பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து இவர் அணிந்திருந்த ஆடையினால் கால்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப் பெண் மரணிக்க முன்பதாக களங்கப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, October 30, 2008


நிதி நெருக்கடியால் தேயிலை தொழில் பாதிப்பு

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிற போதும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கருத்துவெளியிட்டுள்ள இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என ஆலோசனை தெரிவித்தார்

தோட்டத்திற்கான பஸ்சேவையை ஆரம்பிக்க கோரிக்கை

இரத்தினபுரி காவத்தை நகரிலிருந்து வில்லம்பிய மடலகம தோட்டத்திற்கான பஸ்சேவையை உடனடியாக ஆரம்பிக்குமாறு பெருந்தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக காவத்தை நகரிலிருந்து இந்த தோட்டத்திற்கு ஐந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபட்டிருந்தபோதும் தற்போது எதுவும் சேவையில் இல்லை. இதனால், மடலகம, சமரகந்த மியனவிற்ற, தெல்வலை, கோம்பகந்த நடுக்கணக்கு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்த பஸ்சேவை இல்லாத காரணத்தினால் தோட்ட மாணவர்கள் நகரங்களில் மாதம் 4500 ரூபா வாடகை கொடுத்து தங்கி கல்விகற்கின்றனர். பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு வாடகை செலுத்தி கல்வி கற்கின்றனர். மற்றவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளனர். தோட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மாதம் 3000 ரூபா கொடுத்து தனியார் வாடகை வாகனத்தில் தினந்தோறும் பயணம் செய்கின்றனர். இதனால், இவர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி வாகன வாடகைக்காக செலவு செய்யப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை

அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெருநாள் முற்பணம் மேலதிக கொடுப்பனவுகள் தாராளமாக வழங்கப்படுகின்ற போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முற்பணம் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுவதற்கு கம்பனிகள் மறுப்புத் தெரிவித்தாக ரி.வி சென்னன் பசறையில் தங்கர் பொட்லிங் கம்பனி தொடர்பாக தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு கூட கம்பனிகள் மறுப்புத் தெரிவித்து பின்னரே குறைந்த தொகை கொடுப்பதற்கு இணங்கியுள்ளன. அதேபோல் சம்பள விடயத்திலும் தொழிலாளர்கள் போராட்டம் செய்தே குறைந்தளவு சம்பள அதிகரிப்பை பெற வேண்டியுள்ளது. நமுணுகுல தங்கர் பொட்லிங் கம்பனியின் கீழ் இயங்கிவரும் ஆறு தோட்டங்களில் மூன்று தோட்டங்களுக்கு தைப்பொங்கலுக்கும் மூன்று தோட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கும் முற்பணம் வழங்குவது வழக்கம். ஆனால், கணவரல்ல, கோணக்கலை, கந்தசேனை ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் 3,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு பணம் இல்லாமல் கம்பனி நிர்வாகம் தடுமாற்றமடைந்து குழப்பத்தில் இருந்தது.
கடந்த வருடம் ஆறு தோட்டங்களில் பணிபுரியும் 6,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் 85 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படவில்லை. அதைவிட தொழிலாளர்களின் மாதாந்தம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் கொடுப்பனவுகள் வங்கி மரணதார சங்கம் என்பவற்றுக்கு வருடக் கணக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. தொழிலாளர்களினது சம்பளத்திலிருந்து மாத்திரம் மாதாந்தம் கொடுப்பனவுகள் கழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

தமிழ் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு சிங்கள கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு முஸ்லிம் கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழும் களுதாவளை கிராமத்திற்கு தமிழ்க் கிராம சேவகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான எம்.சிவஞானம் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவி வகித்தபோது அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகளிடம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு தமிழ்க் கிராமசேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதையடுத்து நுவரெலியா, பதுளை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மட்டும் தமிழ் கிராம சேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதிகார பரவலாக்கல் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

Friday, October 24, 2008

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அரசு உறுதியா இருக்கிறது – அத்தாவுட

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அத்தாவுட செனிவிரத்ன அமைச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தோட்டத் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலம் தெரிவிக்கையில் இது தொடர்பாக சம்பள நிர்வாக சபைகளின் திட்டங்களுக்கு அமைய முதலாளிமார் சம்மேளத்தில் அங்கம் வகித்துள்ள சிலர் குறித்த திட்டத்தை நடமுறைப்படுத்துவதை தட்டிக்கழித்து வருவதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரி இருக்க வேண்டும், எனினும் சில பிரதேச செயலகங்களில் அவ்வாறான அதிகாரிகள் இல்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலையீடுகளை மேற்கொண்டு, பணிகளை செய்து முடிக்கும் பாரிய பொறுப்பு தோட்டத் தொழிற்சங்களுக்கு உள்ளது.

பாதையை சீரமைக்க கோரி பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்

மத்தியமாகாணம் பூண்டுலோயா மற்றும் டன்சினன் இடையே சுமார் 15 கி.மீ பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப் பாதையில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை அப் பிரதேசத்தில் பூண்டுலோயா, நுவரெலியா உள்ளிட்ட நகர்புற பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் உரிய பஸ் வசதிகளின்றி அல்லல்படுகின்றனர். நடைபாதை வழியாகவே இவர்கள் நகர்புற பாடசாலைகளை சென்றடைய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை இடையிலே நிறுத்தியும் உள்ளனர். எனவே இப் பாதையை சீரமைத்து தருமாரும் இல்லாவிடில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்பவற்றில் ஈடுபட போவதாக தெரிவித்து நேற்று பாதையை சீரமைக்க கோரி இப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைளை வெளிக்காட்டினர்.