தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்காமை குறித்து அச்சம்
புசல்லாவ நகரத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும், வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் நகரத்திற்கு வரும் அப்பாவி தொழிலாளர்கள் மீது நகரில் உள்ள இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 29-10-2008 புசல்லாவையிலிருந்து பெரட்டாசி தோட்டத்துக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் கொழும்பு போன்ற பகுதிகளில் வேலை செய்து வரும் பெரட்டாசி, மேமலை, காச்சாமலை போன்ற இளைஞர்கள் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு திரும்புகையில் நகரில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.
ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நகர்புற இந்திய வம்சாவளியினரையும் உள்வாங்கவும்- பெற்றோர்கள், மாணவர்கள்
இந்திய வம்சாவளியினருக்காக நுவரெலியா மாவட்டம் பத்தனையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் மலையக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இம் மாணவர்களின் நன்மை கருதி பத்து சத வீத மாணவர்களையாவது உள்வாங்க வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ் உதவி பணிப்பாளர் நியமிக்க வேண்டுகோள்
ஊவா மாகாண தோட்டப்பாடசாலைகள், நகர்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி பணிமனைகளில் நிலவும் தமிழ் மொழிப் பணிப்பாளர்களின் குறை மற்றும் இதர அபிவிருத்தி தொடர்பாக ஊவா மாகாண ஆளுனரிடம் கலந்துரையாடிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வியமைச்சருமான எம். சச்சிதானந்தன் தமிழ் மொழி கல்வி காரியாலயங்களில் கடமையாற்றி வந்த பல உதவி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளதால் அந்த வெற்றிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். சிங்கள மொழி அதிகாரிகள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு செல்லும் போது சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புள்ளது. எனவே உவா மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி பணிமனைகளில் கடமையாற்றவென தமிழ் மொழி உதவி பணி;ப்பாளர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்
தொண்டர் ஆசிரியை சடலமாக மீட்பு
அக்குரஸ்ஸ வில்பிட்ட தோட்டத்தில் வசித்து வந்த பழனி விஸ்வநாதன் மகேஸ்வரி(28) தோட்டத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை திறம்பட கற்பித்து வந்தவர். இவ்வாறு கல்வி கற்பிக்க கடந்த 25-10-2008 சென்றவர் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தமையை இவரது தந்தை பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். நேற்று முன்தினம் (29-10-2008) அதே தோட்டப் பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து இவர் அணிந்திருந்த ஆடையினால் கால்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப் பெண் மரணிக்க முன்பதாக களங்கப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment