புதிய கூட்டு ஒப்பந்தம் கடந்த 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு விட்டது. அப்பாடா! கண்டத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோம் என்ற உள்ளூரக் களிப்பில் சிலர் வாய்க்கு ருசியாக வக்கணையாய் சாப்பிடலாம் என்று நின்றவர்கள் வாய்க்கரிசி மெல்லும் நிலைக்கானதாக வருத்தப்படுவோர் பலர். நடுவில் நின்று நடப்பது யாவும் நன்றாக நடக்கட்டும் என்று நகைகொள்வோரும் உளர். கோரினோம். 1000 ரூபா வாங்கித்தருவோம் என்று கூறினோம். கிடைத்ததைக் கொண்டு ஆறுதல் கொள்வதே தவிர வேறு வழியில்லை. மனம் மாறினோம் என்ற ரீதியில் இன்று கைக்கெட்டச் செய்திருப்பது 750 ரூபா சம்பளம்.
700 ரூபா அடிப்படைச்சம்பளம். தேயிலை விலைக் கொடுப்பனவு 50 ரூபா. மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவு 40 ரூபா. இனி EPF, ETF நிதியத்துக்காக 105 ரூபா வழங்க இணக்கம். ஒப்பந்தம் காலதாமதத்துக்குமான 3 மாத நிலுவைப் பணம் வழங்க உடன்பாடு. ஆக, தினமொன்றுக்கு 750 ரூபா உறுதி. இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் நாளொன்றுக்கான நிர்ணயம் 730 ரூபா. அப்படியென்றால் தற்போதைய புதிய ஒப்பந்தத்துக்கூடான தினசரி அதிகரிப்பு 20 ரூபாதானா என்று வினாக்கள் எழுப்பப்படுகின்றன.
வடிவேலுவின் காமெடி ஒரு படத்தில் இப்படி இருக்கும்: 'இருந்தாலும் அவனுங்க ரொம்ப நல்ல மனுஷனுங்க. வலிக்குதா வலிக்குதான்னு கேட்டு கேட்டுத்தான் அடிச்சானுங்க' என்றிருக்கும். புதிய கூட்டு ஒப்பந்தம் பற்றிக் கேட்டபோது நண்பரொருவர் இதைத்தான் ஞாபகப்படுத்தினார். பெருந்தோட்ட மக்கள் 700 ரூபா சம்பள ஏற்பாட்டை ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறாா்கள். 1000 ரூபா ஆசையை வளர்த்துவிட்டு இப்பொழுது அம்போவென்று ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கம். தோட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம். வீதிகள் தோறும் பேரணி. கடுமையான தொனியில் கண்டனம். வேட்கையுடனான விமர்சனம். ஏன் இந்த ஏமாற்றம்? மக்களுக்குப் புரிவதாய் இல்லை. போராட்டங்களில் சகல தொழிற்சங்க உறுப்பினர்களும் பங்கேற்று தமது வெறுப்பைக் காட்டினார்கள். சில இடங்களில் இ.தொ.கா. உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மட்டும் புறக்கணித்தார்கள்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்ட மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தனைக்கும் இந்த கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் இடம் பெற்றிருப்பதை இது கண்டிக்கின்றது. தவிர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தச் சம்பளப் பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சாடி இருக்கின்றார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தற்போது 700 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகையை அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு இ.தொ.கா தலைமைப் பணிமனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவித்தார். எம்மால் முடிந்ததைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இதைவிட அதிகமாக வங்கித்தர எவருக்காவது முடியுமானால் எல்லா உதவிகளையும் வழங்க தாம் தயாராயிருப்பதாக அவர் கூறினார். 1000 ரூபா கிடைக்கா விட்டால் தான் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கூறிவந்த அவர், தற்போது 20 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணங்கியதை நியாயப்படுத்த முனைவதாக புத்திஜீவிகள் கவலைத் தெரிவிக்கின்றார்கள்.
தவிர கூட்டு ஒப்பந்ததை கேள்விக்குட்படுத்திட யாருக்குமே முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்புகள் விரும்பினால் மட்டுமே அதனை ரத்துச்செய்ய இயலும். இந்தக் கூட்டு ஒப்பந்தம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றுக்கமைய உருவானது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்புகள் இதனை கம்பனிகளுக்குச் சாதகமான வகையில் சரத்துக்களைப் புகுத்தி கையாண்டு வருவதாக நெடுங்காலமாகவே குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றன. அமைச்சர் பழனி திகாம்பரம் கூறுவது போல் நீதிமன்றமே தலையிட முடியாதபடி இறுக்கமான விதிகள் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். இந்த ஒப்பந்தமானது தோட்ட மக்களை அடிமை சாசன குடிகளாக எடைபோடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகத்துடன் ஆரம்பமான சம்பளப் போரட்டம் இன்னும் ஒயவில்லை என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றார்கள்.
எனவே தான் இந்த ஒப்பந்தம் குறித்து பலரும் அதிருப்தியடைந்துள்ளளார்கள். இதை உறுதிப்படுத்துவது போலவே செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே காணப்படுகின்றது. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை முன்வைத்தது மலையக தொழிற் சங்கங்கள்தான். அதை அடைவதே எமது இலட்சியம் என்று அவர்கள் எழுப்பிய உறுதிமொழிகள் இறுதிவரை தொடரும் என்பது தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் முடிவில் நடந்ததோ வேறு. 500 ரூபா அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக உயர்வு என்று விளக்கம் தரப்படுகின்றது. மேலோட்டமாக பார்த்தால் 200 ரூபா தினமொன்றுக்கு அதிகரிப்புப் போலவே தோன்றும். 500 ரூபா அடிப்படைச் சம்பளம் அமைந்தபோது தினசரி கிடைத்த வேதனம் 730 ரூபா. ஆனால் 700 ரூபா அடிப்படைச் சம்பளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி சம்பளம் 750 ரூபா எப்படி ஆகும்? இதுதான் ஒப்பந்த சூட்சுமம். 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவு 140 ரூபாவும் வருகைக்கான கொடுப்பவு 60 ரூபாவும் சாதுரியமாக கத்தரிக்கப்பட்டுவிட்டது.
சமூகப் பார்வை இல்லாத எதுவுமே சாதகமான விளைவுகளை உற்பவிக்கப் போவதில்லை. கூட்டு ஒப்பந்தம் எப்போதோ அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. தாம் வழங்கும் சந்தாப்பணம் சிலரின் சொகுசு வாழ்கைக்கு கரம் கொடுக்க தாம் சதா மனப்பாரத்தோடும் தாளா துயரத்தோடும் அல்லாடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டு ஒப்பந்தம் செய்யும் உரிமையை விட பலமான ஆயதம் தம்மிடம் இருக்கின்றது என்ற புரிதல் மலையகம் எங்கும் பரவலாக பற்றி வருகின்றது.
மலையத்துக்கு அரசியல் வேண்டும். அது மனித நேயமிக்க அரசியலாக அமைய வேண்டும். அரசியல் பாதையின் இலக்கு மக்களை பணயம் வைக்கும் பம்மாத்தாக இருக்க முடியாது. அந்த வகையில் கூட்டு ஒப்பந்த முறைமை சந்தர்ப்பவாத அரசியலுக்கும் தனி மனித அபிலாஷைகளுக்கும் உதவவும் கூடாது அப்பாவி பெருந்தோட்ட மக்களை மேலும் மேலும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட வும். சிந்திப்போம்.
No comments:
Post a Comment