கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை பாரிய வெற்றியாக சக கட்சிகளும் ஏனையவர்களும் கருதினாலும், என்னைப் பொறுத்தவரையில் நாம் முன்னெடுத்த சேவைகளுக்கு எமக்கான வாக்குகள் பல மடங்காக அதிகரி;த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
எனவே நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனைய கட்சிகள் மக்களுக்கு எதனையும் இதுவரை செய்யவில்லை. நாமோ எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கேற்ப பல மடங்கு சேவைகளை செய்திருக்கின்றோம். அதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். நாம் முன்னெடுக்கும் சரியான திசைவழி நோக்கி மக்கள் அணிதிரண்டு வருவதற்குத் தயாராகி விட்டார்கள் என்பதை சமகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் பலம் என்பது மக்களுக்கான பலமாகவே அமையும். ஈ.பி.டி.பி யின் வெற்றி மக்களின் வெற்றியாக அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.
கேள்வி:- வடக்கின் ஓரிரு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்ததந்த சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஈ.பிடி.பி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனவா? அது குறித்து இணக்கப்பாடெதுவும் எட்டப்பட்டதா?
பதில் :- இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பற்றற்ற வகையான பேச்சு வார்த்தைகளே தொடர்கின்றன. இந்த நிலையில் முடிவுகளாக எவையும் எடுக்கப்படவில்லை. சக கட்சிகளுக்கு அரசியல் அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தேவையான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதானது ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்’ என்ற கதையாகவே இருக்கப் போகின்றது.
கேள்வி :- அதிதீவிரம் பேசும் சக்திகளுக்கான ஆதரவு, நடந்து முடிந்த உள்ளராட்சிசபைத் தேர்தல்களில் வடக்கில், பெருமளவு அதிகரித்திருப்பது எதனை காட்டுகிறது? மீண்டும் இவ்வாறான ஆதரவு வடக்கில் அதிகரித்ததிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- தீவிரமோ, அதிதீவிரமோ எதை பேசினாலும் அது போலித்தனமானதாகும். எந்தத் தரப்பு அவ்வாறு பேசினாலும் அது எமது மக்களை அழிவுக்குள்ளும், அவலங்களுக்குமே தள்ளிவிடுமே தவிர எமது மக்களை பாதுகாப்பதற்காகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு கௌரவமான தீர்வை பெற்றுத்தரவோ உதவாது. இதுவே கடந்த காலத்திலும் நடந்து முடிந்துள்ளது.
தீவிரமோ அதிதீவிரவாதமோ பேசி உணர்ச்சியூட்டுவது வாக்குகளை அபகரிக்கவே தவிர, மக்களுக்கு சேவை செய்வதற்கல்ல. இந்த பிற்போக்குத்தனத்தை தமிழ் தலைவர்கள் என்று கூறப்படும் சேர்.பொன் இராமநாதன், தொடக்கம் ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், பின்னர் பிரபாகரன் இப்போது சம்பந்தன் வரை. நீங்கள் குறிப்பிட்டது போன்று தீவிரத்தையும், அதிதீவிரத்தையும் பேசி மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கவும், அழிவுக்குள் தள்ளிவிடவுமே முனைந்திருக்கிறார்களே தவிர தாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்களால் மக்களுக்கு வென்று கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தாம் முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த தலைவர்களிடத்திலேயே இருக்கவில்லை. அதற்காக அவர்கள் நடைமுறைச் சாத்தியமான தன்மையுடன் உழைக்கவில்லை. அதை வென்றெடுக்கும் பொறிமுறையை ஏற்படுத்த அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவது அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாலோ, அவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்ல. 15 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட வழிமுறையிலும், 30 வருடத்திற்கு மேலான தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வழிமுறையூடாகவும் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் இருந்தே இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன்.
எமது மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அது வென்றெடுக்கப்படாமல் இருப்பதற்கு தனியே இலங்கை அரசையோ, இந்திய அரசையோ மட்டும் தவறென்று கூறிவிட முடியாது. தமிழ் தலைமைகள் என்றிருந்தவர்களின் அணுகுமுறை தவறுகளும், சுயலாப அரசியல் போக்குகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
கேள்வி:- புதிய அமைச்சரவையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபட்டன. 2015ம் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன?
கடந்த காலங்களில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கொடுத்து எமது மக்களின் பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்து நொறுங்கி கிடந்த எமது தாயக பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றேன். உட்கட்டமைப்புக்களை கடுமையான முயற்சிகளால் மீள் கட்டமைப்பு செய்திருக்கின்றேன். ஒரு இயல்பான சூழலில் எமது மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நேரகாலம் பாராது கடுமையாக உழைத்திருக்கின்றேன். நான் செய்ததைப் போன்று எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் மக்கள் சேவைகள் செய்தது கிடையாது. ஆனாலும் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நானறிவேன். ஒருவேளை ஆட்சியில் நான் தொடர்ந்து இருந்திருந்தால் மிச்ச பணிகளையும் செய்து முடித்திருப்பேன். வேலை வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுக்கவும் உழைத்திருப்பேன்.
யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுகளுடனும் இணக்க அரசியல் நடத்தி என்னால் இவ்வளவு செய்து முடிக்க முடிந்தது. யுத்தத்துக்கு முகம் கொடுக்காத இந்த அரசிடமிருந்து இன்னும் அதிகமான பலாபலன்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இவ்வாறான எனது சேவைகைளை எதிர்பார்த்திருக்கும் மக்கள் நான் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாலும், அவ்வாறு எதிர்பார்ப்பதாலும் தென்னிலங்கையில் அரசியல் பரபரப்பு தலைதூக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி;லும் எனக்கும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற விருப்பத்தை முன்வைக்கிறார்கள்.. அதவே அடிக்கடி நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ள போவதாக செய்திகளாக வெளிவருகின்றன என நினைக்கின்றேன்
கேள்வி:- உள்ளுராட்சித் தேர்தல்களையடுத்து தெற்கில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை, வடக்கின் அரசியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதா?
பதில் :- தெற்கில் இனவாத முன்னெடுப்புக்கள் தலைதூக்கி இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் தலைதூக்கிய அதாவது நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத போக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கே ஒருமித்து வெளிப்பட்டிருக்கும் தன்மையானது வட இலங்கையில் இரண்டாக பிரிந்து காணப்படுகின்றது.
தெற்காக இருந்தாலும்,வடக்காக இருந்தாலும் இனவாதமோ, தீவிரவாதமோ வாக்குகளை அபகரிக்க உதவலாமே தவிர மக்களுக்கு பயன்தரக்கூடியதாக ஒருபோதும் மாறப்போவதில்லை.
(11-03-2018 அன்று தினகரன் வாரமஞ்சரிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாமனந்தா வழங்கிய செவ்வி)
தினகரன்- வாசுகி சிவக்குமார்
No comments:
Post a Comment