Tuesday, July 11, 2017

பெருந்தோட்டங்கள் தனியாருக்கு விற்பனை: “கடுமையாக எதிர்ப்போம்

இலாபமீட்டும் அரச பெருந்தோட்டங்களை, தனியாருக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக, கடுயைமான எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்” என்று, இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க (லங்கா வத்து சேவா சங்கம்) தெரிவித்தார்.
இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் புதியத் தலைவராகத் தெரிவான சத்துர சமரசிங்க, மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திக் கூட்டுத் தாபனம்,(ஜனவசம) மற்றும் எல்கடுவ பிளான்டேசன் முதலான பெருந்தோட்டங்கள் பலவற்றை, தனியாருக்கு வழங்க, அரச பொருளாதார முகாமைத்துவ குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்காக, பல மட்டங்களிலும் எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.
“97 வருடங்கள் பழைமையான எமது சங்கம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. எனவே, எமது அமைப்பானது தொழிற் திணைக்களத்தைவிடவும் பழைமையானது. எமது சங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டதால், எமது அங்கத்தவர்களது நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு தீர்மானங்களை எடுக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது.
“பெருந்தோட்டங்களில், தொழிலாளர் நலன் கருத்திற்கொள்ளப்படுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக, சரியான கணக்குப் பதிவுகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, சேவையிலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், வெற்றுக் கையுடன் தமது இறுதிக் காலத்துக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
நன்றி- தமிழ் மிரர்

No comments: