Thursday, August 11, 2016

தொழிலாளர் பிரச்சினையில் ஒருமித்த கொள்கையே அவசியம்

மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின உரிமைகளை பெற போராடும்போது ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டுமென அஸீஸ் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விவகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும். ஆனால் கடந்த 2015 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் அது நிறைவடைந்து அடுத்த இரண்டாண்டுக்கான புதிய ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. 

இதற்கான காரணம் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமையே. தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கொள்கைகளை பற்றி சிந்திக்காமல் தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் ஒருமித் கொள்கையுடன் செயற்பட்டால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் கம்பனிகள், தொழிலாளர்களை ஏமாற்றாத வகையில் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும்.. அத்தோடு இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கேற்ப அமைய வேண்டும். 

இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எல்லா தொழிலாளர்களுக்கும் இது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரச பெருந்தோட்ட நிர்வாகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த விடயத்திலும் கூட்டுத் தொழிற்சங்கங்கள் உரிய கவனம செலுத்த வேண்டும். மலையகச் சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க சமூகத்தின் ஒற்றுமையிலே இது தங்கியுள்ளது என்றார். 

No comments: