Friday, May 13, 2016

ரூ.2,500 இம்முறையும் இல்லை

அரசாங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், 2,500 ரூபாயை பெற்றுத்தருவதாகவும் அது இம்மாத சம்பளத்துடன் இணைத்துகொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டப்போதிலும் அத்தொகையானது இம்மாத சம்பள பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரிச்சுமை காரணமாக தாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,   'ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியில்; அங்கம்வகிக்கும் மலையக தலைவர்கள் 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் இதற்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இணக்கம் தெரிவித்ததாகவும் கூறினர். அவர்கள் இதனைக் கூறி இன்று 5 மாதங்களாகிவிட்டன. ஆனால், தொழிலாளர்களின் சம்பளப் பட்டியலில் அந்த 2,500 ரூபாய் இதுவரை சேர்கப்படவில்லை' என மேலும் கூறினர். '

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பங்குக்கு 1,000 ரூபாயை பெற்று கொடுப்பதாக கூறியது. அந்த 1,000 ரூபாயும் இதுவரை கிடைக்கவில்லை. உலக சந்தையில் தேயிலையின் விலை குறைந்ததால்தான் சம்பள பேச்சு இழுத்தடிக்கப்படுவதாக ஒருசாரார் கூறுகின்றனர். இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒவ்வொருதரப்பினரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர். ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். எனவே, மலையக தலைமைகள்  அறிக்கை அரசியலை விடுத்து  தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்க முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 

No comments: