திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவு திகதி இம்மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வயதெல்லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தவறியவர்களும் வயதெல்லை பிரச்சினைக்குரியவர்களும் இவ்வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவருமாகிய அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுமார் 7000 திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவிருக்கும் இவ்வேளையில் மலையகத்தில் படித்த இளைஞர், யுவதிகளை அதிகளவில் உள்வாங்கப்பட வேண்டுமென்ற இலக்கோடு தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்பட்டு வருகின்றது. எமது கூட்டணியின் தலைவரும், அமைச்சருமாகிய மனோகணேசன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவையிலும் அதிக அழுத்தத்தை பிரயோகிக்கவுள்ளார். தற்போது இந்நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவாரணத்தின் பயனாளிகளாக உள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மிகவறுமை கோட்டிற்கு கீழுள்ள மலையக மக்களோ இதில் மூவாயிரத்திற்கும் குறைவானவர்களாகவே பயனாளிகளாகவுள்ளனர். எனவே திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்சமூகத்திலிருந்து அதிகளவில் நியமனம் பெரும் பட்சத்தில் சமுர்த்தி நிவாரணத்தை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் உணர்த்துவதற்கு இந்நியமனம் ஏதுவாக அமையும். கீழ் கண்ட தகமைகளை உடையவர்கள் தவறாது விண்ணப்பிக்க வேண்டும்.
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தமிழ், கணிதம் அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். க.பொ.த உயர்தர பரீட்சையில் 1 பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல் வேண்டும். வயதெல்லை:- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்டணம் :- ரூபா 500/– (திவிநெகும சமுர்த்தி வங்கியில் செலுத்தலாம்)
மேற்படி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை பதிவாளர் ஸ்ரீ ஜெயவர்தன விஷ்வ வித்தியாலயம், கங்கொடவில, நுகேகொட என்ற விலாசத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் கடிதவுறையின் இடதுபக்க மேல் மூலையில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்பிட்டு 19.02.2016ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்பதாகவோ கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அட்டன் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மாவட்ட காரியாலயங்களிலும் மலையக மக்கள் முன்னணியின் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment