இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக ஹட்டனில் தொழிலாளர்கள் ஒன்று கூடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
17-11-2016ல் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 ரூபா நிபந்தனை இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைத்து பேரணியொன்றையும் நடத்தினர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் இ.தொ. கா தலைவர் முத்து சிவலிங்கம் , பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் தங்களால் முன் வைக்கப்பட்ட கண்டனம் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் இரு வருடங்களுக்கொரு தடவை தொழிற்சங்கங்களுக்கும் தோட்டநிர்வாகங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தான் நிர்ணயம் செய்கின்றது.
இறுதியாக 18 மாத கால இழுபறியின் பின்னர் கடந்த மாதம் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளம் - 500 ரூபா, உற்பத்தித் திறன் கொடுப்பனவு - 140 ரூபா உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் அடங்கலாக நாளொன்றுக்கு ரூபா 730 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் அக்டோபர் 15ம் திகதி தொடக்கம் நாளொன்றுக்கு 110 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற முடியும் எனத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்களினால் அவ்வேளைத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.
வழமைக்கு மாறாக நாளொன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் எனத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்த்தில் எந்தவொரு இடத்திலும் நாளொன்றுக்கு 18 - 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை இ.தொ கா கூறுகின்றது.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்து நிறையத் தோட்ட நிர்வாகங்களும் தோட்ட தலைவர்களும் பேசியே தீர்மானிக்க வேண்டும் என்று தான் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுகின்றார் இ.தொ கா தலைவரான முத்து சிவலிங்கம்.
தோட்ட நிர்வாகங்களின் இந்தச் செயல்பாடானது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவிக்கின்றார் ;
கடந்த காலங்களிலும் 18 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டதாக தொழிலாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஏற்கனவே 610 ரூபா சம்பளத்தை பெற்று வந்த தங்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தம் மூலம் 730 ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 590 ரூபா தான் கிடைத்துள்ளதாகத் தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நன்றி- பி.பி.சி
No comments:
Post a Comment