Wednesday, July 8, 2015

கோரிக்கையை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை தோட்ட கம்பனிகள் தட்டிக்கழிக்க முற்படுவது நியாயமற்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாயை அதிகரித்து 650 ரூபாவாகவும் தேயிலை இறப்பர் விலை உயர்வுக்கேற்ப 30 ரூபாயும் வரவுத்தொகையாக 250 ரூபாயும் மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 35 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்தன.
தொழிலாளர்களின் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை நியாயமானது. தேயிலை, இறப்பரின்; விலை குறைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது பொருத்தமானதல்ல என தோட்ட நிர்வாகங்கள் கூறுவதில் எவ்வித நியாயமுமில்லை.
தோட்டத் தொழிற்துறையில் தேயிலை, இறப்பர் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதும் அதிகரிப்பதும் சாதாரணவொரு விடயமாகும். இது நிரந்தரமானதல்ல. கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை சுமார் 20 வருடங்களாக தொடரப்பட்டு வருகின்றது. இக்காலப் பகுதியில் தேயிலையின் விலை உயர்ந்தும் உற்பத்தி அதிகரித்தும் பாரிய அளவில் இலாபம் ஈட்டிய சந்தர்ப்பங்களும் அதேவேளை தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்து வந்துள்ளன. ஆனால், இரண்டு வருடங்களுக்கொருமுறை தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டே வந்துள்ளது. இன்று தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாகவும் வித்தியாசமான முறையிலும் நடந்து கொள்வது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சூழ்நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தே எமது பிரச்சினையை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்றார் இராமநாதன்.
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வழங்குகையில் தோட்ட தொழிலாளிக்கு 1000 ரூபாவை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

No comments: