Sunday, January 19, 2014

தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக செயற்படுகின்றனர்: சதாசிவம்

ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்மொழிகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் அவ்விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை துரும்பாக உபயோகித்து ஒரு சிலர் அரசியல் இலாபம் பெறுகின்றனர். அந்நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனக் கோரி அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது மலையக மக்கள் தனியொரு தேசிய சிறுபான்மை இனமென்றும் அம்மக்களுக்கென தனியான கலாசாரம் பொருளாதார கட்டமைப்பு என்பன உண்டு என தொடர்ந்தேர்ச்சியாக குரல்கொடுக்கப்படுகின்ற போதும் அவர்களின் வாழ்வாதாரம் பரிதாபகரமானதாகவே உள்ளது.

இவர்களால் இலங்கை அரசு பொருளாதாரத்தில் பல நன்மைகள் அடைந்துள்ள போதிலும் இம்மக்களின் வாழ்வாதாரம் அன்றும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. இம்மக்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் பொருளாதார ரீதியில் இலங்கையை உலகத்திற்கு உயர்த்தியது.

இந்நிலையில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்புக்குள் முழுமையாக இவர்களை செல்ல விடாது ஒருசில தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களை அடகு வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் பேரம் பேசும் சக்தி எனும் மாயையை மக்களிடம் புகுத்தி பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் தமக்கும் தாம் சார்ந்தோருக்கும் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் தன்மையை அடிப்படையகாகக் கொண்டு இவர்களது இன அடையாளத்தை கருத்தில் கொண்டும் இம்மக்கள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கும் பொருளாதாரத் தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்து கண்மூடித்தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழ்கின்ற மக்களை தொடர்மாடி என்று கூறி மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்வது இம்மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களின் நன்றிக் கடனாகாது.

மாடி வீடு என்ற மாயையில் ஒரு லயன் அறைக்கு மேல் மேலும் ஒரு லயன் அறையை கட்டிக்கொடுத்து இம்மக்களை அவமானப்படுத்தியது போதும். ஜனாதிபதி நீட்டும் வீட்டுத்திட்ட நேசக்கரத்துக்கு மலையகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் நலன் விரும்பிகளும் ஆரோக்கியமான வீட்டுத் திட்டமொன்றை அமைக்க வேண்டும். இவ்வீட்டுத்திட்டமானது மலையக புவிசரிதவியலுக்கு ஏற்ப சகல வசதிகளையும் கொண்ட தனிவீடாக அமைவதே பொருத்தம். ஆகவே இது விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments: