எமது சமூகத்தினர் தம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என்று அடையாளப்படுத்த தவறுவதன் விளைவே மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கு தடையாக உள்ளது.
இந்திய தமிழர்,
மலையக தமிழர் என்று எமது இன அடையாளத்தினை வெளிப்படுத்த
வெட்கப்பட்டுக் கொண்டு இலங்கை தமிழர் என்று பலரும் தம்மை பதிந்து
கொள்ளுகின்றனர். இதன் விளைவு இன புள்ளி விபரவியலில் மலையக இந்திய
வம்சாவளியினரின் இனப்பரம்பல் குறைவதோடு அது நாம் உரிமைகளையும்
சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கு பெருந்தடையாக உள்ளது. இந்த
விளைவே மலையக பல்கலைக்கழகம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கும்
தடையாகவுள்ளது.
மலையகத்தில்
பல்கலைக்கழகம் ஒன்று அமைவதன் அவசியப்பாடு தொடர்பில் 15
வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் பேசி வருகின்றோம். அமரர்களான
சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் சந்திர சேகரன் ஆகியோர் இது தொடர்பில்
அதிகமான அக்கறை செலுத்தினார்கள். அமரர் சந்திரசேகரன் இது
தொடர்பில் எம்முடன் அதிகளவில் கலந்துரையாடினார். அவரது காலத்தில்
எப்படியாவது ஒரு பல்கலையை பெற்று விடலாம் என்ற எமது எண்ணம் அவரது
மரணத்தோடு நின்று போனது.
ஆயினும் தொடர்ந்து இது
தொடர்பில் பல முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம். இதற்கு பல்வேறு
விமர்சனங்களை நாம் சந்திக்க வேண்டியிருந்தது.
நாம் இன்று மீண்டும்
இவ்விடயத்தில் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மலையகத்தில்
பல்கலைக்கழகம் ஒன்றின் தேவை தொடர்பில் கலந்துரையாடுகின்றோம்.
எமக்கு பல்கலைக்கழகம் ஒன்று தேவை என்று மட்டும் தான் தற்போது
கேட்கின்றோம்.
இன்று இலங்கையில்
மாகாண, பிராந்தியத்திலும் உத்தியோகபூர்வம் இன்றி இன
அடையாளத்தோடும் பல பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. ஆனால்
மலையகத்தினை இந்திய வம்சாவளியினரினை பிரதிபலிக்கும்
அவர்களது கலை கலாசாரங்களை உள்ளடக்குகின்ற எந்த
பல்கலைக்கழகமும் இல்லை.
யாழ்.
பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு
பல்கலைக்கழகம் என்று அனைத்தும் அப் பிராந்தியத்தினையும்
உத்தியோகபூர்வமின்றி ஓர் இனத்தினையும் பிரதி
நிதித்துவப்படுத்துவதாகவே உள்ளன. ஆனால், மலையகத்தில் உள்ள
பேராதனை பல்கலைக்கழகத்தில் எமது இன ரீதியான அடையாளத்தினை
வெளிப்படுத்துவதாக இல்லை. அத்தோடு இலங்கையில் எந்த
பல்கலைக்கழகத்திலும் மலையகத்தின் கலை கலாசாரங்களை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எந்த துறையோ பிரிவோ இல்லை. இது
வேதனையான விடயம்.
15 இலட்சம்
சனத்தொகையினை கொண்ட மலையக தமிழர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்
பெற்றுக்கொள்ள கூடிய தகுதியுள்ளது. நாம் எம்மை இந்திய வம்சாவளி
தமிழர், மலையக தமிழர் என்று பதிந்து கொண்டோமானால் எமது சனத்தொகை
பரம்பல் புள்ளி விபரவியலில் அதிகரிக்கும். இல்லையென்றால் நாம்
இலங்கை தமிழர்கள் என்ற பிரிவிற்குள் உள்ளடங்கி விடுவோம். இவ்வாறான
நிலை உருவாகும் பட்சத்தில் ஏற்கனவே இலங்கையில் இலங்கை தமிழருக்கு
என்று யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் என்பன உள்ளன.
எனவே, இன்னொன்று தேவை இல்லை என்று எமக்கான பல்கலைக்கழகத்தினை
பெற்றுக்கொள்ள முடியாது போகும் நிலை உருவாகும்.
எனவே, இலங்கை தமிழர்
என்று பதியாமல் இந்திய மலையக தமிழர் என்று பதிந்து கொள்ளுங்கள். இதன்
மூலமே பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
பல்கலைக்கழகம்
ஒன்று அமையும் பட்சத்தில் அதற்கு என்று 100 கோடி ரூபா நிதி
ஒதுக்கப்படும். இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறும்.
அத்தோடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், மலையகத்தில் மலையக
பல்கலைக்கழகம் இல்லாமையினால் எமக்கு இந்த நிதி கிடைப்பதில்லை.
உயர்கல்வி
அமைச்சினால் 4000 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. ஆனால்,
இதிலிருந்து ஒரு சதத்தினை கூட எமது சமூகத்தினால் அனுபவிக்க
முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பல்கலைக்கழகம் ஒன்று எமக்கென்று
இல்லாமையே. சிலர் மலையகத்தில் சப்ரகமுவ, பேராதனை
பல்கலைக்கழகங்கள் உள்ளதென கூறுகின்றனர். ஆனால், அவற்றில் எம்மால்
ஒரு தமிழ் நூலினையேனும் வெளியிட முடியுமா? அங்கு எமது அடையாளம் இல்லை.
இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்.
பல்கலைக்கழகத்துடன் இணைந்து இராமநாதன் இசை கல்லூரி உள்ளது. அது
போலவே விபுலானந்த இசை கல்லூரி என்று கலைப்பிரிவு கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் உள்ளது. இதனை போல கொழும்பில் நாம் எமது இன கலை
கலாசார அடையாளத்தினை வெளிப்படுத்துகின்ற ஒரு பிரிவை உருவாக்க
முடியுமா? முடியாது. அதற்கு அனுமதி கிடைக்காது. விடமாட்டார்கள்.
தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தினை அமரர் அஷ்ரப் உருவாக்கினார். அதன் மூலமே
முஸ்லிம்களின் வரலாற்றின் மைல்கல்லான ஒலுவில் பிரகடனம்
முன்வைக்கப்பட்டது. அதேபோல் தமிழர் விடுதலை போராட்டத்தில்
வடகிழக்கு பல்கலைக்கழகங்களின் பங்கு அளப்பரியது. ஆனால், இது
போன்ற ஓர் இன உறுதிப்பாட்டுக்கு அடையாளத்தினை, சமூக உணர்வுகளை
சமூகத்தினை மலையகத்தில் கட்டியெழுப்புவதற்கு இயலாமல் உள்ளது.
பல்கலைக்கழகம் ஒன்று அங்கு அமைக்கப்படும் போது அது தேசிய ரீதியிலும்
எமது இனத்திற்கு உறுதுணையாக அமையும்.
பல்கலைக்கழகம் ஓர்
இனத்தின் பிரதேசத்தின் கலை கலாசார வளர்ச்சிக்கு உதவுகின்றது.
இஸ்லாமிய கற்கைக்கான போதனா பீடம் ஒலுவில் பல்கலைக்கழகத்தில்
உள்ளது. அங்கு ஒரு தமிழர் உபவேந்தராக முடியாது. அதேபோல் யாழ்.
பல்கலைக்கழகத்திற்கு சிங்களவர் ஒருவர் பீடாதிபதியாக முடியாது.
இதன் மூலம் இனப்பிரதேசம் என்பதில் பல்கலைக்கழகத்தின் செல்வாக்கு
புரிகிறது.
15 இலட்சம் இந்திய
வம்சாவளி தமிழர்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களது இன, பிரதேச
அடையாளமாக ஒரு பல்கலைக்கழகத்தினை பெற்றுக்கொள்வது
நியாயமானது. இது தொடர்பில் அமைச்சர் டிலான் பெரேராவிடம் ஏற்கனவே ஒரு
முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் இதற்கு உதவி அளிப்பதாகவும்
தெரிவித்தார். ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை.
இந்த நாட்டிற்கு 1830
இல் வந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்த நாட்டின்
பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக தம்மை அர்ப்பணித்து அழிந்து
போயுள்ளனர். அதற்கு சன்மானமாக ஒன்றரை நூற்றாண்டாக இந்த நாட்டிற்கு
செய்த சேவைக்காக 15 கோடி ரூபாயினை நாட்டிற்கு வருமானமாக பெற்றுக்
கொடுக்கின்றனர். இதற்கு வெகுமதியாக ஒரு பல்கலைக்கழகத்தை
தாருங்கள் என்றே கேட்கின்றோம்.
இந்த
பல்கலைக்கழகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒரு பயிற்சி நெறியை
உருவாக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு டிப்ளோமோ நெறி உருவாக்கி கல்வி
பயிற்றுவிக்க வேண்டும். தொழிற் பயிற்சி வழங்க வேண்டும் என்பது எனது
குறிக்கோளில் ஒன்றாக உள்ளது. இது நிச்சயம் நிறைவேற வேண்டும்.
எங்களால் இப்படி ஒரு
பல்கலைக்கழகம் எமது சமூகத்திற்கு வேண்டும் என்று குரல் கொடுக்க
முடியுமே ஒழிய அதனை நேரடியாக பெற்றுக்கொடுக்க கூடிய இயலுமை
எம்மிடம் இல்லை. அது அரசியல் தலைமைகளுக்கே உள்ளது. இலங்கை
வரலாற்றில் பல பல்கலைக்கழகங்கள் குறித்த பிரதேசத்தின் அரசியல்
தலைமைகளின் அழுத்தங்கள் காரணமாக பெற்றுக் கொள்ளப்பட்டமையை நாம்
அவதானிக்க முடிகிறது. அது போன்ற ஒரு நடவடிக்கையை மலையகத்திலும்
எடுக்க வேண்டும்.
அமரர் தொண்டமான் இது
தொடர்பில் ஆர்வமாக இருந்ததோடு அமரர் சந்திரசேகரன் ஹட்டன் நகரில்
இவ்வாறான ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை
துடிப்புடன் எம்முடன் இணைந்து முன்னெடுத்தார். ஆனால் தற்போது அதற்கான
எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.
1942 இல் இலங்கையில்
ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் முதல் முதலில் உருவாக்கப்பட்டது. இன்று
15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட எமக்கான தனித்துவ
பண்புகளை உள்ளடக்கியதாக இல்லை. ஆரம்பத்தில் பொன்னம்பலம்
இராமநாதன் போன்ற தலைவர்கள் வெள்ளைக்காரர்களிடம் எமக்கொரு
பல்கலைக்கழகம் வேண்டும் என்று கேட்ட போது அது உங்களுக்கு எதற்கு
தேவையற்றதென்ற ஒரு கருத்தையே அவர்கள் கொண்டிருந்தனர். அதுபோன்ற
கருத்தே இன்றும் அரசியல் தலைமைகளிடம் நிலவுகின்றது.
நாம்
பல்கலைக்கழகம் ஒன்றினை கேட்பதற்கான தகுதி அற்றவர்களாக 19, 20
ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம். இது 21 ஆம் நூற்றாண்டு இப்போது
இதனை கேட்கும் தகுதி எம்மிடம் உள்ளது. மலையகத்தில் படிப்பது குறைவு.
படிப்பறிவு இல்லை. படிக்காதவர்கள் எதற்கு பல்கலைக்கழகம் என்று
இவர்கள் கேட்கின்றனர். உண்மையில் இதற்கொரு உதாரணம் கூறுகின்றேன். KFC
உருவாக்கும்போது இப்படி சன கூட்டம் நிறைந்து வழியும் என்று
எதிர்பார்த்தா உருவாக்கியிருப்பார்கள்.
இல்லையே கட்டடம்
உருவாக்கப்பட்டது. சனம் நிறைந்தது. அது போல பல்கலைக்கழகம் ஒன்று
உருவாக்கப்பட்டால் அந்த கட்டடத்தை பார்த்தாலாவது இதில் நாமும்
கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படிக்காதவனும் கூட படிக்க
ஆரம்பிக்கலாம்.
முதலில் ஒரு கட்டடம்
இடம் அமைந்தாலே போதுமானது. யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் இத்தனை
கட்டடங்களோடு உருவாகவில்லை. யாழ். பரமேஸ்வரா கல்லூரிதான்
பெயர்பலகை மாற்றப்பட்டதும் யாழ். பல்கலைக்கழகமாக மாறியது. அது
போலவே வந்தாறுமூலை மத்திய பாடசாலையே கிழக்கு பல்கலைக்கழகமாக
மாறியது. இது போல ஒரு பழைய தேயிலை தொழிற்சாலையையேனும்
பல்கலைக்கழகமாக மாற்றலாம். முதலில் பெயர்பலகை ஒன்று
மாட்டினாலேயே போதும். ஏனையவை தானாக அமையும்.
யார் பீடாதிபதி?
யார் உபவேந்தர்? என்றெல்லாம் பேசாதீர்கள். முதலில் இடம் கட்டடம் என்ற
ஒன்றே தேவை. அதனை அரசியல் தலைமைகள் பெற்றுக் கொடுத்தால் போதும்
பல்கலைக்கழகம் எவ்வாறு அமைய வேண்டும், அங்கு இருக்க வேண்டிய கற்கை
நெறிகள் எவை, பாடவிதானங்கள், துறைசார் கல்வி என்று அனைத்தும் பற்றிய
செயற்றிட்ட கோப்புகள் என்னிடம் உள்ளன. 15 கோப்புகள் இது தொடர்பில்
தயாரித்து வைத்துள்ளேன். பல்கலைக்கழகம் அமைக்காவிடினும் கூட எமது
கனவு பல்கலைக்கழகத்தின் செயற்றிட்ட கோப்பு புதிய நூற்றாண்டில் ஒரு
பல்கலைக்கழகம் என்ற பெயரில் நூல்வடிவமாக விரைவில் வெளி வரும்.
நிச்சயமாக இதனை வெளியிடுவேன். நூல் வடிவிலேனும் அது என்னால்
வெளிவரட்டும்.
மலையகத்தில் 15
இலட்சம் மலையக தமிழர்கள் வாழுகின்றனர். இவர்களில் 53 வீதமானவர்கள்
நுவரெலியா மாவட்டத்திலேயே வாழுகின்றனர். அவ்வாறெனில்
நுவரெலியாவில் பெரும்பான்மை சமூகமாக தமிழர்களே உள்ளனர்.
தமிழர்கள் அதிகமாக பெரும்பான்மையினராக வாழும் நுவரெலியாவில்
இவ்வாறான பல்கலைக்கழகம் அமைவது மிகவும் சாத்தியமானது.
மலேசியாவில் கூட 7–-8
வீதமாக வாழும் தமிழர்கள். அங்கு உயர் கல்வியை தமிழில் கற்க முடியாது. அங்கு
இந்திய ஆய்வு என்ற ஒரு கற்கை பிரிவு உள்ளது. ஆனால் உலகில் அதிகமாக
உயர்கல்வியை தமிழில் கற்கின்ற நாடு இலங்கைதான். கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர்
இலங்கையில் தமிழ் மொழியிலே உயர்கல்வியை கற்கின்றனர். இந்த நிலை
இந்தியாவில் கூட இல்லை. ஆனால் தகுதிகள் இல்லாமல் போய்விடும் என்று
பல்கலைக்கழகம் அமைவதற்கு சிலர் தடைக்கற்களை போடுகின்றனர். ஆனால்,
இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் காரணங்கள் அல்ல.
மலையக சமூகமும் ஒரு
தேசிய இனமே. நாம் எமக்கான கலை கலாசார விழுமியங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு
பல்கலைக்கழகத்தினை எமது பிரதேசத்தில் உருவாக்குவதற்கான
பெற்றுக்கொள்ளுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களே. இதில் எமது
அரசியல் தலைமைகள் பிடிப்பாக இருந்தால் அமரர் அஷ்ரப் ஒலுவில்
பல்கலைக்கழகத்தினை தன் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்தது போல எமது அரசியல்
தலைமைகளும் ஒரு பல்கலைக்கழகத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கு எமது அரசியல்
தலைமைகள் முயற்சி எடுப்பார்கள் ஆயின் அதற்கு தேவையான துறைசார் ஆலோசனைகள்
அனைத்தினையும் வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பேராசிரியர் சோ.
சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment