Thursday, January 2, 2014
எப்போது எங்களுக்காக கதைக்கப் போகின்றீர்கள் ?
தேர்தல் காலங்களில் மட்டும் சிரித்த முகத்தோடு எம்மை தேடி வரும் பிரதிநிதிகளுக்கு
கல்வி, சுகாதரம், விளையாட்டு, போக்குரத்துதொழில் குடியிருப்பு என சகல அம்சங்களிலும் பின்தங்கியிருக்கும் எங்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்க வேண்டிய இடத்தில் நீங்கள் எவருமே கதைக்கவில்லை என்பதை அறிந்து மிகவும் மனவேதனை அடைகிறோம். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பேரில் ஐந்து பேர் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றீர்கள். இதில் ஒருவர் அமைச்சர் மற்றுமொருவர் பிரதி அமைச்சர். வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஏதோ ஒரு வழியில் தமது மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்கின்ற போது நீங்கள் ஏன் அந்த அமர்வுகளுக்கே செல்வதில்லை என்பது எமக்கு புரியவில்லை. இது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது மலையக சமூகத்திற்கு செய்யும் பெருந்துரோகம் என்பதை அறிவீர்களா?
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் மலையக மக்களின் மேற்கூறிய பிரச்சினைகள் பற்றி எவருமே மறந்து கூட வாய்திறக்கவில்லையே? இந்த விவாதங்கள் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் மலையக மக்களோடு சம்பந்தப்பட்ட அமைச்சு விவாதங்களில் முக்கியமானதாக விளங்கும் கல்வி அமைச்சு குறித்த விவாதங்களில் நீங்கள் எவருமே கலந்து கொள்ளவேயில்லை எனும் போது மலையக கல்வி தொடர்பில் நீங்கள் வைத்திருக்கும் அக்கறை எமக்கு நன்றாக விளங்குகிறது. உங்களுக்கு தெரியாவிட்டாலும் இந்த மாதத்தில் திகதி வாரியாக இடம்பெற்ற குழுநிலை விவாதங்களையும் அதில் நீங்கள் ஒன்றில் கூட நீங்கள் பேசவில்லை என்பதையும் இங்கு தர கடமைப்பட்டுள்ளேன்.
1) 2 ஆம் திகதி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு பற்றிய விவாதம் இடம்பெற்றது. மலையக பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலை வளப்பற்றாக்குறை இடைவிலகல்கள் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியை தொடர்வதில் உள்ள இடர்கள் என கல்வித்துறையில் காணப்படும் பல பிரச்சினைகள் பற்றி கதைக்க தவறி விட்டீர்கள்.
2) 7 ஆம் திகதி சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது. மலையகத்திலிருந்தே அதிக சிறுவர்கள் இன்று தலைநகரில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றும் அவர்கள் நீண்ட காலமாக உயிராபத்தையும் துஷ்பிரயோகத்தையும் சந்தித்து வருகின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியாததல்ல. பெருந்தோட்டப்பெண்களின் கட்டாய கருத்தடை பிரச்சினைகள் வேலைத்தளத்தில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் என எவ்வளவோ உள்ளதே அதைப்பற்றியும் நீங்கள் எவரும் கதைக்கவில்லை.
3) 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு நலனோம்புகை குறித்த அமைச்சு விவாதம் இடம்பெற்றது. பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்று பிணங்களாக திரும்பிய பெண்களை மறந்து விட்டீர்களா? மலையக இளைஞர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வெளிநாட்டு தொழில் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குக்கிடையாதா? போலி முகவர்களால் மலையக இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவது குறித்தும் வெளிநாட்டில் தாய் பணியாற்றும் போது தந்தை அல்லது உறவினர்களுடன் இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் நினைத்துப்பார்த்தீர்களா? இதற்கும் மௌனம் தான் உங்கள் பதிலாக இருந்தது.
4) 11 ஆம் திகதி இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது. இன்று மலையக இளைஞர்களைப்பொறுத்தவரை தோட்டப்புறங்களில் அல்லது தலைநகரங்களிலேயே அதிகமோனோர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியப்பணிகளில் உள்ளீர்த்துக்கொண்டவர்களின் தொகை போதாது. வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் பற்றிய உங்கள் தொலைநோக்குப்பார்வை என்ன? இதை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே?
5) 13 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கான விவாதம் இடம்பெற்றது. மலையகத்தில் எத்தனைப்பகுதிகளில் முறையான போக்குவரத்து சேவைகள் இல்லை என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் இகாரணம் அத்தனை இடங்களுக்கும் தேர்தல் காலத்தில் உங்கள் பிராடோ மோன்டரோ ரக வாகனங்கள் பயணித்திருக்கின்றன. பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சிசுசரிய பஸ் சேவைகள் மலையகத்தின் எந்த பகுதிக்கும் அமுல்படுத்தப்படவில்லை என்பது சரி உங்களுக்குத்தெரியுமா? அது குறித்தும் எவரும் கதைக்கவில்லை.
6) அதே 13 ஆம் திகதி சுகாதார அமைச்சு மீதான விவாதமும் இடம்பெற்றது. மலையகத்தில் நிலவும் மந்த போசனை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த வருடத்தில் மட்டும் நுவரெலியா மாவட்டத்தில் 19 கர்ப்பிணித் தாய்மார்கள் மரமடைந்துள்ளமை உங்களுக்குத்தெரியுமா? டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவி வரும் உள்ளக பிரச்சினைகள் நாள்தோறும் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. அதை பார்த்தும் பாராதது போல் காலத்தை கடத்துகின்றீர்களே? சிசு மரண வீதம்இ சுகாதார சீர்கேடுகள் குறித்து சபையின் கவனத்திற்குக்கொண்டு வந்திருக்கலாமே?
7) 14 ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது. தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்ற தகுதியிருந்தும் மலையக இளைஞர் யுவதிகளுக்கு உரிய ஊக்குவிப்பு இன்மையால் பிரகாசிக்க முடியாதது குறித்து பேசியிருக்கலாம் ஏனெனில் விளையாட்டுத்துறை அமைச்சரும் மலையக நகரான நாவலப்பிட்டியை சேர்ந்தவர் தானே ? தோட்டப்பகுதிகளில் உரிய மைதானம் இல்லாமை இருக்கும் மைதானங்கள் பராமரிக்கப்படாமல் இருக்கின்றமை குறித்தும் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் உங்களில் பலர் இந்த விவாதத்திற்கு சமூகம் அளித்திருக்கவே இல்லை.
8) 14 ஆம் திகதியன்றே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் தொடர்பான அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது. இது மிகவும் முக்கியமானதாகும். உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் தோட்டப்புறங்களுக்கு சேவைகளை வழங்க முடியாத நிலை இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தை மலையக பிரதிநிதிகளான நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்.
மேற்குறிப்பிட்ட அமைச்சுகளின் விவாதம் தொடர்பில் நீங்கள் எவருமே வாய்திறக்காத விடயத்தை சில ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அதை வாசித்து விட்டு உங்களால் எந்த அறிக்கையையும் விட முடியவில்லை. ஆனால் 18 ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தின் போது ஊடகங்களில் வெளிவந்த செய்தியை முன்னிலைப்படுத்தி உங்களில் சிலர் கதைத்தீர்கள். அது கண் குருடான பின்பு சூரிய வணக்கத்திற்கு தயாரானதற்கு சமன்.
இப்போது எம்மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி இது தான். மேற்குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளும் இருந்தும் குறிப்பிட்ட அமைச்சு மீதான விவாதத்தில் நீங்கள் கதைக்காமலிருந்ததற்குக் காரணம் இந்த பிரச்சினைகள் வெளிப்பட்டால் உங்களுக்கு பிரச்சினை வந்து விடும் என்றா அல்லது இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இத்தனை வருடங்களாக இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டிருக்கிறீர்களே என யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களே என்ற அச்சமா?
நீங்கள் இவ்வாறு வாய்மூடி மௌனிகளாக இருப்பதால் மலையக மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என ஏனையோரும் ஏன் அரசாங்கமும் கூட நினைக்க வாய்ப்புள்ளதே ? சபை விவாதத்தில் கதைக்காமல் ஜனாதிபதியுடன் தனியே சென்று கதைப்பதில் என்ன பிரயோசனம் உண்டு? நீங்கள் என்ன கதைத்தீர்கள் என்பது யாருக்குத்தெரியும்? பாராளுமன்றத்தில் கதைத்தால் தானே அனைவருக்கும் தெரியும்? அடுத்த வருடம் இடம்பெறும் முக்கிய விவாதங்களில் சரி கதைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த மக்கள். இந்த வருடம் நீங்கள் கதைக்காமலிருந்ததற்கு ஏதாவது காரணங்கள் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாமே.
இப்படிக்கு உங்களுக்கு
வாக்களித்தவர்களில் ஒருவன்
(நன்றி சூரியகாந்தி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment