அமரர் பெ. சந்திரசேகரனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.அருள்சாமி
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் சந்தனம் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக 08-01-2010 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையின் 13(ஆ)பிரிவின் கீழ், மறைந்த சந்திரசேகரன் பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அதன் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அருள்சாமி.
அருள்சாமி ம.ம.முன்னணியின் நிர்வாகச் செயலாளராகவும் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவர். 2004 ஆம் ஆண்டு முன்னணியிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டு, மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வியமைச்சராகப் பதவியேற்றவர்.
தற்போது தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராகவும் ஜனாதிபதி ஆலோசகர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment