Saturday, January 2, 2010

மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள் - தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.


மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார்.

மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் தீர்வு காணப்தற்கு பாடுபட்டவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது சகாக்களுடன்ஃ இணைந்து இடையறாது குரல் கொடுத்து வந்தவர்.


ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையொன்று மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அதற்கான பங்களிப்பை வழங்கியவர். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அதற்கு அனுசரணையாக இருந்த நிபுணர் குழுவின் முன்னிலையிலும் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்தவர்.

துமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயங்களை சர்வதேச அரங்கிலும் குறிப்பாக இந்திய தமிழக முதல்வர், தலைவர்களை சந்தித்து எடுத்துரைத்தவர்.

திரு. பெ. சந்திரசேகரன் அவர்களின் மறைவு இலங்கையின் அரசியல் வானிலும் மலையக மக்களின் அரசியல் அரங்கிலும் பாரிய வெற்றிடமொன்றை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் சகல சமூகங்களும் சமத்துவமாக ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற எழிலார்ந்த கனவுடன் வாழ்ந்தவர்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்களுக்காக ஐக்கியமாகவும், நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டுமென்று தனது இறுதி மூச்சுவரை வலியுறுத்தியவர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் தலைமை வகித்த மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.



தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

No comments: